தொடர்கள்
கவர் ஸ்டோரி
கைலாஷ் புனிதப் பயணம் - 7 கடினமான டோல்மாலா பாஸ் !! இறுதி வாரம் - ராம்

20230726014229390.jpeg

கைலாய மலை அனுபவத்தை இரண்டு வாரங்களுக்கு மேல் எழுத என்ன இருக்கிறது என்று யோசித்தேன். ஏனெனில் பாதி பயணம் சாலைகளில் கழிந்தது. மீதம் மலையேற்றத்தில் கழிந்தன.

இருந்தும் ஏழாவது வாரம் வரை கைலை பயணம் தொடர்ந்ததில் அந்த நினைவுகளோடு மூழ்கியதில் மகிழ்ச்சி தான்.

சென்ற வாரம் ஈசனடி பயணம் முடித்து இரவு வந்து துவைத்துப் போட்டது போல் படுத்து உறங்கி அடுத்த நாள் காலை கடினமான டோல்மாலா பாஸ் செல்ல எழுந்து விட்டோம்.

சுமார் எட்டே முக்காலுக்கு விடுதியில் இருந்து நடக்கத் துவங்கினோம்...

டோல்மாலா பாஸ் மலையுச்சி ஐயாயிரத்து அறுநூறு மீட்டருக்கு மேல்.

மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கும்.

குதிரை வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் மேலே வரை செல்லலாம் என்றார்கள். சங்கீதாவால் உடம்பு கொஞ்சமும் முடியவில்லை. அவரே வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

20230726014459425.jpeg

ஆக அனைவரும் மலையேறித்தான் ஆக வேண்டும்.

வழியில் ஒரு விடுதியைப் பார்த்ததும் சுடச் சுட டீ குடித்தது அமிர்தம் போல இருந்தது.

அந்த சமயத்தில் பனி மழை பொழிந்து கொண்டிருந்தது.

அடிமேல் அடி வைத்து ஆனால் ஒரே சீராக ஏறினேன். யாருக்கும் காத்திருக்கவில்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேகத்தில் அல்லது இடைவெளியில் ஏறுவது தான் சரியாக வரும்.

அனைவரும் கூட்டமாக நடப்பதில் சிக்கல் தான்.

முதலில் தாஷியுடன் டோல்மாலா பாஸ் மலையுச்சியில் ஏறிய அரை மணியில் பேராசிரியரும் சங்கீதாவும் வந்து விட்டனர்.

டோல்மாலா பாஸ் உச்சியில் சுற்றிப் பார்த்தால் பனி மலைகள். அந்தக் குளிரில், லேசாக பெய்த பனிமழையில் ஒரு வீடியோ எடுக்கும் போது கால் சறுக்கி விழுந்ததையும் தாஷி பதிவு செய்தார். நல்ல வேளையாக அடி படவில்லை.

கைலாய மலைகள் சூழ்ந்த அந்தக் காட்சி......

அந்தக் காட்சியை வார்த்தையால் வர்ணிக்க முடியாது என்பதால் தான் இங்கே கீழே வீடியோவாக வலையேற்றியிருக்கிறோம்.

ஈஷா குழுவினர் பரிக்கிரமா வந்தால் திராபுக்கிலிருந்து திரும்பச் சென்று விடுவார்களாம். ஏனென்றால் சிவனை சுற்றக் கூடாது என்ற காரணத்தால்.

ஒவ்வொருவர் மனதைப் பொறுத்தது அது.

நாங்களுமே டோல்மாலா பாஸ் ஏறி அங்கிருந்து இறங்கும் வழியில் கெளரி குண்ட் என்று சொல்லப்படும் குளத்தை மேலிருந்து தரிசித்து விட்டு ஜுதுல் புக் என்ற இடம் வரை நடந்து செல்ல வேண்டும்.

20230726014408252.jpeg

ஆனால் டோல்மாலா பாஸ் இறங்கி சிறிது தூரத்திலேயே இன்னொரு விடுதி இருக்கிறது. அங்கிருந்து ஜீப் வரவழைத்து சென்று விட்டோம்.

இறங்கும் போதே மாலை ஆகி விட்டது. மழை வேறு வலுவாக இருந்தது.

