தொடர்கள்
அனுபவம்
காடறிதல் -7, யானைகள் சூழுலகு -இந்துமதி கணேஷ்

20250708190844689.jpeg

Nature garden என்று அழைக்கப்படும் உயிரினமான யானைகளின் தினம் ஆகஸ்ட் 12 அன்று கொண்டாடப்படுகிறது.

கோவை சதாசிவம் ஐயாவின் படைப்புலகத்தை அறிந்த பிறகு, யானைகளை பற்றிய ஒரு அற்புதமான குறும்படத்தை காட்டினார் ஆற்றல் பிரவீன்குமார், இவர் தான் எங்களை இந்த பயணத்தில் ஒருங்கிணைத்து அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வழிகாட்டியவர்.

சிறுவயதில் இருந்தே யானைகள் மேல் நமக்கு தீராத பிரமிப்பு உண்டு. சமீப காலங்களில் நாம் கேட்கும் செய்திகளில் காட்டு யானைகள் மனிதர்களுடன் போராட முடியாமல் அழிந்து வருவது தெரிகிறது.

ரயில் தண்டவாளங்களிலும், மின்சார வேலிகளிலும் அடிபட்டு இறந்து போகும் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆற்றல் பிரவீன் குமார், கோவை சதாசிவம் போன்ற சூழலியளாலர்கள் தொடந்து யானைகளை பாதுகாக்க போராடி வருகின்றனர்.

"வகுப்பறைக்குள் யானைகள்" என்ற இயக்கத்தின் மூலம் 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் யானைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் ஆற்றல் பிரவீன் குமார்.

வகுப்பறைக்குள் யானைகள் நுழையாவிட்டால் அவைகள் காட்டிலிருந்தே அழிந்து போகும் அபாயமுண்டு என்பதை உணர்ந்து யானைகளை பாதுகாக்க பல தளங்களில் இயங்கி வருகிறார்.

கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனப்பகுதிகளில் யானை மனித மோதலால் யானைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

யானைகளின் வலசை பாதைகள், வாழிட சிக்கல்கள் என்று ஒன்றரை மணிநேரம் இவர் காட்டிய குறும்படம் எங்களுக்கு காட்டிற்கு ராஜா சிங்கமல்ல யானை தான் என்பதை உணர்த்தியது.

பல நூற்றாண்டு காலங்களுக்கு முன்பு பூமி வெடித்து எரிமலை குழம்புகள் வெளிவந்து அவை பாறைகளாக மாறி பின்பு மலைகளாயின.

ஆதிகாலத்திலேயே உருவானவை தான் மேற்கு தொடர்ச்சி மலைகள், இவை இமய மலை தோன்றுவதற்கு முன்பே தோன்றியவை.

அதற்கும் முந்தைய காலத்தை சேர்ந்தவை தான் கிழக்கு தொடர்ச்சி மலைகள் என்கிறார் பிரவீன்.

தமிழ்நாட்டில் இருக்கும் மலைகள் எல்லாமே மேற்கு தொடர்ச்சி மலைகள் மட்டுமே என்று நான் எண்ணி இருந்தேன்.

ஆனால் ஜவ்வாது மலை, திருப்பதி, கல்வராயன் மலை, ஆம்பூர் பகுதிகள் அனைத்தும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் பகுதிகள் தான் என்கிறார் பிரவீன்.

அங்கெல்லாம் ஒருகாலத்தில் செழித்திருந்த யானைகள் இப்போது அருகி விட்டன, அதற்கான காரணங்களை தன் ஆய்வின் மூலம் அடுக்குகிறார் பிரவீன்குமார்.

நாலு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை யானைகள், காடுகள் செழிப்பாக இருக்க யானைகளே ஆதார உயிரினம். காட்டின் பேருயிரான யானைகளுக்கு ஒரு நாளைக்கு தேவை குறைந்தது முன்னூறு கிலோ உணவு, அதற்காகவே அவைகள் ஒரே இடத்தில் இருக்காமல் பயணித்துக் கொண்டே இருக்கின்றன.

யானைகளை நாம் பேருயிர் என்று சுட்டுவதற்கு முக்கிய காரணங்கள் உண்டு. யானைகள் புலிகளுக்கும் உதவுகின்றன என்பதை அழகான ஒரு படத்தை காட்டி விளக்கினார் ஆற்றல் பிரவீன் அவர்கள்.

புலிகளை அம்ப்ரெல்லா ஸ்பீசிஸ் என்று சொல்வார்களாம்.

ஏனென்றால் அவை உணவுச் சங்கிலியில் உச்சத்தில் உள்ளவை.

