தொடர்கள்
பொது
வாழ்வின் விளிம்பில் 17 நாட்கள் -மரியா சிவானந்தம்

2023103014252390.jpg

"ஹப்பாடா' என்று உலகமே நிம்மதி பெருமூச்சு விடுகிறது !

பதைபதைக்கும் உள்ளத்துடன், கவலையும் கண்ணீருமாக கடந்த 17 நாட்களாக உத்தரகாசியின் சுரங்க வாயிலில் கண் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மக்களின் வயிற்றில் பால் வார்த்தது போல அங்கு சிக்கி கொண்டிருந்த 41 சுரங்கத் தொழிலாளர்கள் இப்போது பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்

ஒளி தீபங்கள் சுடர் விடும் தீபாவளி திருநாளின் அதிகாலை இருளாக விடிந்தது உத்தரகண்டின் உத்தரகாசிக்கு. அந்த இடத்தில் இருந்து யமுனோத்திரி செல்ல 106 கி.மீ பயணம் செய்ய வேண்டும் . இந்த தூரத்தை 26 கி.மீ ஆக குறைக்கும் முயற்சியில் திலக்யரா முதல் பர்கோட் இடையே 4.5கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு இருந்தது. சுரங்கத் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்த போது அன்று அதிகாலையில் மண் சரிவு ஏற்பட்டு ,தொழிலாளர் சுரங்கத்தில் சிக்கி கொண்டனர்.

20231030142600875.jpg

சுமார் 60 மீட்டர் தூரத்துக்கு மண் மூடியது. உள்பகுதியில் 1.5 கி.மீ தூரத்துக்கு மண் சரிவு ஏற்படாததால் .தொழிலாளர்கள் அங்கு எவ்வித சேதமும் இன்றி பத்திரமாக இருந்தனர். இந்த திடீர் விபத்தில் இந்தியா அதிர்ந்தாலும், மீட்புப் பணிகள் அரசினால் முடுக்கி விடப்பட்டது. உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டேராடூனில் இருந்து பறந்து வந்து சுரங்கவாயிலில் தன் கேம்ப் அலுவலகத்தை அமைத்துக் கொண்டார் . தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் பன்னாட்டு சுரங்க நிபுணர் குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட , இதோ 17 நாட்கள் , 408 மணி நேரத்துக்குப் பின் சுரங்கத் தொழிலாளர்கள் எவ்வித ஆபத்தும் இன்றி மீட்கப்பட்டு உள்ளனர் .

20231030142645182.jpg

முதலில் ஜேசிபி இயந்திரத்தால் மண் சரிவை அகற்ற முயற்சி செய்யப்பட்டது . தொடர்ந்த மண் சரிவு, அந்த முயற்சியை கை விட செய்தது. ராட்சத துளையிடும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, மண்குவியலின் பக்கவாட்டில் துளையிட தொடங்கின. கடினமான மலைப் பகுதி என்பதால் இயந்திரங்கள் பழுதாகின . அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் ஓரளவு வெற்றிகரமாக இயங்கி 47 மீட்டர் தூரத்துக்கு இரும்பு குழாய்களைப் பொருத்தியது . அதன் பின்னர் அதுவும் பழுதானது .

20231030142723636.jpg

தமிழகத்தின் பரணி ஜியோ டெக் நிறுவனம் 6 அங்குல விட்டம் கொண்ட குழாயை தொழிலாளர்கள் இருந்த இடம் வரைப் பொருத்தி சாதனை செய்தனர் . அதுவரை சிறிய குழாய்கள் வழியாக உலர் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது , இந்த புதிய குழாய்கள் வழியே சேமித்த உணவு , மருந்து எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டு , தொழிலாளர் பாதுகாக்கப்பட்டனர் .

