தொடர்கள்
கதை
மரிக்கொழுந்து - சத்யபாமா ஒப்பிலி

20231101234302729.jpg

மனம் ஏன் இப்பொழுதெல்லாம் உரையாடலுக்காகவே அலைகிறது என்று புரியவில்லை. வர வர நிறைய பேசத் தோன்றுகிறது. தோன்றும்போது பேசுவதை கேட்க ஆட்கள் தான் இல்லை. கைபேசியில் செய்திக்கு பதில் வரவில்லை என்றால் குழப்பம், தான் தொந்தரவு செய்கிறோமோ என்ற பயம். ஏன் இந்த உலகத்தில் சிக்கிக்கொண்டோம் என்று தோன்றியது வானதிக்கு. இது மீளா கிணறு என்று புரிந்தும் ஏன் விழுகிறோம் என்று புரியவில்லை. பார்க்கும் பொழுது மட்டும் பேசிக்கொள்ளும் காலம் அருமையாகத்தான் இருந்தது. மிகவும் நெருக்கம் என்றால் கடிதம். இப்பொழுது உடனுக்குடன் பதில் வருவதால் எதிர்பார்ப்பும் அதிகமாகிறது. தான் தன் தோழி, தோழர்களுக்கு எழுதிய கடிதங்களை நினைத்துப் பார்த்தாள், கவிதையாய் சிலருக்கும், கதையாய் சிலருக்கும், எந்த முயற்சியும் எடுக்காமல், நேரில் பேசுவது போல் சிலருக்கும்... அழகான நாட்கள்.

யோசித்துக்கொண்டே பையில் இருந்த கை பேசியை எடுத்தாள். யாருக்கும் நேரம் இருப்பது போல தெரியவில்லை.

பேருந்தில் அவளருகில் யாரும் இல்லை.ஜன்னலோர பயணம் பிடிக்கும் அவளுக்கு. அதன் வழி கிடைக்கும் சில ஆச்சர்யங்கள், சில காட்சிகள் அவளின் நாட்களின் பாரத்தை முடிவு செய்யும். சில சமயம் கைபேசியின் மூலம் காதுக்குள் வழியும் இசை கூட பாரமாக இருக்கும். பல நேரங்களில்அந்த பேருந்தின் சத்தத்தையும் கடந்து ஜன்னல் கம்பிகளின் ஊடே உள்ள உலகத்தை இரைச்சல் இல்லாமல் அவளால் பார்க்கமுடியும்.
கைபேசியை ஆராய்ந்தாள். எந்த செய்தியும் வரவில்லை யாரிடமிருந்தும். தான் இப்படி எப்போதும் இருந்ததில்லை என்பதே அவளுக்கு இன்னும் கோவம் வந்தது. . எல்லாரோடும் நட்பு உண்டு, ஆனால் யாரிடமும் எதையும் எதிர்பார்த்தது கிடையாது. நட்பு என்பது களைத்துப்போய் வந்தால் இளைப்பாறும் ஆலமரமாக இருக்க வேண்டும் என்பது தான் அவளின் கோட்பாடாகவே இருந்தது. இன்று ஏன் மாறி விட்டோம். எல்லோரிடமும் எதை எதிர் பார்க்கிறோம்.ஜன்னல் வழியாக பார்க்கும் எல்லாமே அலுப்பாக இருந்தது. அவளின் அலுவலகத்திற்கு ஒரே வழி தான். கிட்ட தட்ட 20 வருடம் பிரயாணம். அலுத்ததே இல்லை. தன்னுள் எதையோ இழக்கிறோமோ என்று தோன்றியது. மறுபடியும் கைபேசியப் பார்த்தாள். யாரிடமிருந்தும் பதில் வரவில்லை.

