தொடர்கள்
தொடர்கள்
இனி... சத்யபாமா ஒப்பிலி

20240201234755497.jpeg

கோவத்தை வெளிப்படுத்துவது ஒரு கலை. எனக்கு ஏன் அது வருவதில்லை என்று நொந்து கொண்டே தான் அன்று பேருந்தில் ஏறினேன். எத்தனையோ விஷயங்கள் பொறுமையை சோதிக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் ஏன் கோவம் வருவதில்லை என்று எனக்குப் புரிந்ததே இல்லை. கனவில் கூட யாரையோ கோவமாக அடிக்கப் போவேன். ஆனால் எதிர் பார்த்த பலம் கையில் இல்லாமல் போய்விடும். யாரை அடிக்க நினைத்தேன் என்பது கனவு கலைந்த பின் நானே ஒரு முடிவுக்கு வருவேன். முகமும் தெரிந்ததே இல்லை.
எனக்கு கொஞ்சம் மறதி உண்டு. அதற்காகவே எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்வேன். ஆனால் என் மறதியை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக உபயோகிக்கும் போது ரொம்ப கோவம் வரும். " நீங்க என் கிட்ட சொல்லவே இல்ல. எனக்கு தெரியாது. தெரிஞ்சா செஞ்சுறுப்பேன் இந்த வேலைய".
" நான் சொன்னேன் நீ மறந்துட்ட" இதை நான் யாரிடமும் சொன்னதே கிடையாது. ஒருவேளை நாம தான் மறந்திருப்போமோ என்று தான் தோன்றும். என் மேல் தான் கோவம் வரும்.
இன்றும் அப்படித்தான். ஒரு முக்கியமான பேப்பரை விக்ரமிடம் குடுத்து Xerox எடுக்கச் சொன்னேன். அவன் "மறந்து போய்விட்டேன்" என்று சொன்னாலும் பரவாயில்லை. நான் அவனிடம் குடுக்கவே இல்லை என்று சாதித்தான். நானும் என் ஃபைல்களில் எல்லாம் தேடிப் பார்த்தேன். அவன் தேடக் கூட இல்லை. பேசாமல் உட்கார்ந்திருந்தான். என் இருக்கையிலிருந்து எழுந்து அவன் மேசைக்கு சென்று அவன் அடுக்கி வைத்திருக்கும் பேப்பர்களைப் புறட்டினேன். மேலாகவே மூன்றாவது பேப்பராக இருந்தது.
" இது என்ன விக்ரம்?" என்றேன்.
" இது எப்படி இங்க வந்துச்சு? குடுங்க ஜெராக்ஸ் எடுத்துட்டு வரேன்"
கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் சிரித்துக் கொண்டே சென்றவனிடம் கோவமாக, "தேடவாவது செஞ்சுறுக்கலாமில்ல" என்று கேட்டிருக்கலாம். ஒன்றும் சொல்லாமல் இருக்கையில் வந்து அமர்ந்தேன்.
அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் கூட இதுவே தான். வீட்டு வேலைக்கு வரும் பெண் சொல்லாமல் கொள்ளாமல் அடிக்கடி லீவ் போட்டு விட்டால் கோவம் தானே வர வேண்டும். மறுநாள் அவள் சொல்லும் கதையை பொறுமையாக கேட்டு விட்டு,
" இனிமேல் phone பண்ணி சொல்லு வரலைன்னா" என்று சொல்லி விட்டுவிடுவேன்.
குழந்தைகளிடமோ, கணவரிடமோ கூட இப்படித்தான்.
கோவம் வராது போனால் பரவாயில்லை. வரும் கோவத்தை வெளிப்படுத்த தெரியாது என்பது கையாலாகாத்தனம், என்று தோன்றும்...

பெண்கள் இருக்கை காலியாக இல்லாததால் ஆண்கள் இருக்கையில் அமர்ந்திருந்தேன். மனம் கடு கடு என்று இருந்தது. அடுத்த நிறுத்தத்தில் ஒரு சிறு பெண் வந்து அருகினில் அமர்ந்தாள். சென்னை பெண் போல தெரியவில்லை. கையில் கைபேசி இல்லை. தான் கொண்டு வந்த பையை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். நான் அவளைப் பார்ப்பதையும் அவள் கவனிக்கவில்லை.
சற்று நேரம் கழித்து அவள் என்னை நெருக்கி அமர்வது போல தோன்றியது. சற்று நகர்ந்து உட்கார்ந்தேன். அவளும் இன்னும் நகர்ந்து அமர்ந்தாள். ஏற்கனவே யாரையாவது திட்டியே ஆகவேண்டும் என்றமுடிவில் இருந்த நான் எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தேன். அவள் தன் பையை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டு என்னைப் பார்த்தாள். கண்கள் லேசாக கலங்கி இருந்தன. என் எரிச்சலும் கோவமும் கலைந்து போய் என்ன என்பது போல் பார்த்தேன். பேருந்தில் கூட்டம் சற்று அதிகமாக ஆகியிருந்தது. நாங்கள் அமர்ந்திருந்தது ஆண்கள் பகுதியாதலாய் இருக்கையை நெருக்கி ஆண்களே நின்று கொண்டிருந்தனர். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. இந்த பெண் வேறு எதற்கோ அழுகிறாள் என்று நினைத்துக்கொண்டு மறுபக்கம் திரும்பும்போது தான் என் கண்களில் அந்த அருவருப்பான காட்சி பட்டது. சட்டென்று நிமிர்ந்து பார்த்தேன். ஒரு நடுத்தர வயது மனிதன். குடிதிருப்பான் போலத் தெரிந்தது. அந்த பெண் என் அருகில் சாய சாய இவன் அவள் மேல்....
பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு வேக வேகமாக நடந்தேன்.
கைப் பையை சோஃபாவில் தூக்கி எறிந்து விட்டு, கால் மடக்கி நானும் அமர்ந்தேன். என்ன ஆச்சு என்று கேட்டு விட்டு, பதில் எதிர்பாராமல் என் கணவர் வழக்கப்படி கணினிக்குள் காணாமல் போனார்.
சிவந்து இருந்த என் கையைப் பார்த்துக் கொண்டேன். அத்தனை கனவிலும் இழந்திருந்த வேகமும், நிஜத்தில் தேக்கி வைத்திருந்த கோவமும் மொத்தமாய் கையில் இறங்கி அவனை அடித்த போது பேருந்தே திடுக்கிட்டது.
" கோவப் படு, நாலு கெட்ட வார்த்தையில் திட்டு, உனக்கு நல்ல vent அது என்று என் மகள் என்னிடம் அடிக்கடி கூறுவது அப்பொழுது நினைவில் வர, எனக்கு தெரிந்த வார்த்தைகளை வைத்து அவனை திட்ட, நடத்துநர் பேருந்தை நிறுத்தி அவனை கீழே பிடித்து தள்ளாத குறையாக இறக்கி விட்டார். அந்த பெண் என்னை பார்த்துக் கொண்டிருக்க, நான் என் கையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ரௌத்திரமும் பழகத்தான் வேண்டும்.