யானையானது பெரிய மரத்தின் கிளைகளை முறித்து போடும், மூங்கில்களை வளைத்து உட்கொள்ளும், இப்படி செய்யும் போது கீழே விழும் இலை தழைகளை தாவர உண்ணிகளான மான்கள், முயல்கள், பன்றிகள், காட்டு மாடுகள் ஆகியவை உண்டு பயன்பெறும்.

மேலும் யானைகள் முறித்து போடும் கிளைகளால் சூரிய வெளிச்சமானது நிலத்தை அடைகிறது, இதனால் புற்கள் செழித்து வளர்ந்து தாவர உண்ணிகளுக்கு பயனாகின்றன, தாவர உண்ணிகளை உண்டு வாழும் புலிகளும் பயன் பெறுவது இயற்கையின் பேரதிசயம் தான் அல்லவா !

20250707232908695.jpg

பெரிய முட்செடிகளில் புலிகளால் நடக்க இயலாது யானை அந்த வழியாக சென்று அந்த முட்செடிகளை உடைத்து விட்டால் பிறகு புலிகள் அந்த பாதையை எளிதாக பயன்படுத்திக் கொள்ளுமாம்.

பொதுவாக மலைகளில் யானை பாதை என்று சொல்வார்கள், அதை கேள்விப்பட்டிருக்கிறேன், அது உருவாகும் விதம் மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது.

கூரிய முட்களால் காயமாகாத யானைகளின் கால்கள் மனிதன் உடைத்து போடும் மதுக் குப்பிகளால் காயமடைவது மிகக் கொடுமை.

ஜெயமோகனின் யானை டாகடர் வாசித்த போது சொல்ல முடியாத மன அழுத்தம் ஏற்பட்டது. டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை போன்ற மனித நேயர்கள் இருப்பதால் தான் இன்றும் யானைகள் மிச்சமிருக்கின்றன என்று தோன்றுகின்றது.

யானைகளுக்கு செரிமான உறுப்புகள் அவ்வளவு சிறப்பாக இல்லை, எனவே அவற்றின் சாணத்தில் நிறைய விதைகள் நிறைந்திருக்கும் அந்த சாணமே பின்பு பெரிய மரம் வளர காரணமாகும்.

யானைச் சாணத்தை உருட்டும் வண்டுகள் தான் காட்டையே உழும் பெரும் உழவர்கள். சாணத்தில் மட்டுமே முளைக்க கூடிய காளான்கள் பூஞ்சைகள் என்று யானையின் கழிவு கூட காட்டை மேம்படுத்தவே உதவுகிறது.

யானைகள் காட்டில் சில பகுதிகளில் மிகுந்திருக்கும் உப்பை உண்ணுமாம், இதனாலேயே யானையின் சாணத்தில் அந்த தாது உப்புகள் நிறைந்திருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள். உடும்பு, வெளவால், பட்டாம்பூச்சி ஆகியவை சாணத்தை புசித்து பழ மரங்கள் உருவாக வழிவகை செய்கின்றன.

யானைகளை பற்றி கூறும் போதே இருவாசி பறவைகளை பற்றியும் கூறினார் பிரவீன்.

இருவாசி பறவைகள் வசிக்கும் காடானது மிகவும் செழிப்பான ஒன்றாக இருக்குமாம் ஒரு நாளுக்கு இருபத்தி ஐந்து கிலோ பழ உணவை உட்கொள்ளும் இருவாசி என்பது மிக பெரிய ஆச்சர்யம் தான்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது என்ற சமீப செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

யானைகள் தங்களுக்குள் மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடியாத மொழிகளில் பேசிக் கொள்ளுமாம்,

அதாவது அல்ட்ரா சவுண்ட் என்று சொல்ல கூடிய ஒலி அலைகளை கொண்டு அவை தங்களுக்கு தொலை தூரம் இருக்கும் யானைகளுடன் கூட தகவல்களை பரிமாறிக் கொள்ளும் என்பது ஏற்கனவே நான் அறிந்த ஒன்று தான் என்றாலும் அப்படி அவை என்ன தகவலை பரிமாறிக் கொள்ளும் என்ற ஆவல் எழுந்தது.

.சில வருடங்களுக்கு முன்பு வாசித்த The Elephant Whisperer என்ற நூல் நம்ப முடியாத பல உண்மைகளை உள்ளடக்கியது. அதில் வரும் யானை குடும்பம் கணந்தோறும் நம்மை ஆச்சர்ய படுத்தும்.

