
- சத்யப்ரியன்
சாம்பமூர்த்தி முன்னால் தலைவிரி கோலத்தில் அவள் நின்று கொண்டிருந்தாள். அவளை எங்கோ பார்த்த மாதிரியே இருந்தது என்றாலும் அவளுடைய தலைவிரி கோலமும் நெற்றியில் பெரிய வட்ட வடிவினில் இருந்த ரத்தச் சிவப்புக் குங்குமமும் அவருக்கு அச்சமூட்டவே “போயிடு போயிடு” என்று அலறினார்.
சாம்பமூர்த்தியின் மனைவி பாகீரதி எழுந்து விளக்கைப் போட்டாள்.
சாம்பமூர்த்தியின் வெள்ளை பனியன் வியர்வை ஈரத்தில் ஒட்டிக் கிடந்தது. நெற்றி கழுத்துப் பகுதிகளில் வியர்வை வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது.
சாம்பமூர்த்திப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தார்.
கட்டிலின் கீழ் இருந்த கூஜாவிலிருந்து ஒரு தம்ளர் தண்ணீரை எடுத்து நீட்டியபடி பாகீரதி, “திரும்பியும் துர்சொப்பனம் வந்ததா?,”என்று கேட்டாள்.
அப்பாடா என்ற ஒரு நிம்மதி ரேகை அவர் முகத்தில் இறங்கி உடலெங்கும் வியாபிக்கவே உடல் சற்று சாந்தமானது.
“மணி எத்தனை பாகீரதி?,”என்றார்.
“நாலரை ,”
“விடிகாலம்பர ஆயிடுத்து இல்லியா இனிமேல் தூங்கினாப்பலதான். நான் எழுந்துக்கறேன்” என்று படுக்கையில் இருந்த போர்வையை மடித்துத் தலையணையின் அருகில் போட்டு விட்டு கிணற்றங்கரையை நோக்கிப் போனார்.
வசந்தருது என்பதால் பனி விலகியிருந்தது. தோட்டத்துக்குச் செல்லும் குழாயில் கைகால்களையும் முகங்களையும் கழுவி கொண்டார். உடலில் குளிர்ந்த நீர் பட்டதும் உடலில் ஒரு புத்துணர்ச்சி வந்தது போலத் தெரிந்தது. சரக்கொன்றை மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த புள்ளினங்கள் விடிகாலை குரலை எழுப்பத் தொடங்கி விட்டன.
விடிகாலை வேளையில் வந்திருக்கும் கனவு. தார் பூசி எழுதியது போல எத்தனை முயன்றாலும் அழிக்க முடியாத கனவு. இதுவரையில் நான்கைந்து முறை வந்து விட்டது. முதல் முறை அந்தப் பெண் கனவில் வந்ததும் தனக்குத் தெரிந்த ஆருடம் சொல்பவரிடம் சந்தேகம் கேட்கவே அவர் சாம்பமூர்த்திக் குடும்பத்தில் ஏதாவது சுமங்கலிப் பெண்ணோ கன்னிப் பெண்ணோ துர்மரணம் அடைந்திருப்பாள் அவளது ஆத்மா சாந்தியடையாமல் அலைந்து கொண்டிருப்பதால் இந்தக் கனவு என்று கூறி சுமங்கலி பிரார்த்தனை நடத்தி சுமங்கலிகளுக்குச் சாப்பாடு போட சொன்னார். சாம்பமூர்த்தியும் செய்தார். ஆனாலும் கனவு மறுபடியும் வந்தது.
தொடர்ந்து வரும் கனவு குறித்து ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் போய்க் காரணம் கேட்டார்.. கிட்டத்தட்ட ஒருமணிநேரம் விடாமல் பேசிய மருத்துவர் முடிவாக நமது சமூகம், சூழல், பல ஆண்டுகளாக மனித இனத்தின் மேல் கவியும் அழுத்தங்கள் என்று பல காரணங்களைக் கூறினார். கனவுகள் எழாமல் இருக்கச் சில எளிய பயிற்சிகளைக் கூறினார். ஆனால் கனவு தொடர்ந்த வண்ணம் இருந்தது. இதுவரை குறைந்தது இருபது முறையாவது அந்தப் பெண்ணின் நிழல் உருவம் ஒன்று தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வரும் அல்லது ஒரு கையில் சோற்றுப் பாத்திரம் ஏந்திக் கொண்டு ‘பசிக்குது சோறு போடுங்க,’என்று கெஞ்சுவது போல நிற்கும். இன்னொரு முறை அவர் பெரிய வனாந்தரத்தில் முடிவே இல்லாமல் நடந்து கொண்டிருப்பார். பின்னாலேயே அந்த உருவம் எப்போதும் அணிந்து கொண்டிருக்கும் அழுக்குப் படர்ந்த ஆடையும் தலைவிரி கோலமுமாகத் தொடர்ந்த வண்ணம் இருக்கும். திரும்பிப் பார்த்தால் போதும் ஓர் அசட்டுச் சிரிப்பைச் சிரித்து வேறு பக்கம் பார்க்கத் தொடங்கி விடும்.
