தொடர்கள்
அழகு
ட்ரெக் தமிழ்நாடு இந்த ஆண்டுபுதிதாக இரண்டு டிரெக்கிங் பாதைகளை அறிமுகம் செய்துள்ளது - ப ஒப்பிலி 

20250416222001286.jpeg

கடந்த ஆண்டு துவக்கப்பட்ட மாநில வனத்துறையின் ட்ரெக் தமிழ்நாடு நிறுவனம் தனது இரண்டாவது ஆண்டில் கூடுதலாக இரண்டு ட்ரெக்கிங் பாதைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

நாகர்கோவிலில் உள்ள காளிகேசத்திலிருந்து மாறாமலை பகுதிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள பிலிகுண்டுலுவிலிருந்து ராசிமணல் வனப்பகுதிக்குள்ளும் புதிய இயற்கை வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் இடங்களை சேர்த்து மொத்தம் ஒன்பது இயற்கை வழித்தடங்களில் ட்ரெக் தமிழ்நாடு இயற்கை ஆர்வலர்களை ட்ரெக்கிங் அழைத்து செல்கின்றது.

ட்ரெக் தமிழ்நாடின் நிர்வாக இயக்குனர் விஸ்மிஜு விஸ்வநாதன் கூறுகையில் வனத்துறையின் இந்த புதிய முயற்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ட்ரெக்கிங் செல்ல பொதுமக்கள் முன்வருவார்கள் எனத்தெரிகிறது என்கிறார் அவர்.

இந்த வருடம் மார்ச் முதல் ஏப்ரல் 15 தேதி வரை ட்ரெக்கிங் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. ஏனெனில் இந்த காலகட்டத்தில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஒன்றரை மாத காலம் முடிந்து ஏப்ரல் மாத மத்தியில் மீண்டும் துவக்கப்பட்ட ட்ரெக்கிங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆன்லைன் மூலம் மக்கள் விண்ணப்பித்துள்ளனர்.

துவக்கப்பட்ட முதல் ஆண்டில் மொத்தம் ஐய்யாயிரத்து எழுநூற்று எழுபத்தியாறு (5,776) பேர் டிரெக்கிங் சென்று வந்தனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்பொழுது, இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர் என்கிறார் அவர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குடியம் பாறை குகைகள், கொடைக்கானலில் வெள்ளகவி, லாங்வூட் சோலைக்காடுகள் உதகமண்டலம், ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள மானாம்பள்ளி, ஏற்காடு பகுதியில் உள்ள நாகலூர் சன்னியாசிமலை சிகரம், முதுமலை முகுர்த்தியில் உள்ள பார்சன் வேலி டிரெக்கிங் பாதை, ஏலகிரியில் உள்ள சுவாமிமலை ஆகியவற்றுக்கு டிரெக்கிங் செல்வதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றார் விஸ்வநாதன்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முக்குர்தி தேசிய பூங்கா, மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள மானாம்பள்ளி ஆகிய இரண்டு டிரெக்கிங் பகுதிகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. முக்குர்தி தேசிய பூங்காவில் வரையாடுகளை காணலாம் (அதிஷ்டமிருந்தால்).

அதே போல மானாம்பள்ளி ஒரு மழைக்காடுகள் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி. இங்கு யானைகள் அதிக அளவில் காணலாம். மாலை வேளைகளில் வனத்துறையின் வேட்டைத்தடுப்பு காவலர்களின் ஓய்வுக்கொட்டகைகள் அருகே யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே மிக கவனத்துடன் இங்கு சென்று வருவது முக்கியம்.

இது மட்டுமல்ல இந்த இரண்டு பகுதிகளுமே அட்டை பூச்சிகள் நிறைந்த பகுதிகள். குறிப்பாக மழைக்காலங்களில் அட்டை பூச்சிகளின் தொந்தரவு அதிகம் இருக்கும். அதற்கு தக்கவாறு ஷூ மற்றும் சாக்ஸ் எடுத்துச்செல்வது அவசியம். அட்டைகள் நம் பாதங்களில் ஏறி நம் ரத்தத்தை உறிஞ்சாமலிருக்க பிரத்தியேகமான சாக்ஸ்கள் இப்போது ஆன்லைனிலே கிடைக்கின்றன.

இந்த இரண்டு இடங்கள் தவிர நாகர்கோயிலில் உள்ள காளிகேசம் வனப்பகுதி மிகவும் அழகான ஒன்று. இந்த பகுதிக்கு செல்லும் வழிநெடுக ரப்பர் தோட்டங்களையும், அதில் பால் எடுப்பவர்களையும் காணலாம். காளிகேசத்தில் ஒரு அருவியுடன் கூடிய சிறியதொரு நீர்நிலை உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு இங்கு சில நண்பர்களுடன் பல மணிநேரம் குளித்து கும்மாளமிட்டது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

2025041622212142.jpeg