தொடர்கள்
விளையாட்டு
இந்திய அணியின் ஹாட்ரிக் ரிட்டையர்மென்ட் - லண்டனிலிருந்து கோமதி

20250417000746384.jpeg

இந்திய அணியின் ஹாட்ரிக் ரிட்டையர்மென்ட்

கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் போன்று, தற்பொழுது ஹாட்ரிக் ரிட்டையர்மென்ட் என்று கூறும் வகையில் அஸ்வின், ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து, விராட் கோஹ்லி டெஸ்ட் போட்டியிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஒரு நாள் போட்டிகளில் தான் தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்திருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் விராட் இல்லாதது, இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பு. கிரிக்கெட்டில் அவரது திறமை,எதிரணியினரை திணறடிக்க வைக்கும் தன்மை, நாம் அறிந்ததே. இவை மட்டுமே அவரது புகழுக்கு காரணமல்ல. கிரிக்கெட் விளையாட்டின் உண்மையான வீரர் என்பதை ஒவ்வொரு ஆட்டத்திலும் நிரூபித்திருக்கிறார். "கிங் கோஹ்லி" என்கிற அடைமொழிக்கேற்ப பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலும் இந்திய அணியின் வெற்றியை மட்டுமே தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர். ஒவ்வொரு ஆட்டத்திற்கும், தன்னுடைய தரத்தை உயர்த்தி கொண்டே சென்றது இவரது தனிச்சிறப்பு. உடற்பயிற்சி, தனி மனித ஒழுக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கியவர். விராட் கோஹ்லி கிரிக்கெட்டில் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயங்கியதே இல்லை. அதற்காகவே, இவரது விளையாட்டுகளை காணத் துடிக்கும் ரசிகர்களில் நானும் ஒருத்தி. டெஸ்ட் போட்டிகளில் அந்த வெறுமை இன்னும் சில காலங்கள் இருக்கும் என்றே கருதுகின்றேன். விராட்டின் காலம், ஒரு சகாப்தம் என்று கூறும் அளவிற்கு கிரிக்கெட்டின் பொற்காலம் என்றே கூறலாம். இந்தியா டெஸ்ட் உலகில், முதல் இடத்தை பிடித்ததும் இவரது தலைமையில் தான். தான் தலைமையேற்ற அறுபத்தி எட்டு போட்டிகளில், நாற்பது டெஸ்ட் போட்டிகளை வென்று, பதினொன்று போட்டிகளை சமன் செய்து, உலகின் நம்பர் ஒன் அணியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி விளங்கியது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றியும் இவரது தலைமையில் தான்.

விராட் கோஹ்லி மொத்தம் நூற்றி இருபத்தி நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடி 9230 ரன்கள் எடுத்துள்ள நிலையில் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. பத்தாயிரம் ரன்கள் என்னும் இலக்கை எட்டுவது என்கிற கனவு கனவாகவே நின்று விட்டது. விராட் டெஸ்ட் கிரிக்கெட்டின் அணித்தலைவராக அறிவிக்காத நிலையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும், பசிசிஐ இவரது முடிவை பரிசீலிக்குமாறு கூறியதாகவும், கூறவில்லை என்றும் செய்திகள் வந்த நிலையில், ஜூன் மாதம் இங்கிலாந்தில் நிகழவிருக்கும் டெஸ்ட் தொடரில் இவர் இல்லாதது மற்றுமொரு ஏமாற்றம். டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த இரண்டு வருடங்களாக இவரது ஆட்டம் குறிப்பிட்டு சொல்லும் விதத்தில் இல்லை என்றாலும், இவர் அணியில் இருப்பதே பலம், என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

விராட்டின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, இவரது ஆட்டத்தையும் புகழ்ந்துள்ளார். டெண்டுல்கருக்கு இணையாக நாம் இவரைக் கூறினாலும், இவரது டெஸ்ட் கிரிக்கெட், தென்ஆப்ரிக்க வீரரான ஹாசிம் அம்லாவோடு ஒப்பிடும் விதத்தில் அமைந்துள்ளது.இருவருக்குமான டெஸ்ட் போட்டி புள்ளிவிவரங்கள் கிட்டத்தட்ட பொருந்தும் வகையில் உள்ளது வியப்பளிக்கிறது. இருவருமே சராசரி நாற்பத்தியாறு ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்ததோடு, மொத்தம் ஒன்பதாயிரம் என்ற இலக்கை தொட்டுள்ளனர்.

கவுதம் கம்பீரின் கையில் இந்திய அணி உள்ளது என்னும் நிலையில், இளைஞர்களின் கையில் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, அடுத்த கட்டத்திற்கு இந்திய அணியை எடுத்து செல்வார்கள் என்பதே பலரது எதிர்பார்ப்பு. ஐபிஎல் மறுபடியும் துவங்க உள்ள நிலையில், விராட்டை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கப் போகிறோம். அதோடு 2027ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி வரை இவர் விளையாடி அதிலும் சாதனை படைப்பார் என நம்புவோம். இப்படிப்பட்ட சாதனையாளர் வாழ்ந்த காலத்தில் நாம் இருப்பது, இவரது ஆட்டத்தை நாம் நேரில் காணும் வாய்ப்பை நினைத்து நாம் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். விராட் கிரிக்கெட் உலகின் முடி சூடா மன்னன், கிங் கோஹ்லிக்கான இடம் அவருக்கு மட்டுமே!