தொடர்கள்
கவர் ஸ்டோரி
தமிழ் சினிமாவில் ட்ரம்ப் -மிஸ்டர் ரீல்

கூலிலி

இந்தியா மீது வரி மேலும் வரி என்று வரி டார்ச்சர் பண்ணுவதால் டிரம்ப் மீது இந்தியர்கள் மிகவும் கோபமாக இருக்கிறார்கள் என்று ஒரு தகவல் வெள்ளை மாளிகைக்கு கிடைத்தது.

வலைதளத்தில் டிரம்பை ஏகத்துக்கு கலாய்க்கிறார்கள் என்ற கூடுதல் தகவலும் ட்ரம்பை யோசிக்க வைத்தது

ட்ரம்பின் ஊடக செயலாளர் உதட்டழகி கரோலின் ஒரு யோசனை சொன்னார்.

இந்தியர்களின் சினிமா மோகம் சொல்லி மாளாது.

20250708201644170.jpeg

நன்றி: தினமணி

நீங்கள் பேசாமல் தமிழ் சினிமாவில் நடியுங்கள் அதற்கப்புறம் உங்கள் இமேஜ் ரசிகர் மன்றம் என்று வேற லெவலில் இந்தியாவில் கொண்டாடப்படுவீர்கள் என்று யோசனை சொன்னார் .

அப்படியானால் அதற்கான வேலையை நீயே பார்த்து நல்லபடியாக செய்து கொடுத்தால் அமெரிக்காவுக்கு அடுத்து உதட்டழகி கரோலின் ஜனாதிபதி என்று சொல்ல அடுத்து நடந்தது தான் அதகளம்.

ட்ரம்ப் நடிக்கும் படத்தை இயக்கப் போவது கே.எஸ்.ரவிக்குமார் என்ற தகவல் ஆபீஸ் பையன் மூலம் மிஸ்டர் ரீலுக்கு கிடைத்தது. உடனே கே.எஸ்.ரவிக்குமாரை சந்தித்தார் மிஸ்டர் ரீல்.

கே. எஸ். ரவிக்குமார் சொன்னது

கரோலின் தான் முதலில் என்னிடம் பேசினாள். உங்கள் குடும்பத்திற்கு இலவச விசா வெள்ளை மாளிகைக்கு எதிரில் ஏழு கிரவுண்ட் இடம் பட்டா போட்டு தரப்படும் படம் இயக்குவதற்கு கூலியாக 100 மில்லியன் டாலர் வரியில்லாமல் தரப்படும் என்று சொன்னார். இந்த டீல் எனக்கு மிகவும் பிடித்தது .

உடனே கதை தயார் செய்தேன் படத்தின் பெயர் கூலிலி

ட்ரம்புக்கு இரண்டு ராசி இல்லாத நம்பர் எனவே படத்தின் பெயர் மூன்று எழுத்து இருக்க வேண்டும் என்பதால் எக்ஸ்ட்ராவாக ஒரு லி சேர்த்தோம்.

கதை ஒரு கொடுங்கோல் அதிபர் வரி மேலும் வரி என்று உலகத்தை கொடுமைப்படுத்துகிறார்.

வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டால் கூட அதுக்கும் வரி என்றெல்லாம் உட்கார்ந்து யோசித்து' வரி தமிழில் எனக்குப் பிடித்த வார்த்தை என்றெல்லாம் வெள்ளரிக்கா நாட்டு அதிபர் ரஷ்யா 'டார்ச்சர் பண்ணுகிறார்.

வெள்ளரிக்கா நாட்டு அதிபருக்கு புத்திமதி சொல்லி அவரை திருத்தி' தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை வரி' என்று அவரே சொல்ல வைக்கிறார் கதாநாயகர்" ட்ரம்ப் காந்தா" ,அவருக்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா.

வெள்ளரிக்கா அதிபர் படத்தில் வடிவேலு நடிக்கிறார். இந்தப் படம் இந்திய ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழிகளிலும் வெளியாகும்.

இந்தப் படத்தில்' நீதானே என் வரி நான் தானே உன் ஜிஎஸ்டி' என்ற பாடலை அனிருத்தும் முத்த மழை புகழ் பாடகியும் பாடி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ட்ரம்புக்கு ஜோடியான ராஷ்மிகா மந்தனாவுக்கு கூலியாக 15 அணுகுண்டு, ஏழு அதிநவீன ராணுவ விமானம், 67 பீரங்கி தந்திருக்கிறார்கள். இதெல்லாம் ராஜ்நாத்சிங் அங்கிளிடம் தந்து பணம் பார்த்து விடுவேன் என்று சொல்லிவிட்டார் அம்மணி.

