தொடர்கள்
கவர் ஸ்டோரி
பாகிஸ்தானில் அணுசக்தி கசிவு ??? -தில்லைக்கரசிசம்பத்

20250415145548213.jpg

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொடுத்தது.

மே10, மாலை திடீரென அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் “இரவெல்லாம் தூங்காமல் 18 மணி நேரம் மத்தியஸ்தம் பேசி போரை நான் நிறுத்திவிட்டேன். இல்லையென்றால் அணுஆயுதப்போரில் கோடிக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்” என்றார்.

திடீரென போர்நிறுத்தமும், அதை முந்திரிக்கொட்டை போல் ட்ரம்ப் அறிவித்ததும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தின.

20250415145710486.jpeg

மே10 அன்று இந்தியா பாகிஸ்தானின் 9 முக்கிய இராணுவ, விமானப்படைத்தளங்களில் தாக்குதல் நடத்தியதில் நூர்கான் (ராவல்பிண்டி அருகே) சர்கோதா மற்றும் கிரானா குன்றுகள்(அணு ஆயுதம் தொடர்புடைய இடங்கள்) பாதிக்கப்பட்டன என்றும் அங்கே அணுகதிர்வீச்சு பரவ ஆரம்பித்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிர்ச்சியுற்ற பாகிஸ்தான் சீனாவிடமும்,பின் அமெரிக்காவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அணுஆயுதம், கதிரியக்கம் கசிவு என்றவுடனே “எவன் எப்படி போனால் என்ன? நமக்கு ஆயுத விற்பனை கல்லா கட்டினால் சரி“ என்றிருந்த அமெரிக்கா, சுதாரித்து இந்திய தாக்குதலை தடுத்தே ஆகவேண்டும் என்ற நிலையில் போர்நிறுத்தத்தை அமல்படுத்தவைத்தது என்று கூறுகிறார்கள்.

மே11, அமெரிக்காவின் “B350AMS” என்ற அணுசக்திகட்டுப்பாடு அவசரவிமானம் பாகிஸ்தானில் இறங்கியதை ஓஎஸ்ஐஎன்டி (OSINT-OpenSounce INTelligence) தெரிவிக்கின்றன.

இவ்வகை விமானங்கள் உலகின் எந்த பகுதியிலும் அணுசக்தி கசிவு, கதிர்வீச்சுப்பரவல் ஏற்பட்டால் உடனடியாக அங்கே சென்று பிரச்சனையை சரிசெய்யும்.


ஜப்பானில் 2011ல் ஃபுகுஷிமா அணுமின்நிலையத்தை சுனாமி தாக்கியபோது இந்த விமானம்தான் அங்கே சென்றது.


இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அவ்வப்போது B350AMS விமானங்கள் வந்திருக்கின்றன என்றாலும் பாகிஸ்தான் என்பது அரசு, ராணுவம், தீவிரவாதக்கூட்டம் என முப்பெரும் சக்திகள் கலந்துக்கட்டி, உள்ளே அன்னியர்கள் எளிதில் வரமுடியாத மர்மதேசம்.

20250415214504322.jpg

முதல்முறையாக அமெரிக்க அணுசக்தி விமானம் அங்கே வந்திருக்கிறது என்றால் பிரச்சனை கைமீறிவிட்டது என்பதே தகவல்.

எகிப்திலிருந்து கதிரியக்கக்கசிவை கட்டுப்படுத்தும் போரான் நிரப்பிய விமானமும் பாகிஸ்தானுக்கு சென்றிருப்பதை OSINT ஊர்ஜிதப்படுத்துகின்றன. மே10 அன்று பாகிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், தொடர்ந்து ஒரு வாரமாக குறைந்த ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அணு ஆயுதகிடங்கு தாக்கப்பட்டதால் நிலநடுக்கமா என உறுதியாக தெரியவில்லை.

பாகிஸ்தான் தனது அணு ஆயுதக்கிடங்குகள் போன்ற அதிபயங்கர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக்கூட பத்திரமாக பாதுகாக்க வக்கற்று இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கிரானா குன்றுகள் பாகிஸ்தானின் முக்கிய ராணுவ பகுதியாகும்.அங்கே சுமார் 10க்கும் மேற்பட்ட நிலத்தடி அணுசக்திசுரங்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

குஷாப் அணுசக்தி நிலையத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த பாதை,

அணுஆயுத ப்ளூட்டோனியம் தயாரிக்கும் 4 கனநீர்உலைகள் வரை நீண்டு ஏறக்குறைய 75 கிமீ பரவி உள்ளது. செயற்கைகோள் படங்களின் மூலம் கிரானா குன்றுகளிலிருந்து 20 கிமீ தூரத்தில் உள்ள சர்கோதா விமான தளம் தாக்கப்பட்டிருப்பது வெட்டவெளிச்சமானது.

“கிரானா குன்றுகள் எங்கள் இலக்கல்ல.நாங்கள் அங்கே அடித்தது நீங்கள் சொல்லி தான் தெரிகிறது.”என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தியாவின் ஏர்மார்ஷல் ஏ.கே.பார்தி சொன்னார்.

அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ அதிகாரியும் தற்போதைய அமெரிக்க ரேண்ட் (RAND ) நிறுவனத்தின் ஆய்வாளர் டெரிக் க்ராஸமேன், பாக்கின் நூர்கான் விமானப்படைதளம் தாக்கப்பட்டதில், அணுஆயுத கிடங்கில் கதிரியக்க கசிவு ஏற்பட்டது உண்மை என்கிறார்.

“ எப்போது ஒரு நாட்டால் மற்றொரு நாட்டின் ரகசிய அணுஆயுதகிடங்கை எளிதில் தாக்க முடிந்து, அதை இன்னொரு நாட்டால் தடுக்க முடியவில்லையோ , நிச்சயமாக சொல்வேன் தாக்கிய அந்த நாடு போரில் வெற்றிப்பெற்றுவிட்டது என்று!” என இந்தியாவின் பாக் தாக்குதல் குறித்து பிரபல ஆஸ்த்ரிய இராணுவ வரலாற்றாசிரியரும் போர்விமான நிபுணருமான டாம் கூப்பர் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் “இந்தியாவின் இந்த நூர்கான் விமானப்படைத்தள குண்டுத்தாக்குதல், இந்தியா நினைத்தால் போகிறப்போக்கில் எதையும் எளிதில் செய்ய முடியும் ! என பாகிஸ்தானை நோக்கி விடப்பட்ட பெரும் எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ளலாம்” என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவோ, பாக்கோ, அமெரிக்காவோ இதை குறித்து அதிகார்வப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் உண்மையிலேயே கிரானாகுன்றுகள் பகுதியில் கதிர்வீச்சுபாதிப்பு உண்டாகியுள்ளதா? என பில்லியன் டாலர் கேள்வியெழுகிறது.

தீவிரவாதிகளை மடியில் கட்டிக்கொண்டு பாகிஸ்தான், சீனா இருக்கும் தைரியத்தில் இந்தியாவை துச்சமாக நினைத்து இங்கே தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதும், எங்கள் கைகளில் அணு ஆயுதம் இருக்கிறது என பயமுறுத்துவதும் இனி வேலைக்காகாது.

பாகிஸ்தானின் அஸ்திரத்திலேயே அடித்து இந்தியா மரணபயத்தை காண்பித்திருக்கிறது என்பதுதான் நிஜம்.

அணு ஆயுத மரண விளையாட்டைப் பற்றி விகடகவியில் வெளிவந்த கட்டுரை இங்கே.....