இவர்களது மீட்பு மேலும் தாமதமாகப்படும் என்று கணித்த நேரத்தில் , மலைப் பகுதியில் எலி வளை போல குடைந்து ( Rat Hole Mining ) சிறிய சுரங்கம் தோண்டுவதில் அனுபவம் உள்ள 24 சுரங்கத் தொழிலாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆகர் இயந்திரம் பொருத்திய இரும்புக்குழாயின் பாதையில் இந்த தொழிலாளர்கள் மூன்று ,மூன்று பேராக சென்றனர் .ஒருவர் சிறிய இயந்திரத்தால் சுரங்கத்தைத் தோண்ட , மற்ற இருவர் மண் குவியலை அப்பறப்படுத்தி , டிராலியில் நிரப்ப , வெளியில் இருந்த தொழிலாளர் அதை இழுத்து மண்ணை அப்புறப்படுத்தினர். இந்த மூவரும் களைப்புற்ற போது அடுத்த மூவர் உள்ளே சென்று இதே போல தொடர்ந்தனர் .இந்த தொடர் முயற்சியால், 21 மணி நேரத்தில் 13 மீட்டர் நீளத்துக்கு இரும்புக்குழாய்கள் பொருத்தப்பட்டது .

20231030142800626.jpg

இக்குழாய்கள் வழியாக தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 15 வீரர்கள் தவழ்ந்துச் சென்று , தொழிலாளர்கள் சிக்கி இருந்த இடத்தைச் சென்று அடைந்தனர் . முழு ஆரோக்கியத்துடன் இருந்த வீரர்கள் முதல் முதலாக வெயியேறினர் .சோர்வாக இருந் தொழிலாளர்கள் ட்ராலியில் படுக்க வைக்கப்பட்டு , கயிற்றில் கட்டி மீட்கப்பட்டனர் . 41 பேரும் தனி ஆம்புலன்ஸில் 'சைனாலிசார்' அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர் .

திகில் நிறைந்த திருப்பங்கள், பரபரப்பான ஒரு நீண்ட திரில்லர் திரைப்படம் சுபமாக முடிந்த உணர்வு எல்லோருக்கும் ஏற்படுகிறது . 'வாழ்வா ,சாவா? என்று மன உளைச்சலுக்கும் ,உடல் துன்பத்துக்கும் ஆளான தோழர்கள் மீண்டது இந்தியரை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தி உள்ளது. மத்திய , மாநில அரசு மற்றும் பொதுத்துறைகள் முழு மூச்சுடன் செயல்பட்டும். இயந்திரங்களைக் கவனமாக கையாண்டும் மீட்பு பணியை சிறப்புற செய்துள்ளனர்.

இயந்திரங்கள் பயன் படாத நேரத்தில் இயற்கை கை கொடுப்பது போல மனித சக்தி துணை நின்றது .சிறிய உருவம் கொண்ட எலிவளை சுரங்கத் தொழிலாளர்களின் கூட்டு முயற்சியால் அனைவரும் எவ்வித சேதமும் இன்றி மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்த பி எஸ் என் எல் சிம்மில் சுரங்கத்தில் கிடைத்த சிக்னல், அவர்களை சுரங்கத்தில் இருந்து வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தர , ஒரு இமாலயச் சாதனையை அந்த 'எலி'ய தோழர்கள் நடத்திக் காட்டியுள்ளார்கள் . 41 குடும்பங்களில் விளக்கை அணையாமல் பாதுகாத்தார்கள்.

ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க , அனைவரும் கை கூப்பி நன்றி கூறுகிறோம் .இந்த சாதனையில் துணை நின்ற அனைவரையும் பாராட்டுகிறோம் . ஆஸ்திரேலியாவின் சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் , இந்த 'மனிதம் காக்கும் போராட்டத்தில் உறுதுணையாக 11 நாட்கள் சுரங்கவாயிலில் நின்றது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது .அவருக்கும் அவரைப் போல அங்கு காத்து கிடந்த , மீட்புப்பணியில் துணிவுடன் போராடிய அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிகின்றன .

இயந்திரங்களும் ,தொழிற்நுட்பங்களும் தோற்றாலும் மனிதம் வெல்லும்.

மனிதம் எந்நாளும் வெல்லும்.