ஜீப்பில் தார்ச்சன் செல்வது தான் சிறந்த வழி என்று முடிவு செய்து ஜீப் ஏறி விட்டோம்.

சிலருக்கு முழுதாக பரிக்கிரமா முடிக்கவில்லை என்று வருத்தம்.

என்னைப் பொறுத்தவரை ஈசனடி சென்று தரிசித்ததே பெரிய விஷயமாக நினைக்கிறேன்.

வரும் வழியில் எங்களுடன். ஈசனடி வந்த சியூயுவான் எங்களுக்கு முன் ஜுதுல்புக் சென்று விட்டார்.

அங்கு ஒரு நிமிடம் நிறுத்தி விடைபெற்றுக் கொண்டோம்.

20230726014343897.jpeg

நேரே தார்ச்சன் சென்று விடுதியில் சேர்ந்ததும் தான் கைலாய பயணம் நிறைவேறி முடிந்தது.

இந்த கட்டத்தில் பலருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் என்னை புன்முறுவலுடன் கைலாய பயணம் செல்ல அனுமதித்த என் மனைவிக்கு. குடும்பத்தினருக்கு.

2023072601374021.jpeg

20230726013759424.jpeg

20230726013821404.jpeg

மற்றும் சிவனடியார் விஜயகுமார், பாஷு அதிகாரி, பசாங், தாஷி, ஓட்டுனர் பசாங் இவர்களெல்லாம் இல்லாமல் இந்தப் பயணம் இனிதாக முடிந்திருக்க வாய்ப்பேயில்லை.

20230726013840741.jpeg

கைலாய பயணத்திற்கு முக்கிய டிப்ஸ்.

ஏராள துணிமணிகள், உணவுப் பொருட்கள் அள்ளிக் கட்டிக் கொண்டு போகாதீர்கள். அங்கு சாப்பிடவே வழியில்லை.

பயணம் இனிதாக இருக்க நாம் தூக்கிச் செல்லும் சுமை எளிதாக இருப்பது மிக மிக அவசியம். குளிர் காலத்திற்கு தேவையான விஷயங்கள் லாசாவிலேயே கிடைக்கிறது. (எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைப் பொறுத்து)

கொஞ்சம் கொஞ்சமாக உயரத்திற்கு பழக வேண்டும். சடுதியில் வந்து விட்டு சடுதியில் திருப்பதி தரிசனம் போல இங்கே ஆகாது. சில நாட்கள் பழக வேண்டும் உயரத்திற்கு.

மற்ற படி திபத் ஒரு பாதுகப்பான இடம் தான். பழகுவதற்கு இனிமையான மக்கள் தான்.

இந்த கைலாய பயணம் பற்றிய அனுபவங்களை குழுவினர் இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் சியூயுவானையும் விட்டு வைக்கவில்லை. படு பிசியாக பனிச்சறுக்கு, கயாக்கிங் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த அவரை பிடித்தும் பேட்டி வாங்கியாகி விட்டது.

இத்தனை சுதந்திரமாக விட்டிருக்கிறார்களே சீன பெற்றோர்களும் இந்திய பெற்றோர்கள் போலத்தானே எப்படி என்று கேட்ட போது, சியூ சொன்னார். அட, அவர்கள் ஏதாவது திட்டிக் கொண்டும் கத்திக் கொண்டும் தான் இருப்பார்கள். நான் அதை காது கொடுத்து கேட்பதேயில்லை. அலட்டிக் கொள்வதேயில்லை என்றார்.

அவரது ஆங்கிலப் பேட்டியில் கவர்ந்த இன்னொரு விஷயம் இத்தனை தனியாக சுற்றும் போது பயமாக இல்லையா என்றால், இதுவரை ஆண்டவன் எனக்கு நல்லவர்களையே அடையாளம் காட்டியிருக்கிறான் என்றார்.

இனி காணொளி இங்கே........

கைலாய பயணக் கட்டுரை அந்தப் பயணம் போலவே அவனருளாலே அவன் தாள் பணிந்து இனிதே நிறைவடைந்தது.

தென்னாடுடைய சிவனே போற்றி. !!

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !!