தொடர்கள்
கவர் ஸ்டோரி
வெற்றிக் கூட்டணி -சந்திராயன் 3 -மரியா சிவானந்தம்

20230725175512514.jpg

எத்தனை அற்புதமான தருணம் இது !

உலகமே உறங்கிக் கொண்டு இருக்கும் போது நள்ளிரவு நேரத்தில் இந்தியா விழித்துக் கொண்டிருந்தது." என்று ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை நம் நினைவுக்கு வருகிறது. விதியுடன் ஒரு புதிய உடன்படிக்கை செய்துக் கொண்டோம் என்ற அந்த கவித்துவம் நிறைந்த உரை இப்போது நெஞ்சில் நிழலாடுகிறது .அதே உணர்வை நாம் இப்போது அனுபவிக்கிறோம் இந்தியா விடுதலை வாழ்வைத் தரிசித்த அந்த இரவின் மகிழ்ச்சியை, பரவசத்தை மீண்டும் ஒருமுறை இந்திய மக்கள் அனைவரும் இப்போது அனுபவித்தோம்.

பொன் கிடைத்தாலும் ,கிடைக்காத இந்த புதன் 23/08/2023 அன்று இந்திய வரலாற்றில் ஒரு நிசமான பொன்னாள். அமெரிக்காவும், ரஷ்யாவும், சீனாவும் விண்வெளியில் வல்லரசுகளாக வலம் வரும் காலத்தில் இந்தியா தன் விண்வெளி ஆய்வின் ஒரு புதிய மைல்கல்லை நாட்டியுள்ளது. இந்தியாவின் சந்திராயன்3 விண்கலத்தை நிலவின் பரப்பில் 'மெல்ல' இறங்கிட வல்லரசுகளின் வரிசையில் நம் நாடு இடம் பிடித்துள்ளது. இன்று உலக மக்கள் அனைவரும் புருவத்தை உயர்த்தி இந்தியாவை வியப்புடன் உற்று நோக்குகிறார்கள். நம்முடன் கை குலுக்க சினேகமுடன் நூறாயிரம் கைகள் நீள்கின்றன. .

இந்தியாவின் இந்த வெற்றிக்குப் பின் இஸ்ரோ அறிவியல் அறிஞர்களின் நல்ல கூட்டணி உள்ளது . விண்வெளி பற்றிய சிறந்த அறிவும், ஆற்றலும், உழைப்பும் கொண்ட கூட்டணி இது. எந்நாட்டவர்க்கும் குறைவில்லா அர்ப்பணிப்பு, தொழிற் நுட்ப அறிவு, கட்டுக்கோப்பான ஒத்துழைப்பு, குழு ஒருங்கிணைப்பு என்று வெற்றிக்குத் தேவையான அத்தனையும் கொண்டது இந்த கூட்டணி . நடுவண் அரசின் ஒத்துழைப்பு, பிரதமர் தந்த உற்சாகம், முறையான நிதி ஒதுக்கிடு எல்லாமே இந்த திட்டம் வெற்றி பெற உறுதுணையாக இருந்தது ,

திரை மறைவில் இருந்து இந்த திட்டத்துக்கு வழி நடத்தியவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் . இஸ்ரோ தலைவர் எஸ் .சோமநாத் . இந்த விண்வெளி பயணத்தின் மூளையாக செயல்பட்டு வழி நடத்தியவர் . ககன்யான் .ஆதித்யா L 1போன்ற திட்டங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் சோம்நாத் விக்ரம் சாராபாய் விண்வெளி கழகத்தின் இயக்குனராக இருந்தவர் . ரோவர் லேண்டர் சந்திரனில் இறங்கிய போது. "India is on the moon" என்று உற்சாக குரலெழுப்பினார் சோம்நாத். 1969 ஆம் ஆண்டு நிலவில் கால் வைத்த போது One small step for man, one giant leap for mankind என்று நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சொன்ன சரித்திர புகழ் மிக்க வாக்கியம் தந்த மகிழ்ச்சிக்கு சற்றும் குறைவில்லாத மகிழ்ச்சியை தரும் சொற்றொடர் இது.

20230725175601340.jpg

சந்திராயன்3 விண்வெளிப் பயணத்தின் முதுகெலும்பாக இருந்து ,முழு உழைப்பையும் தந்தவர் வீரமுத்துவேல். நம் தமிழகத்தைச் சேர்ந்தவர் . விழுப்புரத்தில் ரயில்வே துறையில் பணி புரிந்து ஒய்வு பழனிவேலுவின் மகன். விழுப்புரம் ரயில்வே பள்ளியில் உயர்நிலைக் கல்வி பெற்ற பின் DME எனப்படும் டிப்ளமோ படிப்பை படித்தார். அப்போது பொறியியலில் ஆர்வம் ஏற்பட்டு, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்தார். முதுகலை பொறியியல் படித்தது ஆர்இசி திருச்சி . அதிக ஆர்வத்துடன் படித்ததால் தேர்வுகளில் முதல் இரண்டு இடங்களைத் தக்க வைத்துக் கொண்டார் .

2023072517563824.jpg

கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக கோவை லக்‌ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்தார் வீரமுத்துவேல். விண்வெளி ஆராய்ச்சி மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட் பெங்களூருவில் டிசைன் விங் இன்ஜினியராக பணியில் அமர்ந்தார் .அங்கு ஹெலிகாப்டர் டிவிஷன் எனப்படும் ரோட்டரி விங் டிசைன் அண்ட் ரிசர்ச் சென்டரில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது.அதன் பின் அவரது கனவு பணித்தளமான இஸ்ரோவில் சேர்ந்தார் .