அமெரிக்க அதிபர் வெளிநாட்டுக்கு பயணம் செல்லும் விமானத்தை ராஷ்மிகாவுக்கு கொடுத்துவிட்டார் ட்ரம்ப்.

இதை கரோலின் எதிர்த்து கோபமாக ஏதோ சொல்ல வர' நீ கோபத்திலும் அழகாய் இருக்கிறாய் கரோலின் ' என்று ட்ரம்ப் சொன்னதும் வெட்கப்பட்ட கரோலின் "ராஷ்மிகா நம்ம பொண்ணு நம்ம செய்யாம யார் செய்ய போறாங்க" என்று அப்படியே உல்டாவாகி விட்டார்.

ரவிக்குமாரிடம் இந்தப் படம் எப்போது ரிலீஸ் என்று கேட்டபோது நம்ம தலைவர் படம் என்றைக்கு ரிலீஸ் ஆகிறதோ அன்றைக்கு ரிலீஸ்.

தலைவர் படம் ரிலீசுக்கு தமிழ்நாட்டில் தியேட்டர் கிடைக்குமோ என்பது சந்தேகம் தான்.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா தியேட்டர்களையும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி மாறன் விலைக்கே வாங்கி விட்டார்.

எல்லா ஓடிடி தளமும் தயாநிதி மாறன் தான் உரிமையாளர். அவருக்கு ஏது இவ்ளோ பணம் என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் என் காதில் சத்தமா கேட்கிறது.

சமீபத்தில் நடந்த ஒரு பஞ்சாயத்தில் அவருக்கு 20 ஆயிரம் கோடி கிடைத்திருக்கிறது.

ட்ரம்ப் நடிக்கப் போகிறார் என்ற விஷயம் தெரிந்ததும் மோடிக்கு கொஞ்சம் பூச்சாண்டி காமிக்க அவரே '' பையன் பிக்சர்ஸ் ' என்று சொந்தமாக தயாரிப்பு கம்பெனி தொடங்கி விட்டார்.

ட்ரம்புக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க நடிகை மீனாவையும் ஏற்பாடு செய்தார்.

இந்தப் படத்தில் டிரம்ப்புக்கு அம்மாவாக மீனா நடிக்கிறார்.

அகில உலக ட்ரம்ப் ரசிகர் மன்ற தலைவராக நமது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் அவர் குடும்பத்துக்கு ட்ரம்ப் வரி விலக்கு தந்திருக்கிறார்.

கூடவே திருமதி துணை முதல்வரை அமெரிக்க செனட் உறுப்பினர் ஆகிவிட்டார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் திருமதி போட்டி போட வாய்ப்பு இருக்கிறது .

இன்னொரு முக்கிய விஷயம் இந்தப் படத்தில் ராகுல் காந்தி சீனா அதிபராக நடிக்கிறார்.

படம் டப்பிங் எல்லாம் முடிந்து விட்டது.

மெரினா பீச்சில் தான் இசை வெளியீட்டு விழா.

எல்லா சேனல்களுக்கும் இலவசமாக ஒளிபரப்பு உரிமை தந்து விட்டோம்.

பிரதமர் மோடி தான் இசைத்தட்டு வெளியிட்டு ட்ரம்பை புகழ்ந்து திருக்குறள், நாலடியார், ஆத்திச்சூடி போன்றவற்றை சொல்ல இருக்கிறார் இனிமே தமிழ் சினிமா இல்ல இல்ல இந்திய சினிமாவே டிரம்பை தான் சுற்றி வரும் .

தமிழ் சினிமாவில் ட்ரம்ப் நடிக்கிறார் என்ற செய்தி கேள்விப்பட்டு இந்திப்பட தயாரிப்பாளர்கள் ஓரியாப்பட தயாரிப்பாளர்கள் பல மொழி தயாரிப்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு ட்ரம்புக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

என்னுடைய கால்ஷீட் இப்போதைக்கு 2100 வரை ஹவுஸ்புல் என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

கிளைமேக்ஸில் டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்குமா கிடைக்காதா என்பது தான் வெள்ளித் திரை சஸ்பென்ஸ். !!