தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 64 - பரணீதரன்

போன வாரம் வாய்ப்பாடுகளில் இருக்கும் எட்டு பொருடகளின் சிறப்பைப் பற்றிக் கூறுவதாக சொல்லியிருந்தார் நமது பரணீதரன்.

இதோ அவரே தொடர்கிறார்.

20240312170129415.jpg

நாள் - மலர்

ஒரு நாள் என்பது தமிழர் வாழ்வியலில் இன்றைய சூரிய உதயம் முதல் நாளைய சூரிய உதயம் வரை. அதாவது 24 மணி நேரம். இந்த 24 மணி நேரத்தில் சூரியன் உதித்து மறைந்து மீண்டும் உதிக்கிறது. அதே போல பொதுவாக தமிழர்கள் நிலத்தில் இருந்த மலர்கள் 24 மணி நேரங்களே வாழ்ந்தன.

சில மலர்கள் விதிவிலக்காக இருந்தாலும் பொதுவான விதியையே இங்கு நாம் எடுத்துக் கொள்கிறோம். மலர்களும் காலையில் மலர்ந்து மாலையில் குவிந்து மீண்டும் காலையில் மலரும். இவை இரண்டிற்கும் இந்த ஒற்றுமை இருந்ததால் இந்த இரண்டையும் ஓரசைச்சீர் வாய்ப்பாட்டின் முதலில் வைத்தனர்.

20240312170216750.jpg

காசு - பிறப்பு

பொதுவாக தமிழர் வாழ்வியலில் தாலி என்ற விஷயம் பல காலகட்டங்களில் பல வகையாக பயன்படுத்தப்பட்டது.

உதாரணமாக குழந்தைகளுக்கு பாதுகாப்பாக ஐம்படை தாலி என்ற ஒரு ஆபரணத்தை தமிழர்கள் அணிவிப்பார்கள்.

அதேபோல ஒரு பெண்ணை பாதுகாக்க அவளுக்கு மங்கள நாண் என்று கூறக்கூடிய அச்சுத் தாலியையும் ஆமை தாலியையும் அணிவிப்பார்கள். தாலி என்பது ஒரு பாதுகாப்பு கவசம் போன்றது.

இன்றைய தாலி என்ற பதத்திற்கான அன்றைய சொற்கள் காசும் பிறப்பும் ஆகும். திருப்பாவையில் ஆண்டாள் கூட “காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து, வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால், ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ ?” என்று பாடுகிறாள். அதாவது முல்லை நிலத்தில் வாழ்கின்ற ஆய்ச்சியர் தங்கள் கைகளால் தயிரை மத்து வைத்து கடையும் பொழுது அவர்கள் அணிந்திருக்கும் காசும் பிறப்பும் ஒன்றோடு ஒன்று மோதி ஓசை எழுப்புகிறது அந்த சத்தம் கேட்கவில்லையா என்று ஆண்டாள் கேட்கிறார்.

இந்த காசும் பிறப்பும் அந்த காலத்தில் பெண்கள் அணிந்து உள்ளது நமக்கு இந்த பாடல் மூலம் தெரிகிறது. மேலே உள்ள படத்தில் வட்ட வடிவமாக காசு இருக்கிறது. அவைகளுக்கு நடுவில் ஆமையின் உருவம் போல உள்ள தாலியும் இருக்கிறது.

அடுத்த படத்தில் இருப்பது பலவகையான ஆமை உருவமுள்ள தாலி வகைகள். இவை இரண்டும் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும். அதனால் தான் இந்த இரண்டையும் ஓரசைச்சீர் வாய்ப்பாட்டின் பின்னே வைத்துள்ளனர்.

20240312170646248.jpg

தேமா - புளிமா

தேமா என்பது தேன் போன்ற இனிமையான சுவையை உடைய மாம்பழங்களைக் கொண்ட மாமரம் என்று பொருள்.

புளிமா என்பது சற்று புளிப்பான சுவையை உடைய மாம்பழங்களைக் கொண்ட மாமரம் என்று பொருள். இவைகளே காயாக இருந்தால் தேமாங்காய் என்றும் புளிமாங்காய் என்றும் அழைக்கப்படும். இவைகளை பழமாக இருந்தால் தேமாங்கனி மற்றும் புளிமாங்கனி என்று அழைக்கப்படும்.