காலாற சற்றுத் தொலைவு நடந்து சென்று பால் பூத்திலிருந்து பால் வாங்கிக் கொண்டு வந்தார். இனிமேல் தூக்கம் வருவதற்குச் சாத்தியமில்லை. பாகீரதி எழுந்து காரியங்களைத் தொடங்கி விடுவாள். பாலை வாங்கி வருவதற்குள் பாகீரதி அடுப்பைப் பற்ற வைத்து முதல் டிகாஷன் இறக்கி விட்டாள். அவர் கொடுத்த பால் பாக்கெட்டுகளை வாங்கி சிங்கில் இருந்த குழாயில் கழுவி பால் ஏணத்தில் விட்டுக் காய்ச்சத் தொடங்கினாள்.
“ அடுத்த வாரம் அம்மாவோட சிரார்த்தமும் மறுநாள் சுமங்கலி பிரார்த்தனையும் வர்றது.”
“தெரியும். இன்னும் ரெண்டு நாளில் நான் சாஸ்த்ரிகளுக்குக் கூப்பிட்டு ரிமைன்ட் பண்ணிடறேன். நீ சுமங்கலிகளுக்கும் சமையல் மாமிக்கும் ஏற்பாடு பண்ணிடு”, என்றார். இரண்டு நாள் தனது வேலைக்கு விடுப்பு கொடுத்து விட்டு சிரத்தையாகக் கர்மாவை நிறைவேற்றுவது அவருக்கு வழக்கம்.
“இந்த முறை பிரேமாவை அழைக்க முடிவு பண்ணியிருக்கேன் சும்மா இல்லை சுமங்கலி பிரார்த்தனையில் சுமங்கலியா உட்கார அழைக்கப் போகிறேன்..” சூடாக ஆற்றிக் கொண்டு வந்த காபி டம்ளரை அவர் முன்னால் வைத்தபடி கூறினாள்.
“உனக்குப் பைத்தியம் எதுவும் பிடிக்கலியே பாகி ?”என்று கேட்டார்.
“இல்லை, நிஜமாவேதான் சொல்றேன்” என்றாள் அவள் ஸ்திரமாக.
சாம்பமூர்த்தித் திகைத்து நின்றார். பிரேமாவும் அவரும் உடன் பிறந்தவர்கள். சாம்பமூர்த்தியின் அப்பா ரயில்வேயில் நல்ல பதவியில் இருந்து விட்டு சாம்பமூர்த்தி சி.ஏ. படிப்பை முடித்த நேரம் இறந்து விட்டார். பிரேமா கடலூரில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவள் அவர்கள் தெருவில் நான்கு வீடு தள்ளி வசித்து வந்த சுரேஷ் என்ற பையனைக் காதலிக்கத் தொடங்கியிருந்தாள். சுரேஷ் வாய்ப்பந்தலில் மன்னன் என்பது விசாரிக்கும்போது தெரிய வந்தது. அதோடு அவனுக்குச் சீட்டு, குடி போன்ற வேண்டாத பழக்கங்களும் ஏற்பட்டுத் தெருவில் சொல்லிக் கொள்ளும்படியான பெயர் இலை. பிரேமாவிற்கு அவரைவிட ஐந்து வயது குறைவு என்பதால் சாம்பமூர்த்திக்குதான் முதலில் திருமணப் பேச்சு எடுக்கப்பட்டது.
