ஒரு தாயின் கண்ணீருக்கு இணையான கூரிய ஆயுதம் ஒன்றில்லை .
தன் மகளை நினைத்து அழுது புலம்புகிறாள் அந்த அன்னை.
அருமையாக வளர்த்த மகள் ,அவளது காதலனுடன் "உடன் போக்கு" சென்று விட்டாள்.
மகளின் பிரிவு அவளை வாட்டி எடுக்கிறது.
அவள் கால்கள் நகரைச் சுற்றி வருகின்றன.
அப்போது மக்கள் இறைவனுக்குப் படையல் இடும் ஊர் மன்றத்தை அவள் காண்கிறாள் .
அங்கே மகளின் தோழியர் ஆரவாரம் செய்து விளையாடுவதைக் காணும் போது அவளது துயர் மேலும் அதிகரிக்கிறது.
அந்த அன்னை நெகிழ்ந்து கூறுகிறாள் :
"உலகைப் படைத்து காக்கும் நான்முகன் உலகின் முதிய குயவன். நீலமணி போல விளங்கும் நொச்சி மாலை அணிந்தவன். இந்த பரந்த மன்றத்தில் அவனுக்குக் கள்ளை படைத்து விட்டு , அந்தப் படையலை உண்ண காகத்தை அழைப்பர்.
அத்தகு பெருமை வாய்ந்த, விழாக்கள் நிறைந்த பழம்பெரு ஊர் மன்றத்தில் என் மகளைக் காணாமல் நான் துடிக்கிறேன்.
இங்கு விளையாடிக் கொண்டிருக்கும் மலர் ஒத்த கண்களை கொண்ட என் மகளின் தோழியரைக் காணும் போது என் உள்ளம் நடுங்குகிறது.
அடர்ந்த கூந்தலைக் கொண்டையாக்கி அணிந்த என் மகளை, தன் வார்த்தைகளால் வசியப்படுத்தி இங்கிருந்து அழைத்துச் சென்றான் அவள் காதலன்
வலிமை கொண்ட காளையைப் பெற்ற அவன் தாயும் நான் அனுபவிக்கும் நடுக்கத்தையும் துன்பத்தையும் பெற வேண்டும் "
இவ்வாறு அவள் உள்ளம் நொறுங்கி விம்மி அழுகிறாள் .
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்னும் மனநிலை துன்பம் நேர்கையில் , "யாம் பெற்ற துன்பம் பிறர் பெற வேண்டும் " என்று நிலைக்குத் தள்ளப்படுகிறது. இது கையறு நிலையில் பிறக்கும் சொற்களே
ஒரு அன்னையின் கண்ணீரை , துன்பத்தைப் பதிவு செய்யும், இந்த பாலைத் திணை நற்றிணைப் பாடலை எழுதியவர் புலவர் கயமனார்.
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து,
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்
பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், 5
பெரு விதுப்புறுக மாதோ எம் இற்
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ,
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே.
நற்றிணை 293
மேலும் ஒரு நல்ல பாடலுடன் சந்திப்போம்
தொடரும்
Leave a comment
Upload