தொடர்கள்
பொது
நீதி வென்றது– விகடகவி நிருபர் குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு.

20250415191748191.jpeg

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது கோவை மகளிர் நீதி மன்றம்.

சிபிசிஐடியிருந்து பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு அத்தனைபேரின் கவனத்தையும் ஈர்த்ததற்கு முக்கிய காரணம் அதனின் வக்கிரமும், கொடூரமும். பெண்களை மயக்கி, பின் வீடியோ எடுத்து, கூட்டு பாலியலில் வற்புறுத்தி துன்புருத்தி இருக்கிறது ஒரு கும்பல்.

அந்த 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது மகளிர் நீதி மன்றம்.

இவ்வழக்கை நீதிபதி நந்தினி தேவி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக விசாரித்து வந்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலம், சுமார் 200 ஆவணங்கள், 400 மின்னணு தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடந்திருக்கிறது. அதன் முடிவே இந்த தீர்ப்பு. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ. 85 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
திருநாவுக்கரசு, மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை, சபரிராஜன் 4 ஆயுள் தண்டனை, சதீஷ், ஹெரோன் பால் 3 ஆயுள் தண்டனை, வசந்தகுமார் 2 ஆயுள் தண்டனை, பாபு, அருளானந்தம், அருண்குமார் 1 ஆயுள் தண்டனை.

ஒரு ஆயுள் தண்டனை என்றாலும்,சாகும் வரை சிறை தான். இரண்டு மூன்று என்பது அவர்களின் குற்றத்தின் தீவிரம். அது 5 ஆயுள் தண்டனை வரை இருப்பதை பார்க்கும் போது கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு கொடூரம்.

48 சாட்சிகளில் யாருமே பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறுப்பிடத்தக்கது.

ரகசிய குழுக்களை அமைத்து பாதிக்கப்பட்டவர்களின் பெயர் கூட வெளியில் வராமல் விசாரணை நடந்திருக்கிறது.

தொழில் நுட்பமும் மிக மிக உதவியாக இருந்திருக்கிறது.

நீதி மன்றம், காவல் துறை, சாட்சிகள் எல்லாம் ஒரே நோக்கம் கொண்டு ஒன்று சேர்ந்ததால் கிடைத்த நீதி.

மேல் முறையீடு போகலாம். அதிலும் பெரிய மாற்றம் இருக்காது என்பது தான் பெறுவாரியான கருத்தாக இருக்கிறது.

எத்தனையோ வாய்தாக்களையும், மற்ற பல தடங்கல்களையும் தாண்டி வென்று இருக்கிறது இந்த வழக்கு.

இதற்கான போராடிய அனைவரும் வணக்கத்துக்குரியவர்கள்.

நிறைய பாலியல் வன் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வராததற்கு காரணம் பாதிக்கப்பட்டவர்களின் மீதே பழி சொல்லும் இந்த சமூகத்தினால் தான்.

அதை எல்லாம் மீறி வெட்கப்படவேண்டியவர்கள் குற்றவாளிகளே என்று உணர்த்தும் இது போன்ற தீர்ப்பை ஒரு மைல் கல்லாகத்தான் தான் கருதவேண்டும்.

நிர்பயா வழக்கிற்கு பிறகு பாலியல் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைப்பது வரவேற்கத் தக்க ஒன்று என்று மூத்த வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

யூடியூப் சேனல் ஒன்றில் ஒரு கமெண்ட் படிக்க நேர்ந்தது. “ மகிழ்ச்சி தரும் தீர்ப்பு தான், ஆனால் இது போதாது. இவர்களை எல்லாம் எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்தடுக்க வேண்டும்” .
அரசாங்கத்திற்கு அனாவசியமா செலவுதான்.இவங்களுக்கு எதுக்கு வாழ்நாள் முழுக்க சோறு போடணும்? மரண தண்டனை குடுத்திருக்ணும் என்று என் தோழி கோபத்துடன் கூறினாள்.
சரி தான் என்று என்னுள் சொல்கிறது கடவுளும், மிருகமும் சேரும் பாதி.