எக்மோர் ரயில் நிலையத்தில் ஏறி என் பக்கத்தில் உட்கார்ந்த நண்பர் கேட்ட கேள்வி உண்மையில் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் கேட்ட கேள்வி இதுதான் 'பணம் தான் உறவுகளை தீர்மானிக்குமா ? என்பதுதான். என்னிடம் இந்த இரு நாளில் இந்தக் கேள்வியை கேட்கும் இரண்டாவது நபர் இவர். அதேபோல் என்னிடம் ஏன் இந்த கேள்வியை கேட்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம்.
நான் அவரிடம் 'உனக்கு ஏன் இந்த சந்தேகம் வந்தது முதலில் அதை சொல் '?என்றேன் .'இப்போது எனக்கு கொஞ்சம் பணம் நெருக்கடி. வியாபாரம் கொஞ்சம் சுமார்தான். வியாபாரத்தை கொஞ்சம் விரிவு செய்வதற்காக என் வீட்டை விற்று வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். நான் இருக்கும் வீட்டுக்கு பக்கத்தில் தான் என் சித்தப்பாவின் நண்பர் இருக்கிறார். அவரைப் பார்க்க வந்த என் சித்தப்பா என் வீட்டுக்கு வராமல் போய்விட்டார். 'நான் உடனே 'நீ வீட்டில் இருக்க மாட்டாய் என்று அவர் நினைத்திருக்கலாம் இல்லையா ? என்று சமாளித்தேன். நான் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தேன் அப்போது தான் அவர் வெளியே அந்த வீட்டிலிருந்து வந்தார் என்னைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். என் வீட்டுக்கு வரவில்லை என்றார். கூடவே பொருளாதார ரீதியாக அவரை விட நான் இப்போது தாழ்ந்த நிலையில் இருக்கிறேன். எனக்கு இப்போது சொந்த வீடு இல்லை வாடகை வீட்டில் இருக்கிறேன். அவருக்கு சொந்த வீடு மட்டும் இல்லாமல் இன்னொரு வீடும் இருக்கிறது. என் வீட்டை நான் அவருக்கு தான் விற்றேன் என்றார் நண்பர்.
இப்போது சொல் பணம் உறவுகளை தீர்மானிக்கிறதா என்று மீண்டும் அதே கேள்வி கேட்டார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று நான் கொஞ்ச நேரம் யோசித்தேன். இது உன்னுடைய முடிவா அல்லது அனுமானமா என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு ஏதாவது அவசர வேலை என்று கூட உன்னை பார்க்காமல் இருக்கலாம். ஆனால், உன் மனதில் அவர் உன்னை புறக்கணிக்கிறார் என்பது ஆழப் பதிந்துவிட்டது. இதற்கு ஒரே வழி நீ கடுமையாக உழைத்து உன் பொருளாதாரத்தை உயர்த்தி பழையபடி ஒரு வீட்டை வாங்கி அவரை விட நீ முன்னேறி சாதித்து விடு. அதன்பிறகு அவரே உன் வீட்டுக்கு நீ அழைக்காமல் வருவார் என்று சொல்லி சமாளித்தேன். அப்போது இதையே தான் என் மனைவியும் சொன்னாள் என்றார். அப்படி என்றால் உன் மனைவி சொல்படி நட என்று அந்தக் கேள்விக்கு ஒரு மாதிரி முற்றுப்புள்ளி வைத்தேன்.
நேற்று நான் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருந்த போது பழக்கமான மேனேஜர் தற்சமயம் பணி ஓய்வு பெற்று விட்டார். அவரது மனைவியும் வங்கி மேனேஜர் தான் அவரும் ஓய்வு பெற்று விட்டார். இருவருக்கும் சேர்ந்து ஓய்வூதியமே கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் வருகிறது. நல்ல சொகுசான வீடு சமையலுக்கு ஆள் இப்படி வசதியாக இருந்தாலும் என்ன பணம் இருந்தும் என்ன எனது இரண்டு மகன்களும் எங்கள் வீட்டுக்கும் வருவதில்லை. எங்களை விசாரிப்பதும் இல்லை என்று அலுத்து கொண்டார்கள். ஒரு மகன் சென்னையிலேயே வசிக்கிறார். இன்னொரு மகன் மதுரையில் இருக்கிறார். மதுரையில் இருக்கும் மகன் சென்னைக்கு வந்தால் கூட அவரது மாமியார் வீட்டில் தான் தங்குகிறார். அங்கிருந்து செல்பேசியில் கடனே என்று ஒரு நிமிடம் பேசிவிட்டு மாமியார் வீட்டில் முக்கிய சொந்தக்காரர் கல்யாணம் அதற்கு வந்து இருக்கேன் என்று சொல்லி தொடர்பை துண்டித்து விட்டான். இதுதான் என் நிலைமை என்றார். நான் அப்படியா என்று கேட்டுவிட்டு உங்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால் என்னை கூப்பிடுங்கள் நான் வருகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டேன்.
கடவுளைப் பொருத்தவரை யாரையும் திருப்தியாக வாழ விட மாட்டார் போலிருக்கிறது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை வைத்திருக்கிறார் என்று நினைத்தேன். கூடவே இருப்பதைக் கொண்டு நாம் தான் சந்தோஷமாக இல்லையோ கடவுள் மீது தேவையற்று பழியோ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
சமீபத்தில் ஒரு பேச்சாளர் பேசியது இது இப்போது வீடு வாங்குபவர்கள் வாடகைக்கு வருபவர்கள் Attached பாத்ரூம் இருக்கா என்று கேட்கிறார்கள். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அட்டாச் ஆக மாட்டார்கள் போலும் என்றார் இதுவும் உண்மைதானே என்று யோசித்தேன்.
Leave a comment
Upload