இந்த மரத்தின் பூக்கள் பூக்கும் பொழுது நல்ல நறுமணத்தை பகலில் தரும். அவைகளை நாம் நறும்பூ என்று கூறுவோம். அதே மலர்கள் இரவில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும். அதனால் அவைகளை தண்பூ என்று கூறுகிறோம். இவைகளும் தேமாந்தண்பூ, புளிமாந்தண்பூ, தேமாநறும்பூ புளிமாநறும்பூ என்று வந்துள்ளது. இந்த வாசனை மிக்க பூக்கள் உள்ள மரம் நிழலை கொடுத்தால் அது நறுநிழல். அவைகளே குளிர்ச்சியை கொடுத்தால் அவை தண்ணிழல். இப்படி மாம்பழங்களை வைத்து ஈரசை, மூவசை, நான்கசைச் சீர் வாய்ப்பாட்டின் முதலில் வைத்தனர். இந்த மாவின் வகைகள் ஒன்றுக்கொன்று தொடர்பாக இருப்பதால் இவை இரண்டும் ஒன்றாக வந்துள்ளது.

20240312170754983.jpg

கருவிளம் – கூவிளம்

கருவிளம் என்பது பழத்தின் உள்ளே கருப்பாக இருக்கும் விளாம்பழத்தை குறிக்கும் சொல். ஆனால் கருவிளம் என்பதை சங்குப்பூ என்று தவறாக நமது சிந்தனையாளர்கள் கூறுகின்றனர்.

சங்கு பூவிற்கு காயோ, பழமோ நிழலோ, நறுமணமோ கிடையாது. ஏனெனில் சங்குப்பூ என்பது ஒரு செடி வகையாகும். மரத்திற்கு மட்டுமே மேலே உள்ள பண்புகள் உள்ளன. அதேபோல கருவிளமும் கூவிளமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக வர வேண்டும். அதுவும் இங்கே வரவில்லை.

கூவிளம் என்பது வில்வ மரத்தை குறிக்கும். வில்வ மரமும், வில்வங் காயும், வில்வம் பழமும் - விளாம்பழத்தை போன்றே இருக்கும். இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். அதனால் கருவிளத்தையும் கூவிளத்தையும் ஒன்றாக வைத்தனர்.

இப்படி பூ, மரம், காய், கனி, நிழல் என்று இயற்கை சம்பந்தமான பொருட்களை மட்டுமே வைத்து நமது பொருள் இலக்கணமும் யாப்பிலக்கணம் அமைந்துள்ளது .

வெண்பா என்று நாம் அழைக்கும் பாவகையை வடமொழியில் காயத்ரி சந்தஸ் என்று வழங்குகிறார்கள். இரண்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

நாம் பாவகைகளை பார்க்கும் பொழுது இவற்றிற்கான ஒற்றுமையை அங்கே பார்ப்போம் என்றும் பிற மொழி சிறப்பையும் கூறுவதாகவும் நம்மை ஆவல் கொள்ளச் செய்கிறார்.

இப்பொழுது நாம் பார்த்த ஒரசை, ஈரசை, மூவசை, நான்கசைச் சீர்களை கொண்டு ஒரு திருக்குறளை அலகிட்டு அதனுடைய பா வகையைப் பார்ப்போம்

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு - திருக்குறள் - நாடு - 734

உறுபசியும் - உறு பசி யும் - நிரை நிரை நேர் - கருவிளங்காய்

ஓவாப் - ஓ வாப் - நேர் நேர் - தேமா

பிணியும் - பிணி யும் - நிரை நேர் - புளிமா

செறுபகையும் - செறு பகை யும் - நிரை நிரை நேர் - கருவிளங்காய்

சேரா - சே ரா - நேர் நேர் - தேமா

தியல்வது - தியல் வது - நிரை நிரை - கருவிளம்

நாடு - நா டு - நேர்பு - காசு

இந்தக் குறளில் ஓரசைச் சீர், ஈரசைச் சீர் மற்றும் மூவசைச்சீர் ஆகிய மூன்றும் வந்துள்ளது. இப்படி நமது இலக்கியத்தில் உள்ள எந்த ஒரு செய்யுளையும் பதம் பிரித்து அதனுடைய பாவகை சீர்வகை ஆகியவற்றை நம்மால் கண்டுபிடிக்க முடியும். இப்படி பதம் பிரித்து அந்த செய்யுள் வெண்பாவா, ஆசிரியப்பாவா, கலிப்பாவா அல்லது வஞ்சிப்பாவா என்று நம்மால் சுலபமாக கூற முடியும் என்று சொன்ன பரணீதரன் வரும் வாரம் அவற்றைக் கூறுவதாக சொல்லி விடை பெற்றார்.