பத்து லட்சம் மைல்களுக்கு மேல் பறந்த அனுபவம் இந்த விமான விபத்தை பார்க்கையில் முதுதுக் தண்டு சில்லிடுகிறது. முன்பெல்லாம் விமானத்தில் ஏற்படும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை முகநூலில் இன்னொரு விமானக் கதை என்று பதிவிடுவதுண்டு.
நன்றி-தினமணி
இது சோகக் கதை.
என்னை விட ஏராளமானோர் அன்றாடம் விமானத்தில் பறக்கும் ஆசாமிகள்.
ஒவ்வொரு டேக் ஆஃப் போதும் ஒவ்வொரு லாண்டிங் போதும் லேசாக கண் மூடி ஒரு குட்டி பிரார்த்தனை செய்யும் சக பயணிகளை எப்போதும் பார்ப்பது உண்டு.
அந்த ஒரு சின்ன பிரார்த்தனை மட்டுமே நம்மால் ஆகக் கூடிய விஷயம்.
ஒரு விமானத்தில் அமர்ந்திருக்கும் போது வேறு எதுவும், எந்த நிகழ்வும் நம் கையில் இல்லை. ஏன் இரயிலில் போகும் போது மட்டும் இருக்கிறதா என்று கேட்டால், இது ஆகாயத்தில் புவியீர்ப்புக்கு எதிரே நடக்கும் விஞ்ஞான சாகசம்.
விமானம் மேலே டேக் ஆஃப் ஆகும் போது ஜிவ்வென்று வயிற்றில் ஒரு உணர்வு வரும். அது போலவே தரையிறங்கும் போதும்.
விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டேக் ஆஃப் தருணத்தை விமானத்தில் அடிக்கடி பயணிக்கும் என்னைப் போன்ற பலருக்கும் புரிந்து கொள்ள முடிவதால் மேலும் மேலும் மேலும் வலிக்கிறது.
டேக் ஆஃப் லாண்டிங் இரண்டையும் கடந்து விட்டால் விமானப் பயணம் பெரிய தொல்லையில்லை. சில சமயங்களில் டர்புலன்ஸ் என்று சொல்லப்படும் தடதடாக்கள். ஏர் பாக்கெட்ஸ் என்று சொல்லப்படும் ஆகாய நீர்குமிழிகளில் கடந்து வெளி வரும் போது விமானம் பேயாட்டம் ஆடும். ஆனால் அதை பைலட் முன்னரே தெரிந்து கொண்டு எச்சரித்து விடுவார் என்பதால் அங்கே ஒரு பிரார்த்தனை பலருக்கு ஓடும்.
டர்புலன்ஸினால் விமான விபத்துக்கள் ஏற்படுவது அரிதிலும் அரிதானது.
எனக்குத் தெரிந்து பலருக்கு விமான ஃபோபியாவே இருக்கிறது. அவர்களால் பறக்கவே முடியாது. கொரிய அதிபர் கூட அப்படித்தான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
அதிருக்கட்டும். என்ன தவறு செய்தார்கள் அந்த பயணிகள்.
எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். பறவையாக இருக்கலாம். அல்லது எஞ்ஜின் கோளாறாக இருக்கலாம். ஃபிளாப் விரைவில் இழுக்கப்பட்டதாக இருக்கலாம். திடீர் விமான நிபுணர் போல ஆளுக்காள் கருத்து சொல்லலாம்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போன அடுத்த நாள் இன்னொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பறந்த அன்று, பேப்பரில் தலைப்புச் செய்தியை மேய்ந்து கொண்டிருந்தேன். அங்கு வந்த பணிப்பெண் அந்த பேப்பரையும் என்னையும் பார்த்து லேசாக ஒரு வலியுடன் புன்னகைத்து நகர்ந்தார். அதில் ஏராளமான செய்திகள் பொதிந்திருந்தது. இதுவும் கடந்து போகும். ஒவ்வொரு செய்திக்கும் கலங்கினால் அன்றாட வாழ்வு என்னாகும் என்று அவர் கேட்பது போல இருந்தது.
இத்தனை பேர் இறந்து போனாலும் ஒரே ஒருவர் எழுந்து நடந்து விமானத்தில் இருந்து எதுவுமே நடக்காதது போல் பேசிக் கொண்டே வெளியே வந்தது இறையின் செயல் இல்லாமல் வேறு என்ன ??
சரி விமானத்தில் பறப்பவர்களை இழப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் மருத்துவ கல்லூரி விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் இறப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. அவர்கள் என்ன தவறு செய்தார்கள் ??
இதற்கு காரணம் விமானநிலய கட்டிட விதிகளை மீறுவது தான் காரணம் என்று சொல்கிறார்கள். சென்னை மீனம்பாக்கத்திலும் சரி, கோவை விமான நிலயங்களிலும் சரி மற்ற இந்திய நகரங்களிலும் சரி அத்தனை விதி மீறல்களும் நடக்கின்றன. எல்லாம் அரசியல் தான் காரணம்.
இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனதும் சென்ற வார பெங்களூரு சோகம் மறக்கப்பட்டு விடும்.
கும்பமேளா இறப்புக்களும் மறக்கப்பட்டு விடும்.
எத்தனையோ கனவுகளை சுமந்து சென்று, சாதாரண ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தூரங்களை துரத்தி, அடுத்த கண ஆபத்தை அறியாமல் குதூகலித்து பயணித்து, ஒரு நொடியில் சாம்பலாகிப் போன அத்தனை பயணிகளுக்கும், அந்த விமானத்தால் மருத்துவ விடுதியில் உயிரிழந்தவர்களுக்கும், விகடகவியின் ஆழ்ந்த இரங்கல்கள்.
Leave a comment
Upload