தொடர்கள்
தொடர்கள்
சென்னை  மாதம்  -- பாகம்  111-ஆர் . ரங்கராஜ்

திருமங்கையாழ்வாரும் திருநீர்மலையும்

திருமங்கையாழ்வார் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குடியில் பிறந்தார். இவரது இயற்பெயர் கலியன் ஆகும்.

சோழமன்னரிடம் இவரது தந்தை படைத்தலைவராகப் பணியாற்றி வந்தார். திருமாலின் வில்லான சாரங்கத்தின் அம்சமாகக் கருதப் படும் இவ்வடியாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நீலன் ஆகும். உரிய பருவத்தில் தனது குலத்துக்குரிய வீரகலைகளில் பயிற்சி பெற்றார். வீரத்தின் நிலைகளனாக விளங்கிய நீலனைச் சோழ மன்னன் அவரது பிறந்த ஊரைச் சுற்றியுள்ள ஆலிநாடு என்ற திருமங்கை நாட்டின் குறுநில
மன்னனாக நியமித்தான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.

வானுலகத்திலிருந்து இவ்வுலகுக்கு வந்து, தாமரைப் பொய்கையில் நீராடிய தேவ மங்கையருள் ஒருத்தி பூவுலகில் வாழ விரும்பி மானுடவேடம் தரித்தாள். திருவெள்ளக்குளம் என்ற தலத்தில் வாழ்ந்து வந்த பிள்ளைப்பேறு அற்ற வைத்தியர் அவளுக்குக் குமுதவல்லி எனப்பெயரிட்டு வாஞ்சையுடன் வளர்த்து வந்தார்.

வைணவக் காதல்

குமுதவல்லியின் அழகு பற்றிக் கேள்வியுற்ற திருமங்கை மன்னன் அவளை மணம் செய்து கொள்ள விரும்பி செய்தி அனுப்பினான். பஞ்சசமஸ்காரங்கள் எனும் ஐந்து வகை வைணவச் சமயச் சடங்குகளை நடத்தி அனைவராலும் போற்றப்படும் பரமவைணவரையே தான் திருமணம் செய்து கொள்வதாகக் குமுதவல்லி உறுதியாக பதில் அனுப்பினாள். திருமங்கை மன்னன் உடனே திருநறையூர் எனும் திவ்விய தலம் சென்று அங்கு ஆலயத்தில் தொண்டாற்றி வந்த எம்பெருமாள் நம்பியை ஆசிரியராக ஏற்று பஞ்ச சமஸ்காரங்களையும் செய்விக்கச் செய்தார். இதற்குப் பின்னரும் குமுதவல்லி மற்றொரு நிபந்தனையை விதித்தாள். ஒரு வருட காலம் தினமும் 1008 ஸ்ரீவைணவர்களுக்கு உணவளித்துவிட்டு அவர்கள் உண்டதுபோக எஞ்சிய உணவை உண்டும் அவர்களது பாதத்தைக் கழுவிய நீரைப் பருகியும் விரதம் அனுஷ்டிக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை ஆகும். குமுதவல்லி மீது தீராக்காதல் கொண்ட திருமங்கை மன்னன் இதனையும் ஏற்று குமுதவல்லியைத் திருமணம் செய்து கொண்டான்.

வைணவ அடியார்களுக்கு உணவளித்ததால் திருமங்கை மன்னனுக்குப் பொருள் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சோழ அரசனுக்குத் திறை செலுத்த இயலவில்லை. திறை பெற்று வருமாறு அனுப்பப்பட்ட சேனாதிபதியையும் பின்னர் படைகளுடன் வந்த அரசனையும் 'ஆடல்மா' என்ற தனது குதிரை மீதேறிச் சென்ற திருமங்கை மன்னன் வெற்றிகொண்டான். சோழ் அரசனின் அமைச்சர் மாறுவேடம் பூண்டு திருமங்கை மன்னனை வஞ்சித்துச் சிறையிலடைத்தார். காஞ்சி பேரருளாளனான வரதராஜ பெருமாள் திருமங்கை மன்னன் கனவில் தோன்றி வேகவதி நதிக்கரையில் வேண்டிய நிதியிருப்பதாக வழிகாட்டினார். காஞ்சி பேரருளாளன் அருளால் பெற்ற பொருளைக் கொண்டு அரசனுக்குச் செலுத்தவேண்டிய திறையைச் செலுத்தினார். எஞ்சிய பொருளை வைத்துக் தனது கைங்கர்யத்தைத் தொடர்ந்தார். இச்செய்தி அறிந்த சோழ அரசன் திருமங்கை மன்னனுக்கு உரிய மரியாதையைச் செய்து திறைப் பணத்தை வைணவத் திருப்பணிகளுக்கே வழங்கினான்.

வைணவத் திருத்தொண்டில் தனது பொருள் அனைத்தையும் இழந்த திருமங்கை மன்னன் வறியவரானார்.

இருப்பினும் வழிப்பறி செய்து கிடைத்த பொருளால் தனது சேவையைத் தொடர்ந்தார். திருமங்கை மன்னனின் பெருமைகளை உலகுக்கு உணர்த்த இறைவன் விரும்பினார். தனது சகாக்களுடன் திருமங்கை மன்னன் பதுங்கியிருந்த திருமணங்கொல்லை என்ற பகுதி வழியாகப் புதுமணத் தம்பதியராகச்சகல புடை சூழ திருமாலும் திருமகளும் சென்றனர். செல்வம் கொழிக்கும் திருமணக் கூட்டத்தைத் திருமங்கை மன்னர் வளைத்துக் தொண்டு அனைத்துப் பொருள்களையும் பறித்து ஒரு மூட்டையாகக் கட்டினார். மணமகனின் காலிலிருந்த அணியைக் கழற்ற முடியாமல் பல்லால் கடித்தபோது அடியவரின் வலிமை கண்டு மெச்சிய திருமால் கலியனோ? (வலிமை மிக்கவன்) எனக் கூறினார். மூட்டையாகக் கட்டியிருந்த செல்வங்களை அசைக்க முடியவில்லை. மணமகன் ஏதோ மந்திர சக்தியால் அப்பொருட்களை நகராமல் இருக்கச் செய்துவிட்டதாக எண்ணிய திருமங்கை மன்னன் அம் மந்திரத்தைத் தன்னிடம் கூறுமாறு கேட்டுக் கொண்டார். திருமங்கை மன்னனை இரகசியமாக அழைத்துச் சென்று அவரது காதில் நாராயணனின் அஷ்டாக்ஷரமந்திரத்தை உபதேசித்தார். மந்திர உபதேசம் பெற்றவுடன் திருமங்கை மன்னன் 'வாடினேன்' எனத்துவங்கும் பாசுரங்களைப் பாடினார். உடனே பரமன் திருமகள் சமேதராகத் தனது திவ்ய வடிவத்தைக் காட்டி அருள் புரிந்தார். திருமங்கை மன்னன் அஞ்ஞானம் அகன்று திருமங்கை ஆழ்வாரானார்.

திருமாலின் விருப்பப்படியே திருமங்கை ஆழ்வார் அரசையும் உலகியலையும் துறந்து திருமால் எழுந்தருளியுள்ள திருத்தலங்களுக்கு யாத்திரையாகச் சென்றார். மொத்தம் 86 வைணவத் தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடினார். மொத்தம் 86 வைணவத் தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடினார்.

(தொடரும்)