20250707233507194.jpg

யானைகளின் குழு மனோபாவம், அதன் ஒற்றுமை, குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர் மேல் அவை வைத்திருக்கும் பாசம் என்று அனைத்தையும் புரிந்து கொள்ள நல்வாய்ப்பாக அந்த வாசிப்பு அமைந்தது மிக பெரிய வரம் தான், அந்த நூலை மொழி பெயர்க்க வேண்டும் என்ற பேராவல் வந்த போதும், வெளிநாடுகளில் இப்படி மொழிபெயர்ப்பு உரிமைகளை வாங்குவதில் பல சிக்கல்கள் இருந்ததால் அதை அப்படியே விட்டுவிட்டேன்.

பொதிகை மலையிலேயே மூன்று விதமான யானைகள் இருந்ததாக அங்குள்ள பழங்குடிகள் சொன்னதாக என் கணவர் கூறியதுண்டு. அவற்றில் ஒன்று சாதாரணமானவை, மற்றொன்று கல்யானை என்று மக்களால் அழைக்கப்படும் குட்டையான வகை, பிரிதொன்று மிக உயரமும் பருமனும் வாய்ந்தவை அவைகள் அழிந்திருக்க கூடும்.

பிரவீனின் கூற்றுப்படி பொதுவாக யானைகளை இரண்டு விதமாக வகைப்படுத்துவார்கள்,

ஒன்று ஆசிய ஆனைகள் இன்னொன்று ஆப்பிரிக்க யானைகள்.

இந்த ஆசிய யானைகளில் போர்னியா மழை காடுகளில் வாழும் யானைகள், சுமத்ரா யானைகள் மற்றும் இந்திய யானைகள் என்று மூன்று வகைப்படுத்தலாம்.

போர்னியோ யானைகள் பெரும்பாலும் ஆறடி உயரம் மட்டுமே வளருமாம், கல்யானை வகையாக இருக்கலாம். என்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு பொதிகை மலை பகுதிகளில் உயரம் குறைந்த இந்த கல்யானை ஒன்று மலையை விட்டு கீழே இறங்கி இருக்கிறது, அதன் காணொளியை செய்திகளில் பார்த்த நினைவுண்டு.

இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் தான் யானைகள் அதிகம் காணப்படுகின்றன.

எனவே அங்குள்ள யானைகளை பாதுகாக்க அந்த காடுகளை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.

ஒரு வனத்தை காப்பக காடாக வனத்துறையினர் அறிவித்தால் பொதுவாக அங்குள்ள வன உயிர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்த கூடாது என்பதே பொது விதி.

அந்த வகையில் சத்தியமங்கலம், ஆனைமலை, முண்டந்துறை என்று தமிழ்நாட்டில் பல இடங்களை புலிகள் மட்டும் யானை காப்பகங்களாக அரசு அறிவித்திருக்கிறது, என்ற போதும் யானையின் வலசை பாதையில் சாலைகளும், தனியார் பழத்தோட்டங்களும், தேயிலை பயிர்களும் நிறைந்திருந்தால் அவைகள் உணவுக்கு எங்கே போகும் ? மேலும் அதன் மூளை அடுக்குகளில் பதிந்து போன வழித்தடங்களில் மாற்ற ஏற்பட்டால் அவை குழம்பி விடுகின்றன

. இதனால் தான் யானை- மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றது.

யானைகளை அழிவு பாதையில் இருந்து காப்பாற்றினால் போதுமென்ற எண்ணம் மேலோங்குகிறது.

இந்த பேருயிர் நாளை நம் அடுத்த தலைமுறைக்கு காட்ட வெறும் அருங்காட்சியக பொருளாக இல்லாமல் உயிருடன் உலா வர வேண்டும் என்பதே நம் எண்ணமாக இருந்தது.

20250707233235510.jpg

நிகழ்வின் இறுதியில் பூச்சி கொல்லி மருத்துகளால் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் மனிதர்கள் அடையும் தீங்குகளை விளக்கும் விதத்தில் ஒரு நிழல் பாவை கூத்து ஒன்றை செய்து காட்டினார் பிரவீன்.

குழந்தைகளுக்காக சுட்டி யானை இதழை நடத்துவது, வகுப்பறைக்குள் யானைகள் என்ற இயக்கத்தின் மூலம் காடுகளை பற்றிய அறிவை குழந்தைகளுக்கு ஏற்படுத்துதல், இயற்கையுடன் அடுத்த தலைமுறையை ஒன்றி பழக வைத்தல் என்று பல அற்புதமான விஷயங்களை செய்து வருகிறார் பிரவீன் குமார்.

அவரின் செயல்பாடுகள் மிகுந்த மனஎழுச்சியை ஏற்படுத்தியது. அந்த உற்சாகத்தோடேயே நாங்கள் இரவு உணவை உண்டு எங்கள் கூடாரங்களுக்கு படுக்கச் சென்றோம். மறுநாள் எங்களுக்காக முல்லை நிலம் காத்திருந்தது....

தொடர்ந்து பயணிப்போம்......