தொடர்கள்
அனுபவம்
தெப்பக்காடு யானைகள் முகாமில் விகடகவி ! 2 வது வாரம்- ஒப்பிலி

20240202060901897.jpeg

(தெப்பக்காட்டில் விகடகவியார் இரண்டாம் வாரம்)

மூர்த்தி மக்னா யானை பராமரிப்பு சர்ச்சை


நாட்டிற்கே முன்மாதிரியாக விளங்கும் தெப்பக்காடு யானைகள் முகாம் 1997-98 இல் பெரியதொரு சர்ச்சையில் சிக்கியது. அங்கே பராமரிக்கப்பட்ட மக்னா யானை மூர்த்தியின் காலில் சங்கிலிகள் கட்டப்பட்டதால் புண் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு நடப்பதாகவும் அதனால் அந்த யானையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மிகவும் மோசமான முறையில் அதனை வனத்துறை பராமரிப்பதாகவும் புகார் செய்யப்பட்டது.

அந்த நாட்களில் டாக்டர் எஸ் பால்ராஜ் முதுமலை வன காப்பாளராக பணிபுரிந்தார். இந்த சர்ச்சை பற்றி அவர் கூறுகையில் மூர்த்தி யானை கிட்டத்தட்ட 28 நபர்களை தமிழகம், கேரளா, மற்றும் கர்நாடகாவில் கொன்றுள்ளதாகவும் அதனால் அந்த யானையை பிடித்து முகாமில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது.


இந்த பொறுப்பு, யானை டாக்டர் கே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மிகவும் சவாலான அந்த வேலையே டாக்டர் கே மிக லாவகமாக செய்து முடித்து யானையை பத்திரமாக தெப்பக்காடு முகாமிற்கு அழைத்து வந்தார். அதன் பிறகே இந்த சர்ச்சை.

சர்ச்சையின் காரணகர்த்தா ஒரு வெளிநாட்டுக்காரர். அவர் மூர்த்தியை வைத்து வெளிநாடுகளில் இருந்து பண உதவி பெற்று விட்டார். அதனால் மூர்த்தி தனியார் வசம் வர வேண்டும் என்று விரும்பினார். அதற்காகவே ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டார் அவர். இந்த விஷயம் மத்திய அமைச்சர் மனேகா காந்திக்கு புகாராக சொல்லப்பட்டது. உடனே அவர் இதில் தலையிட்டு, யானையை தனியார் வசம் ஒப்படைக்குமாறு தமிழக அதிகாரிகளை வற்புறுத்தினார். ஆனால் டாக்டர் கே இன் வழிகாட்டுதலின்படி தமிழக வனத்துறை, மூர்த்தியின் பராமரிப்பை எடுத்துக்கொண்டிருந்தது. இந்த வழிகாட்டுதலால் யானை மிகவும் சாதாரணமாக தனது தினசரி பணிகளை மேற்கொண்டிருந்தது. டாக்டர் கே இன் ஆலோசனையின் பேரில் தமிழக வனத்துறை மூர்த்தியின் உடல் நிலை குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப, பின்னர் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த மக்னா யானையை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பிடித்ததால் அவர் நினைவாகவே அதற்கு மூர்த்தி என்று பெயரிடப்பட்டது.மிகவும் கொடூரமாக சித்தரிக்கப்பட்ட மூர்த்தி முதுமலை முகாமிற்கு வந்த பின்பு அதன் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டது. மாவூத்தன் மூர்த்தியின் துதிக்கையில் ஒரு கொம்பை கொடுத்து பிடித்துக் கொள்ள சொல்வார். அதுவும் சாதுவாக அந்த கொம்பை வாங்கிக்கொண்டு அவர் பின்னாலே மாயாறுக்கு செல்லும். மூர்த்தியின் இந்த மாற்றத்திற்கு டாக்டர் கே இன் அன்பான அணுகுமுறையும் அவரின் பண்பான பேச்சுமே என்றால் அது மிகையாகாது. காலில் சங்கிலிகள் கட்டப்படுவதால் அவற்றின் தடத்தை அறிவதற்கு ஏதுவாக இருக்கும். எனவே இந்த யானைகள் முகாமை விட்டு காட்டில் மேய சென்றாலும் அவைகள் தானாகவே முகாமுக்கு வந்து விடும்.

20240202061234637.jpeg

முகாமில் உள்ள யானைகளின் உணவு முறை குறித்து மருத்துவர் கலைவாணன் கூறுகையில் பொதுவாக காட்டில் உள்ள யானைகள் ஒரு நாளைக்கு 14 முதல் 18 மணி நேரம் உணவு உண்ணும் பழக்கம் உள்ளவை. அவைகளுக்கு மனிதர்கள் போல் பித்தப்பைகள் இல்லாததால் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சராசரியாக ஒரு வளர்ந்த யானையின் உணவு தேவை ஒரு நாளைக்கு சுமார் 250 கிலோ. அதே யானைகள், முகாமிற்கு வரும் பொழுது அவைகள் பலவிதமான வேலைகளுக்கு பயன்படுத்தப்படும். பல வருடங்களுக்கு முன் முகாம் யானைகள் மரம் இழுக்கவும், வெட்டிய மரங்களை லாரிகளில் ஏற்றவும் பயன்படுத்த பட்டதால் இந்த உணவுமுறை ஏற்படுத்தப்பட்டு, தேவையான ஆற்றலை அது தருவதால், இன்று வரை தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த உணவு முறையும் தெப்பக்காடு முகாமை போல் நூறு வருடங்களுக்கு முந்தையது என்கிறார் அவர்.


தற்போது முகாமில் உள்ள யானைகள் கும்கிகளாக பழக்கப்பட்டு வருகின்றன. இது தவிர வேறு எந்த வேலையும் அவற்றிற்கு இல்லை. டாப் ஸ்லிப்பில் கலீம் எனும் கும்கி யானை இது வரை 99 காட்டு யானைகளை பிடிக்கும் வேலையை செய்து விட்டு கடந்த வருடம் தனது அறுவதாவது அகவையில் அடி எடுத்து வைத்தது. பணிமூப்பை எட்டியதால் அந்த யானை தற்போது முகாமில் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறது.


தமிழக அரசு யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகளை அதிக எண்ணிக்கையில் கவரும் வகையில் தனியாக ஒரு திட்டத்தை கடந்த வருடம் ஏற்படுத்தி உள்ளது. கூடிய விரைவில் அந்த திட்டம் நடைமுறை படுத்த படும் என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள். அந்த திட்டத்தின் படி சுற்றுலா வரும் பயணிகள் முகாம்களில் அமர்ந்து கொண்டு யானைகள் உணவு உண்ணும் முறையை ரசிக்கலாம். இதற்கென ஒரு கேலரி ஏற்படுத்த உள்ளது அரசு.

தொடரும்......

PROTECT FOREST, WILDLIFE AND ENVIRONMENT FOR POSTERITY