பேருந்தில் அவளருகில் பூக் கூடையுடன் ஒரு பெண் வந்து அமர்ந்தாள். அவள் வரும் சமயம் அந்த பேருந்தில் சில பூ விப்பவர்கள் வருவதுண்டு. அதில் ஒரு வயதான பெண்மணி தான் எப்போதும் வானதி அருகில் வந்து அமர்வாள். தன் அருகில் வந்து அமர்ந்த அந்த பெண்ணிடம், வானதி, "இங்க ஒரு வயசானவங்க உக்காருவாங்க எப்போதும்" என்று கூறினாள் ." நான் அவங்க பேத்தி தான். பாட்டிக்கு உடம்பு சரி இல்லை." என்று ஒரு புன்னகையுடன் சொல்லிவிட்டு,

அக்கா, நான் அந்த பக்கம் ஒக்காரட்டுமா?" என்று கேட்டாள்.

வானதி பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தாள்.பதினைந்து பதினாறு வயதிருக்கும். இரட்டைப் பின்னல். நீளமான முடி. லேசான மாறுகண்.

யோசித்துக் கொன்டே , "எதுக்கு?"

"வேடிக்கை பாக்கத்தான்"

"வேடிக்கையா?"

ஆமா அக்கா. பஸ் போகும் போது வெளில ஒரு.. ஒரு... வேகம் இருக்கும் இல்ல அது ரொம்ப பிடிக்கும்.

"வேகமா? " ஜன்னல் ஒரே இருக்கையை விட்டுக்கொடுக்க வேண்டுமா என்று இன்னும் யோசனையில் தான் இருந்தாள்.

"ஆமங்கா, சரக் சரக் ன்னு எல்லாரும் பின்னாடி போவாங்களா அது பிடிக்கும்."
வானதி, சிரித்துக்கொண்டே* இந்த பஸ்ல எல்லாம் சரக் சரக் ன்னு போகமாடாங்க. கொஞ்சம் மெதுவாத்தானே போவாங்க"

"என்னவோக்கா! நீங்க இடம் தர மாட்டீங்க போல இருக்கு. நான் அங்க போறேன்" என்று எழுந்தாள்.
வானதி, வேகமாக,

" இரு, இரு, இங்க வந்து உக்காரு" .

தான் எழுந்து வெளியே வந்து, அந்தப் பெண் உள் நகர்ந்ததும், அருகில் அமர்ந்தாள்.

" உன் பேரென்ன" மடியிலிருக்கும் பூக்கூடையை ஒரு.கையில் பிடித்துக்கொண்டு, மறு கையில் பேருந்தின் ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டே, திரும்பாமல், " மரிகொழுந்து" என்றாள்.

வானதி, சிரித்துகொண்டே ," நல்லா இருக்கே என்றாள்". பின் தொடர்ந்து,

"சரி, நான் ஒன்னு சொல்றேன் கேக்கறயா? என்று இருக்கையில் தலையை சாய்த்து கண்ணை மூடிக்கொண்டே கேட்டாள்.

ஒரு மணி நேரம் பயணம். இன்னும் நாப்பது நிமிடம் இருக்கிறது. இன்று வேறு கண்ணால் வேடிக்கை பார்க்கலாமே என்று தோன்றியது.

" நான் கண்ண மூடிக்கிட்டு வருவேனாம். நீ வெளியில பாக்கறத என்கிட்ட சொல்லி கிட்டே வரணும்" என்றாள்.அந்தப் பெண்ணும் சந்தோஷமாக "சொல்றேன்கா" என்று சொல்லி ஜன்னலுடன் மேலும் ஒட்டிக்கொண்டாள்."

" ஒரு பையன் ஃபோன் பேசிகிட்டே. வண்டி ஒட்றான். அப்படி யாரோட தான் பேசுவார்களோ? அங்க யாரோ ரெண்டு பேரு சண்டை போட்டுக்கறாங்க, புருஷன் பொஞ்சாதியா இருக்கும். ஒரு அக்கா தண்ணி கொடத்த தூக்கிட்டு வருது. இன்னும் ரொம்ப தூரம் போகனும் போல. நாலு பேரு நடக்கறாங்க, நாலு பேரும் ஃபோன் பேசிகிட்டே நடக்கறாங்க. கஷ்டம், கீழ விழுந்தாத்தான் தெரியும். ஒரு சின்ன பையன் பையத்தூக்கிகிட்டு வேகமா நடக்கறான். பாவம் ஸ்கூலுக்கு நேரமாச்சு போல இருக்கு. யாரோ ஒரு அம்மா இந்த பஸ் பிடிக்க ஓடி வராங்க.இவரு தள்ளி தானே கொண்டு போய் நிறுத்துவாரு! "

இப்படியே அவளின் கற்பனையும் சேர்த்து சொல்லிக் கொண்டே போனாள். சிறிது நேரத்திற்கு பின்.
வானதிக்கு போதும் என்று தோன்றியது.

