தொடர்கள்
கவிதை
அன்பினி யாக்கை! -ராகவன் ஸாம்யெல்

20240202054515848.jpeg

உன் கைகளைப் பற்றிக் கொண்டேன்

ஆசுவாசமாய் இருக்கக்கூடும் இருவருக்கும்
ஒன்றும் சொல்லவில்லை நீ
என் கண்களையும் பார்க்கவில்லை
கண்ணீரின் வெம்மை

பிடியில் பிசுபிசுத்தது

மேலும் அழுதாய்
மூக்கை உறிஞ்சிக் கொண்டாய்
உன்னுடைய உடலும் லேசாய்
நடுங்கியது போலிருந்தது
நடுக்கம் எனக்குள்ளும் அதிர்கிறது
வெற்றிடம் நிறையும் வெளியில்
என் கைக்குட்டையும்
எப்படியாவது தேர்ந்த வார்த்தைகளை
பேசிவிட வேண்டும்
என்று தான் நினைக்கிறேன்
வார்த்தைகளற்ற பொழுதின்
அடர்த்தி கூடிக் கொண்டேயிருக்கிறது
என் கைகளை விடுவிக்க முடியவில்லை
இறுகபற்றியிருக்கிறாய்!
என் மீது சாய்ந்து கொண்டாய்
விரல் அளைந்து முடிச்சுகளை நிமிண்டுகிறாய்
பிரிவில் துளிர்க்கும் பெருங்காமம்
நான் புகைக்கவா என்று கேட்கிறேன்
அனுமதிக்கிறாய்.

விடுதலை கனக்கிறது
வா விலங்கில் வைத்து பூட்டு!!