விகடகவியில் இந்த வாரம் ‘காமெடி சிறப்பிதழ்' என்றதும், கோவி.கோவன். தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததும், “ஓ! மதன் சாரின் விகடகவி....வாங்க, வாங்க… நிறைய பேசுவோம்” என்று நமக்கு அழைப்பு விடுத்தார்.
கோவி.கோவன் நீண்ட காலமாக பல்வகை கிரேன் தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
அவருடன் மினி பேட்டி …
“உங்களுக்கு ஜோக்ஸ், கார்ட்டூன்கள் மீது …அதிக ஆர்வம் வர காரணம் என்ன?” என்பதற்கு, எடுத்தவுடனே ‘டாப்’ கியரில் “மதன் சார், மதன் சார், மதன் சார் மட்டுமே… ஸ்கூல் படிக்கிற காலத்துல விகடன்ல வரும் மதன் சாரோட ஜோக்குகள், எனக்கு ரொம்ப பிடிக்கும். திரும்பத் திரும்ப ஆச்சரியத்துடன் பார்ப்பேன்.
‘எப்படி, இப்படி எல்லாம் கற்பனை பண்ணி கார்ட்டூன் போடுறாங்க’னு. அவருடைய ஜோக்ஸ்களுக்கு ரொம்ப வருஷம் ரசிகனாவே இருந்தேன். ‘நாமளும் இதுமாதிரி ஜோக் எழுதினா என்ன?’ என நினைத்து, விகடனுக்கு சில ஜோக்ஸ் அனுப்பி வைத்தேன். என்ன ஆச்சரியம்! முதல் ஜோக்கே விகடன்ல முதல் பக்கத்தில் வெளிவந்தது. அப்புறம் என்ன… தொடர்ந்து கத்தை கத்தையா ஜோக்ஸ் எழுதி விகடனுக்கு அனுப்பினேன். ஆனால், நான் எதிர்பார்த்த அளவுக்கு ஜோக்ஸ் வரலை. நானும் விடாம அனுப்பிட்டு இருந்தேன்.
ஒரு தடவை அப்போதைய ஆனந்த விகடன் பாணியில, ஒரு கற்பனை கையெழுத்து ஆனந்த விகடன் புத்தகத்தை தயாரித்து அனுப்பினேன். அது மதன் சார் கண்ணில் பட, தன்னை வந்து சந்திக்கும்படி எனக்கு ஒரு கடிதம் வந்தது. முதன்முறையாக அவரை ஓடி சென்று சந்தித்தேன். மிகவும் பாராட்டியவர், ‘அந்த வாரம் நான் அனுப்பி இருந்த 50 ஜோக்குகளில், 23 ஜோக்குகள் பிரசுரத்துக்கு செலக்ட் ஆயிருக்கு’ என்ற மகிழ்ச்சி செய்தியை தெரிவித்தார். அப்போ ஆரம்பிச்ச ஆட்டம், ஆயிரக்கணக்கான ஜோக்குகள் விகடனில் தொடர்ந்து வர காரணமாக அமைந்தது!”
இதைத் தொடர்ந்து, “ ‘கார்ட்டூனில் குறைவான கோடுகள், வசனத்தில் குறைவான எழுத்துக்கள்… சிரிப்பை வரவழைத்தால், அதுதான் சிறந்த ஜோக்!’ - இதுதான் மதன் சார், எனக்கு போதித்த மந்திரம். அவரையே மானசீக குருவாக ஏற்று, அவரது கார்ட்டூன்களையே வரைந்து பழகியதால், இன்னமும் அவரது ஸ்டைலில் தான் எனது கார்ட்டூன்களை வரைகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி!”
“எஸ்.வி.சேகர் உடனான உங்களின் நட்பு?” பற்றி கேட்டோம். அதே புன்னகையுடன், “எனக்கு ஜோக்ஸ் எப்படி பிடிக்குமோ, அதேபோல் எஸ்.வி.சேகர் சாரை ரொம்ப பிடிக்கும். கடந்த 1999-ம் வருஷம், நான் விகடனில் அதுவரை எழுதியிருந்த ஜோக்ஸ்களின் தொகுப்புடன் எஸ்.வி.சேகர் சந்தித்தேன். அவற்றை மிகவும் ரசித்தவர், ‘இந்த ஜோக்ஸ்களை எல்லாம் தொகுப்பாக்கி ஒரு காசெட்டாக வெளியிடலாமே’ எனக் கூறினார்.