இஸ்ரோ அவரது கனவுகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்தது முதலில் திட்ட பொறியாளர் (Project Engineer) திட்ட மேலாளர் (Project Manager) போன்ற பதவிகளில் செம்மையாக பணியாற்றினார் . மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் உள்பட பல ரிமோட் சென்ஸிங் அண்ட் சயின்டிஃபிக் சாட்டிலைட் மிஷன்களில் தனது பங்களிப்பை நிறைவாக செய்தார் .

விண்வெளி ஆராய்ச்சியில் குறையாத ஆர்வம் காரணமாக சென்னை ஐஐடியில் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்து Vibration separation of Electronic package in satellitesஎன்ற தலைப்பில் நவீன ஆராய்ச்சியை மேற் கொண்டார் அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் சர்வதேச புகழ்பெற்ற இதழ்களில் பிரசுரமாகின. பல சர்வதேச அறிவியல் அரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தார் . விரைவில் முனைவர் பட்டம் பெற்றார் ..

அதன்பின் இஸ்ரோவின் முதல் நானோ சாட்டிலைட் குழுவை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பு முத்துவேலு அவர்களுக்கு கிடைத்தது. அதன்பின்னர் மூன்று நானோ சாட்டிலைட்டுகளை விண்ணில் ஏவினார் . சந்திரயான்-2 திட்டத்தின் உதவி திட்ட இயக்குநர் பொறுப்பில் இருந்தவருக்கு. சந்திரயான்-3 திட்டத்தில் திட்ட இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

தனது பணியைச் சரியாக திட்டமிட்டு , சந்திரயான்-3 குழுவினை வழி நடத்தி, எல்லா சிக்கல்களையும் ,தொழிற்நுட்ப சவாலையும் எதிர்கொண்டு , சரியான தீர்வுகளை அளித்து ரோவர் லேண்டரை soft landing முறையில் நிலவில் மேற்பரப்பில் தரை இறக்கினார் . ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாள் முழுவதும் உணர்ச்சிப் பெருக்குடன் , நினைவில் வைக்க கூடிய தருணத்தை அளித்தார் .

ஒரு தமிழனாக நாம் அவரைக் கொண்டாடினாலும் , தான் ஒரு இந்தியனாக பெருமை கொள்வதாக அவர் கூறுவது அவரது விரிந்த மனதையும் , இந்த பாரத மண்ணின் மேல் வைத்த நேசத்தையும் குறிக்கிறது.

இந்த சந்திராயன் 3 விண்வெளி ஆரய்ச்சிக் குழுவில் துணை திட்ட இயக்குனர் கே .கல்பனா , மிஷன் இயக்குனர் எஸ் . மோகன் குமார் ,விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் உன்னிகிருஷ்ணன நாயர் , எம்.சங்கரன் ,இயக்குனர் (U R Rao Satellite Centre ,URSC) என்.ராஜாராம் தலைவர் (Launch Authorisation Board (LAB) போன்ற விஞ்ஞானிகளின் பங்களிப்பும் போற்றுதலுக்கு உரியது .

20230725180631554.jpg

20230725180438726.jpg

20230725180355744.jpg

இஸ்ரோவில் பெண் விஞ்ஞானிகளின் பணியும் ,திறமைகளும் எல்லோராலும் புகழப்படுகிறது. .சந்திராயன்2 வனிதா முத்தையா திட்ட இயக்குனராக பொறுப்பேற்ற போது உடன் மிஷன் இயக்குனராக இருந்தவர் ரித்து கரித்தால். அப்போது முக்கிய பொறுப்பில் 20% மேல் பெண் விஞ்ஞானிகள் பணியாற்றினார். சந்திராயன்3 விண்வெளி பயண திட்டத்தில் 54 பெண் விஞ்ஞானிகள் முக்கிய பொறுப்புகளில் இருந்து சிறந்த பணியாற்றி இருக்கிறார்கள் .

2023072517581086.jpg

இந்த வெற்றிக் கூட்டணியில், இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி எஸ் .என் .எல் கை கோர்த்துக் கொள்கிறது . 300 Mbps மற்றும் 100 Mbps உள்ளிட்ட Leased line Circuits வழியாக பி எஸ் .என் .எல் நிறுவனம் , தடை இல்லாத இணைப்பை வழங்கி இருக்கிறது .பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இங்கே இருக்கும் போது ,அரசு நிறுவனமான பி எஸ்.என் .எல் லுக்கு இந்த வாய்ப்பை இஸ்ரோ வழங்கி இருப்பது பெருமைக்குரிய செய்தி .

20230725175937247.jpg

ரோவர் லேண்டர் கலம் தன் இயக்கத்தைத் தொடங்கி விட்டது . ரோவரில் உள்ள ராம்பா ,இல்சா ,சாஸ்டே போன்ற ஆய்வுக்கருவிகள் இயங்கத் தொடங்கி உள்ளன .அவை நிலவின் மேற்பரப்பு வெப்பம் ,நிலஅதிர்வுகள் ,அயனி கூறுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் .அனைத்து கருவிகளும் திட்டமிட்டபடி சீராக செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது .