தொடர்கள்
தொடர்கள்
மஹாபாரத மாந்தர்கள் - குறள் வழி திருதிராஷ்டிரன் - தமிழ் நந்தி

20250709003258818.jpg

திருதிராஷ்டிரன்

விசித்திரவீரியனின் மனைவியும் சத்தியவதியின் மருமகளுமான அம்பிகைக்கு திருதராஷ்டிரன் பார்வை குறைபாடுடன் பிறந்தான். குரு வம்சத்தில் குருடனாக இருப்பவன் அரசாள தகுதியற்றவன். எனவே அம்பாலிகை மகன் பாண்டு அரியணை ஏறினான். பாண்டுவின் மரணத்துக்கு பின் அவன் மைந்தனும் பாண்டவர்களில் மூத்தவனுமான யுதிஷ்டிரர் என்கிற தருமன் பட்டத்துக்கு உரியவர் ஆனார்.

துரியோதனனை முதலில் இளவரசன் ஆக்க முடியாமல் பின்னர் (அவனே) இளவரசன் ஆனான். திருதராஷ்டிரன் துரியோதனனை முறைப்படி பயிற்றுவிக்காததும் எல்லா துன்பங்களுக்கும் காரணம் ஆகிவிட்டது. பொருள் மீது கொண்ட நாட்டத்தால் பாண்டவர் மீது உண்மையான அன்பு கொண்டு அக்கறை செலுத்தவில்லை; தம்பி விதுரனின் ஆலோசனை கேட்க இயலவில்லை. மனசாட்சிக்கு விரோதமான செயல்களை செய்யவோ உடந்தையாய் இருக்கவோ வேண்டியதாயிற்று.

கோபத்தில் தம்பியையும் ஒரு சமயம் கடிந்தான். பின் உணர்ந்தான்.அதனால் மீண்டும் கானகத்திலிருந்து தம்பியை வரவழைத்தான். திருதராஷ்டிரனுக்கு இடித்துரைக்கும் ஆன்றோர் இல்லாததும் துரியோதனன் வளர்ந்ததும் அந்நிலையே தொடர்ந்ததும் அழிவுக்கு வித்திட்டது. செய்யக்கூடாத செயல்களை கௌரவர் செய்தனர்; செய்ய வேண்டியவற்றை திருதராஷ்டிரன் செய்யவில்லை. உதாரணம் தூது வந்த கண்ணனிடம் துரியோதனனுக்கு அறிவுரை கூறி அழிவை தடுக்க இயலாமை. பீமனுக்கும் பாண்டவர்களுக்கும் நேர்ந்த துன்பங்களுக்கு காரணம் கண்டு சரி செய்யாமை. இத்தகைய குற்றங்களே பகையையும் அழிவையும் உண்டாக்கின

சஞ்சயன் உதவியால் குருஷேத்ர யுத்தத்தின் நிகழ்வுகளை (நேரலை போன்று) கேட்டறியும் வசதி கிடைத்தது. இறுதியில் கானகத்தில் யோக நிலையில் காட்டுத் தீக்கு இரையானார்.

குறளும் பொருளும்

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளில் குறைபாடு உடைமை யாருக்கும் பழி அன்று; அறிய வேண்டுவனவற்றை அறிந்து முயற்சி எதுவும் செய்யாதிருத்தலே பழியாகும்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி 618

ஒருவனை ஒரு செயலுக்கு (அரசாளுவதற்கு) பொருத்தமானவன் என்று அறிந்த பின் அவனை அதற்கு தகுதியானவனாக செய்ய வேண்டும்.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல் 518

பிறர் பொருளை விரும்பி, அவர்கள் அசந்து இருக்கும் நிலையை எதிர்பார்க்கிறவர்களிடம் அருளும் அன்பும் இருக்காது.


அருள்தருதி அன்புடையராதல் பொருள் கருதி

பொச்சாப்புப்பார்ப்பார்கண் இல் 285

மனசாட்சிக்கு விரோதமாக நடுநிலை தவறினால் ‘நான் கெட்டேன் ‘ என்பதை அறிந்து கொள்.

கெடுதல் யான் என்பது அறிக தன்நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின் 116

மனத்தாபம் கொண்டு விட்டதனால் அறிவு கெட்டுப்போனவர்கள், அந்த மனதாபம் மிஞ்சும் போது கோபம் வந்து விடுவதனால் எந்த விஷயத்தில் உண்மையை அறிய முடியாதவர்களாகிவிடுவார்கள்.

மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார்
இகல் மேவல் இன்னா அறிவினவர் 857

இடித்துக் கூறும் பெரியவர்கள் துணைவராக இல்லாத அரசன் பாதுகாப்பற்றவன்; அவனை கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானாக கெட்டுப் போவான்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும் 448

செய்யக்கூடாத செயல்களைச் செய்தால் கேடு வரும்; செய்ய வேண்டிய செயல்களை செய்யாமல் இருந்தாலும் கேடு வரும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும் 466

குற்றம் அழிவை உண்டாக்கும் பகை. அதனால் குற்றமின்மையை நோக்கமாகக் கொண்டு தன்னை காத்துக் கொள்ள வேண்டும்.

குற்றமே காக்க பொருளாக குற்றமே

அற்றம் தரூஉம் பகை 434