பிரசாதம் வாங்கிக்கோங்க..என்று ஆலயக் குருக்கள் சொன்னதும்தான் விழி நகர்ந்தது ரமேஷிற்கு.
ஆஹா என்ன அழகு ? வயசுக்கேற்ற உடல், தலை நிறைய முல்லைப்பூ,எங்கோ பார்த்துப் பழகிய முகத்தோற்றம்,
என்ன பேரு ? என்றதும்
ம். ஜானகி என்றபடி அங்கிருந்து நகர்ந்து அரச மரத்தடியில் அமைந்துள்ள திண்ணையில் அமர்ந்தாள்.
நீங்க இங்கே புதுசா ? எனக் கேட்ட ஜானகியிடம்
ஆமாம் நேற்றுதான் வந்தேன் என்றவர்
உங்களை எங்கோ பார்த்திருக்கேன் எங்கே என்றுதான் ஞாபகமில்லை என்றதும்
“ பெண்களைப் பார்த்ததும் எல்லோரும் சொல்வதுதான் இது என்றாள்.
“ நான் அப்படியில்லை” என்ற ரமேஷிடம்,
கொஞ்ச நேரம் யோசித்த ஜானகி உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமா செய்வீர்களா ?!என்று தயங்கியவளிடம்..
தாராளமா கேளுங்க..
நாளைக்கு எனக்கு சமயபுரம் கோயில் போகணும்,என் கூட வரமுடியுமா என கேட்டாள்
என்ன வேண்டுதலா ? என கேட்டதற்கு
இல்லை.. கல்யாணம் என்றதும்,
சாட்சி கையெழுத்து ஏதும் போடனுமோ என்றதும்,
ஆமாம், ஆனால் யாருக்கும் தெரியாமல் போய் வரணும் என்றாள் ஜானகி.
நமக்குதான் கொடுத்து வைக்கல, இவளின் ஆசையாவது நிறைவேற்றுவோம் என்ற முடிவெடுத்தவர்,தனது திருச்சி நண்பனை மறுநாள் பைக்கோடு வரச்சொல்லிய ரமேஷ், வாசலுக்குச்சென்று ஜானகியை பைக்கில் ஏற்றிக்கொண்டுப் பறந்துப்போனார்.
இருவரும் பைக்கில் ஏறிச்சென்றதைப் பார்த்துவிட்ட வாட்சுமேன், வார்டனிடம் தகவல் சொல்ல அந்த இடமே சற்று நேரத்தில் பரபரப்பிற்குள்ளானது.
செய்வதறியாது நின்ற வார்டன் ரமேசின் வீட்டிற்குப் போன் செய்தார்.
அதிர்ச்சியடைந்த ரமேசு வீட்டார்..
“பீஸ் மட்டும் எக்கச்சக்கமாக வாங்குறீங்கல்ல,பாதுகாப்பாக இருக்கிறதில்லையா ?பாஸ் இல்லாமல் எப்படி விடறீங்க?!
நாங்க என்ன சார் செய்வோம், ப்பிரண்ட் வந்து பைக்கை கொடுத்துவிட்டு போயிருக்காரு,
பைக்லேயா ? என்று அதிர்ந்த ரமேஷ் வீட்டாரிடம்..
ஆமாம்,அதும் தனியாக போகலை ஜானகியோட என்றவர்,
இரு வீட்டாருக்கும் தகவல் சொல்லி உடன் கிளம்பி வரச்சொன்னார்.
ஓடிப்போகிற வயசா இது ? நமக்கு ஆபிஸ் வேலை நிறைய இருக்கு,கவனிக்க முடியலை, பாதுகாப்பாக இருக்கட்டும்னுதானே விடறோம். என்ன துணிச்சல் ? என்று வசை பாடியபடி கிளம்பி வந்து சேர்ந்தனர் இரு வீட்டாரும்.
நடுவில் வார்டன் அமர்ந்திருக்க, இரு வீட்டாரும் எதிரெதிர் திசையில் செய்வதறியாது ஒருவருக்கொருவர் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
“கெளரவமான குடும்பம் சார், வெளியில் தெரிந்தால் அசிங்கமாக போயிடும் என்றார்கள் ஜானகி வீட்டார்.
“நாங்க மட்டும் என்ன நாங்களும்தான் “ “நம்ம கூடவே அழைத்துப் போயிருக்கணும், இரண்டு நாள் தனியாக விட்டது பாரு அசிங்கமாகப் போச்சு என பேசியபடியிருந்தனர் ரமேசின் வீட்டார்
சார் ஏற்கனவே பேசி வைத்து அவங்க திட்டமிட்டுதான் கிளம்பியிருக்கிறார்கள் என்று பீதியைக் கூட்டினார் வார்டன்.
அப்போது ஹாஸ்டல் கேட் திறக்கப்பட்டு கையில் மாலையுடன் இருவரும் நடந்து வருவதைப்பார்த்த இரு குடும்பத்தாரும் கோபத்துடனும், எரிச்சலுடனும் அவர்களைப் பார்த்தனர்.
“ எங்கே போனீங்க இருவரும் என்றதற்கு
சமயபுரம் கோயிலுக்கு என்றாள் ஜானகி.
எதுக்கு என்றார் ரமேஷின் மகன்
கல்யாணத்திற்குதான் என்றார் ரமேஷ்
என்ன கருமம்மா இது ? - ஜானகி மகள்
ஆமாம் கல்யாணத்திற்குத்தான் போனோம்,நம்ம வீட்டிலே வேலை செய்தாங்களே மீனாட்சி
அவங்க மகளுக்கு சமயபுரம் கோயிலில் கல்யாணம், அங்கே போயி ஆசிர்வாதம் செய்திட்டு அப்படியே சாமி தரிசனம் பண்ணிவிட்டு வருகிறோம் என்றாள் ஜானகி.
அதற்கு ? எங்கிட்ட சொல்லலாமே என்றவர்களிடம்
உங்களுக்குப் பல வேலைகளிருக்கும்,அதனால் தொந்திரவு செய்ய விரும்பலை என்றாள் ஜானகி.
இந்த வயசிலே வண்டி ஓட்டலாமா ?
நீங்களாவது uber / ola வச்சுகிட்டு போகக்கூடாதா என்றாள் ரமேஷின் மருமகள் பாசமாக..
ஏம்மா உனக்குத்தான் தெரியுமே எனக்கு பைக் ஓட்டறதுதான் இஷ்டம்,ஆனால் இவன் தொடவே விடமாட்டான்,அதான் சும்மா ஜாலியா ஒரு டிரிப் என்றார் சிரித்தபடி..
நல்ல வேளை சங்கீதாவிலே புரோட்டா சாப்பிட்டதைச் சொல்லை,இல்லையென்றால் அதற்கும் திட்டுவார்கள் போல.. என்று இருவரும் பேசி சிரித்துக்கொண்டே அவரவர் ரூமிற்கு சென்ற போது இருவரது மொபைலிலும் பென்சன் தொகை ஏறிய வங்கி மெசேஜ் வந்திருந்தது.
தொடர்கள்
கதை
Leave a comment
Upload