தொடர்கள்
பொது
சதுரங்க இளவரசி , இளவரசன் -மரியா சிவானந்தம்

2023110809533139.jpg

புகழேணியில் ஏறிக் கொண்டு இருக்கும் யாரிடமும் இந்த கேள்வியை முன் வைத்துப் பாருங்கள் ..

"உங்கள் வெற்றிக்குக் காரணம் யார் ?"

எல்லோருமே கை காட்டுவது அவர் அம்மாவைத்தான். மகன்களின் அல்லது மகள்களின் கனவைத் தனதாக்கிக் கொண்டு அதற்காக அயராது உழைப்பது அன்னையைத் தவிர வேறு யார்?

இந்த ஆண்டில் செய்தித்தாளில் பெரிதும் பேசப்பட்ட பெயர் நாகலட்சுமி என்னும் பெயர் . ஒப்பனை அற்ற முகம், மிக சாதாரண சேலை ஆனால் முகம் கொள்ளாத சிரிப்பும் , பூரிப்பும் கொண்டு ஊடக வெளிச்சத்தில் வலம் வந்த தமிழ்ப் பெண்மணி அவர்.

20231108095458227.jpg

நாகலட்சுமியின் பெருமைக்குக் காரணம் இரண்டு கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி உலக செஸ் போட்டிகளில் வெற்றி வாகை சூட வைத்ததுதான். பிரக்ஞானந்தா , வைசாலி என்ற இவரின் பிள்ளைகள் இருவரும் இந்தியாவின் பெருமையை , தமிழ் மண்ணின் திறமையை உலகறிய செய்ய வைத்ததில் நாகலட்சுமி தனிப்பங்கு வகிக்கிறார்.

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளர் ரமேஷ் பாபு செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர் .அவர் தன் மகள் வைசாலி, மகன் பிரக்ஞானந்தா இருவருக்கும் அந்த விளையாட்டைச் சொல்லி தருகிறார். அதிக ஆர்வத்துடன் செஸ்ஸை கற்றுக் கொள்ளும் இருவரும் வெகு விரைவிலேயே பன்னாட்டு செஸ் போட்டிகளில் கலந்துக் கொண்டு விருதுகள் பெற ஆரம்பித்தனர் .

20231108095614271.jpg

2012 ஆம் ஆண்டில் வைசாலி 12 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றார் .2015இல் 14 வயதுக்கு உட்பட்டோர் போட்டியிலும் வென்றார் . 2013 ஆம் ஆண்டு தன் 12வது வயதில் மாக்னஸ் கார்ல்சனை சென்னையில் நடந்த போட்டி ஒன்றில் தோற்கடித்த போது , வைசாலியை உலகே திரும்பி பார்த்தது. சமீபத்தில் ஸ்பெயின் பார்சிலோனியாவில் நடை பெற்ற எல்லோப்ரோகாட் ஓபன் செஸ் தொடரில் துருக்கி நாட்டைச் சேர்ந்த FIDE (Federation Internationale des Echecs ) மாஸ்டர் டேமர் தாரிக் செல்ப்ஸ் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார் வைஷாலி.இதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்ற வைஷாலி 2,500 பிடே ரேட்டிங் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.

2023110809565687.jpg

இதனால் இந்தியாவிலிருந்து கிராண்ட் மாஸ்டர் பெற்ற மூன்றாவது பெண்மணி என்ற பெருமை வைசாலிக்கு கிடைத்துள்ளது கோனேரு ஹம்பி, ஹிரிகா த்ரேனவல்லி ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெண்ணாக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.

அடுத்த ஆண்டு கனடா டொராண்டோவில் நடைபெற உள்ள, உலக இறுதி போட்டிக்கு தேர்வு செய்யும் candidate tournament 2024 போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார் . இவருடன் இந்த போட்டியில் பங்கு பெறும் மற்றொரு போட்டியாளர் இவரது தம்பி பிரக்ஞானந்தா. அக்கா எட்டடி பாய்ந்தால் தம்பி பதினாறு அடி பாய்பவர் அல்லவா ?

