தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம்  -  119- ஆர் . ரங்கராஜ், 

திருநீர்மலை திருக்கோயில் பற்றி 8-ஆம் நூற்றாண்டில் திருமங்கையாழ்வார் இரண்டாம் திருமொழி பாடல்

20240123172844630.jpg

ஒன்பதாம் பத்து. இரண்டாம் திருமொழி. பாடல் 8. (1848)

மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட
மாலிருஞ்சோலை மணாளர்வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
நீர்மலையார் கொல் நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன்மலை மேலெழுந்த
மாமுகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளுமொன்றேறி வந்தார்
அச்சோ ஒருவாழகிய வா! (8)


அழகுமிகு சிறகுகளையுடைய கருடாழ்வார் மீது அமர்ந்திருப்பவர்; மேகம் அளவு உயர்ந்துள்ள பொன் நிறமான மலை மீது உலாவும் பிரமாண்டமான மேகம் போல விளங்குபவர்; எனது மனதிலும் கண்களிலும் கணப்பொழுதும் அகலாமல் ஊன்றி இடம்பிடித்து உள்ளவர்; மேகம் மோதுமாறு ஓங்கி வளர்ந்துள்ளதால் சந்திரன் படியுமாறு விளங்கும் திருமாலிருஞ் சோலையில் களிப்புடன் எழுந்தருளியுள்ளவர்; திருநீர்மலையில் கோயில் கொண்டுள்ள பரமன் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளவர்; இவர் யார் எனச் சரியாக உணர இயலவில்லை. வியப்பையளிக்கவல்ல இப் பெருமானின் வடிவழகை நீங்களே கண்டு களியுங்கள்.

பெரிய திருமொழி

பத்தாம்பத்து. முதல் திருமொழி. பாடல் 1 (1848)

ஒரு நற்சுற்றமெனக் குயிரொண் பொருன்
ஒரு நல் தொல்கதி யாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை இன்று போய்க்
கருநெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே (1)


ஆபத்து வந்தபோது எவரும் அழைக்காமல் தானாகவே வந்து உதவுபவன்; நெருங்கிய சுற்றத்தினர் போல் பரிவு காட்டுபவன்; எனக்கு ஆன்மாவாகத் திகழ்பவன்; நற்கதியை அளிக்கவல்ல நெறியை உபதேசிப்பவன்; பூவுடலை விட்டு உயிர் நீங்கியவுடன் அதற்கு நிரந்தரமான வைகுண்டப் பதவியை அளிப்பவன்; இளமை வனப்புடைய திருமேனியைப் பெற்றுள்ளவன்; இத்தகைய பெருமைமிகு கார்வண்ணனை நேற்று திருநீர் மலையில் தரிசித்தோம். அடர்ந்து வளர்ந்துள்ள நன்கு முற்றிய பயிர்களால் சூழப்பட்ட திருக்கண்ணமங்கையில் இதே பெருமானை இன்று வழிபடுவோம்.

(தொடரும்)