அப்போதெல்லாம் அவருடைய டிராமா காசெட்டுகள், சினிமா பாட்டுகளுக்கு இணையாக விற்பனையான நேரம். அந்த ஜோக்ஸ் தொகுப்புதான் 'சிரிப்பு உங்கள் சாய்ஸ் ' என்ற தலைப்பில் காசெட்டாக வெளிவந்தது. அதன் பிறகு, அவருடைய 2 மேடை நாடகங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பை எனக்கு வழங்கினார் . இரண்டு வரிகளில் ஜோக்ஸ் எழுதுவதில் மதன் சார் ஒரு குரு என்றால், பக்கம் பக்கமாய் நாடக வசனம் எழுதுவதில் எஸ்.வி.சேகர் சார்தான், எனக்கு மற்றொரு குரு!”
நமக்கு ஆவல் அதிகரித்து, “அப்போ குமுதம் வார இதழில் தொடர்ந்து பல வருடங்கள் 2 பக்க ஜோக்ஸ் போட்டீர்களே… அதுபற்றி கூறுங்களேன்?”
“அது, கடந்த 2016-ம் வருஷம் ஆரம்பித்தது. அப்போது ஆசிரியராக இருந்த தெய்வத்திரு ப்ரியா கல்யாணராமன் , எனக்கு ‘வாரந்தோறும் 2 பக்க கார்ட்டூன் ஜோக்ஸ் போடுங்க’ என்று அன்புக்கட்டளை போட்டதில் ஆரம்பமானது!” என்று சிரித்தபடி கூறினார்.
“கடந்த ஐந்தரை வருடத்தில் 2000 கார்ட்டூன் ஜோக்ஸ் வெளிவந்து சாதனை ஆனது. இதற்காக எழுத்தாளர் வேதா கோபாலனின் அம்மா, எனக்கு
‘ஜூனியர் மதன்’ என்ற பட்டத்தை இலவசமாக வழங்கினார். இன்றும் அப்பட்டத்தை பறக்க விடாமல் காப்பாற்றி இருக்கிறேன்!”
அவரிடம் கிடுக்கிப்பிடியாக, “பேஸ்புக்கில் உங்களின் ‘கோவி கோவன்’ என்ற பக்கத்தில், தொடர்ந்து உங்களின் பழைய ஜோக்குகள் போடுகிறீர்களே… அதுபற்றி?” என்பதற்கு, “அதனால் எனக்கு பலரின் நட்பு கிடைத்தது. நகைச்சுவை விரும்பிகள் என்னுடன் தாராளமாக இணைந்து கொள்ளலாம்!”
நாம் சட்டென, “இதுபற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப்கிட்ட ஏதாவது சொல்லணுமா?” என்றதும், கோவி.கோவன் டக்கென் “நம்ம இலக்கிய துறையில் கவிஞர்கள், கதாசிரியர்களுக்கு இருக்கும் மதிப்பு, ஜோக் எழுத்தாளர்களுக்கு இருப்பதில்லை. அதனால, ஜோக்ஸ்களை விரும்பாதவர்களுக்கு மட்டும் 50% வருமான வரி போடச் சொல்லி, அவரை உலக நாடுகளுக்கு உத்தரவு போட சொல்லலாம்!” என்றார்.
அவரிடம் காய்கறி கடையில் ‘கொசுறு’ கேட்பது போல், “அப்படியே உங்களுக்கு புடிச்ச, உங்களோட 10 ஜோக்ஸ் கொடுங்களேன்!” என்றதற்கு, “பத்து என்ன, பத்தாயிரம்கூட தரலாம்… இந்தாங்க!” என்று தனது ஜோக்ஸ்களை படங்களுடன் கொடுத்து அன்புடன் வழியனுப்பி வைத்தார்.
Leave a comment
Upload