உலகின் மிக இளைய சர்வதேச மாஸ்டர் பிரக்ஞானந்தா. செஸ் உலக நட்சத்திரங்களான பாபி பிஷர் , கார்ல்சன் போன்று இளம் வயதிலேயே க்ராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறுவர்களுக்கான உலக போட்டியில் 8 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பிடே மாஸ்டர் வென்றார் . 2015ல் பத்து வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் வென்றார் . 2016ல் அங்கேரியின் செஸ் வீராங்கனை ஜூடித் போல்கரினை வென்று இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்றார் .2017ல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார் . தொடர் பயிற்சியும் ,இடைவிடாத முயற்சியும் அவரை பதினெட்டு வயது நிறையும் முன்னரே உலக இறுதி போட்டிக்கு அனுப்பியது.இறுதிப் போட்டியில் கார்ல்சன் வெற்றி பெற்ற போதும், பிரக்ஞானந்தாவின் ஆட்டத்திறனை உலகமே பார்த்து வியந்தது. "பிரக்ஞானந்தா" என்ற பெயர் தமிழ் மக்கள் உச்சரிக்கும் பெயரானது. இந்தியர்களின் பெருமை மிகு விளையாட்டு வீரன் ஆனார்.

20231108095755469.jpg

வைசாலி , பிரக்ஞானந்தா இருவரின் வியக்க தக்க வெற்றிக்குப் பின்னர் ரமேஷ் பாபு, நாகலட்சுமி இருவரின் கடின உழைப்பும், தியாகமும் உள்ளது . ஒரு வங்கி மேலாளரின் வருவாயில் இரண்டு விளையாட்டு வீரர்களை உருவாக்குவது அசாத்தியமானது . கால் ஊனமுற்ற ரமேஷ் பாபு அதிகம் பயணப்பட முடியாது என்பதால் தன் பிள்ளைகளுடன் போட்டிக்கு துணையாக உடன் சென்று, அவர்களைக் கவனிப்பது உற்சாகம் தருவது என்று நாகலட்சுமியின் பங்கு அளப்பரியது .அவரது முயற்சிக்கு வைசாலியும், பிரக்ஞானந்தாவும் பெரும் புகழை அவருக்குப் பரிசாக தந்துள்ளனர். உலகில் candidate tournament போட்டியில் முதன் முதலாக பங்கு பெறும் "உடன் பிறந்தவர்" என்ற பெருமையை இருவரும் அவர் அன்னைக்கு ஈட்டி தந்துள்ளனர் .

உலக செஸ் போட்டியில் இறுதிப் போட்டியில் கலந்துக் கொண்டு, உலகின் இரண்டாவது செஸ் சாம்பியனாக சாதனை புரிந்த பிரக்ஞானந்தா சென்னை திரும்பிய போது அவரை வரவேற்க மக்கள் பெருந்திரளாக கூடி இருந்தனர் . விளையாட்டுத் துறை ஆணையர் மிஸ்ரா உள்ளிட்ட தமிழக விளையாட்டுத்துறை வீரர்கள் , பள்ளி மாணவர்கள் என்று பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர் .மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று வரவேற்பு தடபுடலாக அரசு சார்பில் அளிக்கப்பட்டது .

20231108095834351.jpg

அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் பிரக்ஞானந்தாவை ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்தனர் .வண்டியில் ஏறிய உடனே பிரக்ஞானந்தா கீழே நிற்கும் தன்னுடைய தாயை கை நீட்டி அழைத்து வண்டியில் ஏற செய்தார். "இவரே என் சாதனையின் முதற்காரணம் ' என்று சொல்லாமல் சொல்லி அந்த பெருந்திரள் முன்பு தாயை பெருமைப்படுத்தினார் .

ஒரு அன்னைக்கு இதைவிட பெரிய பெருமை வேறென்ன இருக்க முடியும். தன் மக்களின் உயரத்தைக் கண்டு பெருமை கொள்ளும் நாகலட்சுமி அதை தன் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. பதக்கங்கள் , பட்டங்கள், விருதுகள், பணப்பரிசுகள் என்று குவிந்த போதும் அவர் எளிமையாக இருக்கிறார் . எவரிடமும் தயக்கமின்றி உரையாடுகிறார். தம் பிள்ளைகளின் சாதனையில் தனக்கான பங்கைச் செவ்வனே செய்கிறார். அன்னைமார் அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது .

பாராட்டுக்கள் நாகலட்சுமி அம்மா.

உங்கள் பிள்ளைகளால் நாங்களும் பெருமை கொள்கிறோம் .சதுரங்க மேடையில் இளவரசனாக,இளவரசியாக வலம் வரும் இவர்கள் இனி வரும் போட்டிகளிலும் உலக சாதனை செய்து விருதுகள் குவிக்க வாழ்த்துகிறோம் !!