பாகீரதியின் குடும்பம் மிகப்பெரிய குடும்பம். அவள் உறவில் நிறைய டாக்டர்கள், பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். சாம்பமூர்த்தியின் ஜாதகமும் அவரது சி.ஏ-வும் அவரை எளிதில் பாகீரதி வீட்டாரிடம் கொண்டு சென்றது. பிரேமா இறுதி வரையில் தனது காதலைத் துறக்கச் சம்மதிக்காததால் சாம்பமூர்த்தி சகோதரியைத் துறக்கச் சம்மதித்தார். பிரேமாவின் கணவன் சுரேஷ் தகப்பனார் விட்டுப் போன ஆஸ்தி பாஸ்திகளை விற்று குடியையும் குடித்தனத்தையும் வளர்த்து வந்தது தெரியும். பிரேமாவிற்கும் அதே பிடிவாத ரத்தம் என்பதால் ஒரே ஊரில் இருந்து கொண்டு எந்தப் பண்டிகைக்கும், நல்ல நாள் நிகழ்வுகளுக்கும் அண்ணன் வீட்டுப் படியை மிதிக்காமல் பார்த்துக் கொண்டாள். பாகீரதியும் இதற்குப் பாதிக் காரணமாக இருந்ததைச் சொல்லியாக வேண்டும். அண்ணனின் பிள்ளைகள் இருவரும் மிக நல்ல கல்வியினைப் பெற்று வரும்போது சகோதரியின் பிள்ளைகள் இலவசக் கல்வியையும், மேற்படிப்பிற்கு உதவித் தொகையையும் எதிர்பார்த்துக் காத்திருந்ததை என்னவென்று சொல்வது?
“இன்னிக்குக் கார்த்தால அவளோட வீட்டுக்கு நேரில் நானும் நீங்களும் போய் சிரார்த்துக்கும் சுமங்கலி பிரார்த்தனைக்கும் அழைச்சிட்டு வந்திடுவோம். டிரைவரைச் சீக்கிரம் வரச் சொல்லிடுங்கோ..” சாம்பமூர்த்தி ஆச்சரியத்துடன் மனைவியை நிமிர்ந்து பார்த்தார்.
பிரேமாவின் வீடு ஆற்றங்கரைத் தெருவில் எங்கோ ஒரு மூலையில் இருந்தது. அவள் பெயரை விட சுரேஷ் பெயரைச் சொன்னவுடன்தான் உடனடி பலன் இருந்தது. அவர்கள் வீட்டு போர்டிகோவை விடக் கொஞ்சம் பெரிய வீடு. அதற்குள் தடுத்துத் தடுத்துக் கூடம் சமையல்கட்டு என்று இருந்தன. ‘இப்பவாவது மன்னிக்கு என் வீட்டு விலாசம் தெரிந்ததே’, என்று பிரேமாவும் குதர்க்கமாகக் கூறவில்லை, பாகீரதியும் தனது நடவடிக்கைகளில் எங்கும் சிறிதளவு கூட அலட்சியப் போக்கைக் காட்டவில்லை. பாகீரதி சுமங்கலிப் பிரார்த்தனைக்குப் பிரேமாவை அழைக்கப் பிரேமாவும் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டாள்.
“பெரியவன் இப்போ என்ன பண்றான்?,’என்று சாம்பமூர்த்திக் கேட்டார்.
“ஸ்ரீதர்தானே ? அவன் ஒரு தனியார் கம்பனியில் நல்ல வேலை கிடைச்சிருக்கு. பாண்டு தொகையா பத்தாயிரம் கேட்கறா . அய்யய்யோ இது ஒரு தகவலுக்குச் சொன்னேன் மூர்த்தி. யாசகம் கேட்பதற்கு இல்லை” என்றாள்.
சிரார்த்தம் நடந்து முடிந்த மறுநாள் சுமங்கலி பிரார்த்தனைக்கு சுரேஷ் பிரேமாவை இருசக்கர வாகனத்தில் கொண்டு விட்டு விட்டு போய் விட்டான். பிரேமாவும் எவ்வித முன் தீர்மானங்கள் எதுவுமின்றி சகஜமாகப் பேசுவதும் சமையலறையில் கூடமாட ஒத்தாசையாக இருப்பதும், சாங்கியத்தில் உதவி புரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த சாம்பமூர்த்திக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு எழுந்தது.
சுமங்கலிப் பெண்கள் உணவு உண்டு முடித்ததும் சம்பிரதாயமாக அந்தப் பெண்களைச் சாம்பமூர்த்தியும், பாகீரதியும் விழுந்து வணங்கினார்கள். பிரேமா முகத்தில் சலனம் எதுவுமில்லை. சுமங்கலிப் பெண்கள் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மங்கலப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். பாகீரதி ஒரு பெரிய அடுக்கில் பலகாரங்களையும் ஒரு சிறிய பாத்திரத்தில் பாயசத்தையும் வைத்துப் பிரேமாவிடம் கொடுத்தாள். “பசங்களுக்குக் கொடு” என்றாள் பாகீரதி.