." சரி. இப்போ இன்னும் அடுத்த பத்து நிமிஷத்துக்கு யாராவது சிரிச்சுகிட்டு இருந்தா மட்டும் தான் சொல்லணும்" என்றாள்.

"சரிக்கா" என்றாள் மரிக்கொழுந்து.

அடுத்த ஒரு பத்து நிமிடத்துக்கு சத்தமே இல்லை. வானதியும் கண் திறக்கவில்லை.பேருந்து ஓரிடத்தில் நின்றது.

" அக்கா, அக்கா அங்க ஒருத்தரு உக்காந்துக்கிட்டு சிரிச்சுகிட்டு இருக்காரு.

"கையில ஃபோன் இருக்கா?" " இல்லக்கா!"


யாராவது பக்கத்துல உக்காந்திருக்காங்களா?"

" இல்லக்கா! எல்லாரும் அவர விட்டு தள்ளியே நிக்கறாங்க!"

" அதானே பாத்தேன்! தாடி வெச்சுகிட்டு இருக்காறா?"

"அமாம்! கொஞ்சம் பைத்தியம் மாதிரி.இருக்கார்." ரகசியாமாக சொன்னாள், மரிக்கொழுந்து.

"அவர விடு. அவர் பத்து வருஷமா இங்க தான் இப்படித்தான் சந்தோஷமா இருக்காரு"!

வேரயாராவது பாரு.

." நான் இறங்கனும் அக்கா. நாளைக்கு வந்து இந்த விளையாட்டை விளையாடலாம்" என்று சொல்லி விட்டு, பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றாள்.

வானதி தன் இடத்திலிருந்து நகர்ந்து ஜன்னலோரம் அமர்ந்தாள்.வெளியில் பார்க்கத் தோன்ற வில்லை. கை பேசியைப் பார்க்கவும் தோன்றவில்லை. அந்த பெண் வேடிக்கை பார்த்து தன் கற்பனையோடு சொன்னதை நினைத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். கையில் பூக் கூடையுடன் வேக வேகமாக ஒரு துள்ளலுடன் நடந்து செல்லும் மரிக்கொழுந்தைப் பார்த்து அவள் மனமும் கொஞ்சம் நிதானமாக ஆனது.

கிளிக் என்று கைப்பேசியில் செய்தி வந்திருக்கும் விஷயத்தை சொன்னது. வேகமாக எடுத்துப் பார்த்தாள். அவளின் பள்ளித் தோழி. வெகுகாலம் கழித்து மீண்டும் சந்தித்து பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். " நீ ஏன் எனக்கு பதில் சொல்லல? . எனக்கு பிடிச்ச பாட்டை பாடி அனுப்பி இருக்கேன்.கேக்கலை யா? ரொம்ப கோவமா இருக்கேன் உன் மேல!"வானதிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. இது உலகம் முழுதும் உள்ள வியாதி போலும். மருந்தை தனக்குள்ளே தான் தேட வேண்டும் என்று தோன்றியது. நாம் மட்டும் தனி இல்லை என்று நினைக்கும் போது நிம்மதியாக இருந்தது. ஆனாலும் இதிலிருந்து வெளியில் வர வேண்டும் என்று தீர்மானமாக முடிவெடுத்தாள்.

" சாரி, சாரி . கொஞ்சம் பிசி ஆயிட்டேன். நீ கான குயில். உனக்கு நான் சொல்லி தான் ஆகணுமா? ரொம்ப நல்லா இருந்தது. தினம் ஒரு பாட்டு அனுப்பு". என்று பதில் சொல்லிவிட்டு, ஜன்னல் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

அந்த தாடி வைத்த மனிதர் சிரித்துக் கொண்டு இருந்தார் இன்னும்.