தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதம் வைகாசி. இதனை வைகாசம் என்றும், மாதவ மாதம் என்றும் போற்றப்படுகிறது. இந்த மாதம் வாழ்வில் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் கொடுக்கக்கூடியது. வைகாசி மாதத்தில் சூரிய பகவான் ரிஷப ராசியில் தனது பயணத்தைத் தொடங்குவார். இந்த மாதம் இளவேனில் எனும் வசந்த காலம். இந்த மாதத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறையத் துவங்கி, வசந்த காலத்தின் இதமான காற்று வீசத் துவங்கும். வசந்தம் உண்டாகக் கூடிய காலநிலை, விழாக்கள், வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதால் வைகாசி மாதமானது வசந்த வைகாசி என்றும் அழைக்கப்படுகிறது.
வைகாசி பௌர்ணமியை, மதி நாண் முற்றிய மங்கலத்திருநாள் என்று போற்றுகிறது மணிமேகலை. இது மஹாவிஷ்ணு மற்றும் முருகப்பெருமான் ஆகியோரின் வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும்.
வைகாசி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது முருகப் பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்றான வைகாசி விசாகம் தான். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் தான் முருகப் பெருமான், ஆறு முனிவர்களின் சாபங்களை நீக்கிய நாளாகக் கருதப்படுகிறது. அதனால் தான் வைகாசி மாதத்தைப் பாவங்கள் போக்கும் மாதம் என சொல்கிறோம். இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மகாவிஷ்ணுவைத் துளசி இலைகளால் பூஜை செய்தால் நற்பேறுகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
புராணங்களில் வைகாசி மாதம்:
வைகாசி மாதத்தில் தான் பல அவதாரங்கள் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாகச் சரவணப்பொய்கையில் தோன்றியது.
வைகாசி சுக்ல சதுர்த்தியில்தான் மஹாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார்.
வைகாசி மாத சுக்ல பட்ச தசமி நன்னாளில்தான் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயாரை நாராயண வனத்தில் மணம் புரிந்து கொண்டார்.
வைகாசி பௌர்ணமி அன்று தான் கௌதம புத்தர் அவதரித்தார். அவர், கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமியே.
திருஞானசம்பந்தர், பெரிய புராணம் அருளிய சேக்கிழார், நம்மாழ்வார், திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கப்பெருமாள் அரையர், பெரிய திருமலை நம்பி, பராசர பட்டர், வியாசபதி போன்றோர் அவதரித்ததும் வைகாசி மாதத்தில்தான். காஞ்சி ஆதிசங்கரர் தோன்றியது வைகாசி பஞ்சமி, 'நடமாடும் தெய்வம்' என்று பக்தர்களால் போற்றி வணங்கப்பட்ட காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார். வைகாசி விசாகத்தில் யமதர்மராஜன் அவதரித்ததாகப் புராணம் கூறுகிறது. தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது திரயோதசி. மகான் குமரகுருபர சுவாமிகளின் குரு பூஜை தினமும் வைகாசி மாதத்தில்தான் வருகிறது. வைகாசி மாதம் சிவபெருமானைப் போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம் ரிஷப விரதம் ஆகும்.
நாயன்மார்களுள் கழற்சிங்கர், சோமாசி மாறர், திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர், முருகநாயனார், நமிநந்தியடிகள் ஆகியோர் அவதரித்ததும் வைகாசி மாதத்தில்தான். திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்குப் பரமன் பாசுபதாஸ்திரம் வழங்கியதும் வைகாசி விசாகத்தில்தான். நாரத முனிவர் அம்பரீஷரிடம் பெருமாளுக்கு மிகவும் பிடித்த மாதம் வைகாசிதான் என்று சொல்லி இருப்பதாகப் புராணக் குறிப்புகள் எடுத்துரைக்கின்றன.
முருகனுக்கு வைகாசி விசாகம்:
வைகாசி விசாகம் எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தில் சில கோயில்களில் தேர்த் திருவிழா மற்றும் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறுகின்றது. பக்தர்கள் பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்திக்கொள்ளுதல், பாதயாத்திரை செல்லல் போன்ற வேண்டுதல்களை இந்நாளில் நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.
வைகாசி விசாகம் வழிபாடு:
வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி. புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
வைகாசி விசாகம் அன்று திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் ஏதேனும் ஒன்றைக் காலையிலும், மாலையிலும் படிக்கலாம். முடியாதவர்கள் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ அல்லது ஓம் முருகா’ ஆகிய ஏதாவது ஒன்றைச் சொல்லலாம்.
அன்று முருகன் கோவிலுக்குச் சென்றும் வழிபாடு செய்யலாம். மற்றும் வரும் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம், தயிர்ச் சாதம், விசிறி ஆகியவை வழங்கலாம்.
வைகாசி மாதம், பாவங்களைப் போக்கி நற்பேறுகளை அள்ளி வழங்கும். கடும் கோடையில் இருந்து வசந்த காலமாக மாற்றும். இந்த இனிய வசந்த காலத்தில் இறைவழிபாடு செய்து, வாழ்வில் வளம் பெறுவோம்!!
Leave a comment
Upload