பிறகு என்ன நினைத்துக் கொண்டாளோ சாம்பமூர்த்தியைப் படுக்கையறைக்கு அழைத்துக் கொண்டு போய், “உள்ள பீரோவிலிருந்து எனக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுங்கள்,” என்றாள் பாகீரதி.
“அவ்ளோ பணம் எதுக்கு?” என்று சாம்பமூர்த்திக் கேட்டார்.
“நமக்கும் மூணு பசங்க இருக்காங்க. அதில் ஒண்ணு பொண்ணு” என்றாள் பாகீரதி.
“நான் ஒண்ணு கேட்டால் நீ ஒண்ணுபதில் சொல்றயே..”
“நீங்க சொன்னதுக்கு இதுதான் பதில்.”
சாம்பமூர்த்தி மறுவார்த்தை பேசாமல் உள்ளேயிருந்து நூறு ரூபாய் கட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார். பாகீரதி ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, ஒரு சரம் மல்லிகை, ஒரு தேங்காய், அதன் மேல் பாண்டிச்சேரிக்குச் சென்று வாங்கி வந்த ஜார்ஜெட் புடவை, கூடவே ஒரு ரவிக்கைத் துண்டு வைத்து அதன் மேல் அந்தப் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டையும் வைத்துக் கிழக்குப் பார்த்துப் பிரேமாவிடம் கொடுத்தாள். பிரேமாவும் மிகச் சாமர்த்தியமாகத் தாம்பாளத்தில் நூறு ரூபாய் கட்டை மட்டும் வைத்து விட்டு மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டாள்.
“அதுவும் உனக்குதான் எடுத்துக்கோ” என்றாள் பாகீரதி.
“வேண்டாம் மன்னி. நான் சுமங்கலிப் பிரார்த்தனைக்குதான் வந்தேன்” என்று கூறி நிறுத்தினாள்.
“இல்லை நேத்திக்கு உன் பையனுக்கு கியரண்டி அதுஇதுன்னு சொல்லிண்டிருந்தியே...”
“கட்ட வேண்டும் என்று சொன்னேனே தவிரக் கட்ட வழியில்லைன்னு சொல்லலை. இருபது வருஷமா நாங்க இருக்கோமா செத்தொமான்னு கூடத் தெரியாம இருந்துட்டு இப்போ கூப்பிட்டு காம்பன்சேஷன் மாதிரி பத்தாயிரம் கொடுக்கறீங்கன்னு நான் சொல்லப் போறதில்லை. இத்தனை வருஷம் ஒரு மானமுள்ள வாழ்க்கையை வாழத் தெரிஞ்ச எங்களுக்கு இனிமேலும் வாழ முடியும் அப்படிங்கற நம்பிக்கை இருக்கு. உங்களுக்கு வேணுமானா உறுத்தல் இருக்கலாம். எங்களுக்கு இல்லை மன்னி” என்று கூறி விட்டுப் பிரேமா கிளம்பி விட்டாள்.
பாகீரதி அந்தப் பணத்தை மீண்டும் பீரோவில் கொண்டு வைக்காமல் ஒரு உறையில் இட்டுப் பூஜை அறையில் கொண்டு வைத்தாள்.
அன்றைய இரவு சாம்பமூர்த்திக்குக் கனவு வந்தது. ஆனால் கனவில் அந்தத் தலைவிரி கோலமாக எப்போதும் ஒரு பெண் வருமே அவளைக் காணவில்லை. அதற்கு பதில் ஒரு மடமும் அதில் ஒரு சந்நிதானமும் அங்கே ஒரு நாற்காலியும் அதிலிருந்து தீர்த்தம் கொடுக்க நீண்ட ஒரு கரத்தை மட்டும் பார்த்தார்.
விழிப்பு வந்தது. ஆனால் முன்பு ஏற்படுவதைப் போல உடலில் வியர்வை வெள்ளமெனப் பெருகவில்லை. மனைவியிடம் கனவு குறித்துக் கூறினார்.
“காஞ்சி பரப்பிரும்மம்னா உங்க கனவில் வந்திருப்பது?,” என்றாள்.
“அப்படியா சொல்ற?”
“ரெண்டு நாள் லீவைப் போடுங்கோ நாளைக்கு நாம காஞ்சிபுரம் போய்ட்டு வந்துடலாம்.”
அவர்கள் பயணம் காஞ்சி நோக்கி கிளம்பியது.
(தொடரும்)

Leave a comment
Upload