தொடர்கள்
ஆன்மீகம்
நாரதர் கலகம் நன்மையில் முடியும்..!!- ஆரூர் சுந்தரசேகர்.

Narada's rebellion ends in good..!!

"நாராயண... நாராயண..." என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டு கையில் வீணையுடன் ஈரேழு உலகத்தையும் சுற்றி வரும் நாரதரை நாம் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் பார்த்திருப்போம்.

மக்கள் மத்தியில் நாரதர் மிகவும் பிரபலமானவர்.

அவர் காலடி வைத்த இடமெல்லாம் கலகம் தான் என்பது பொதுவான கருத்து.

"நாரதர் கலகம் நன்மையில் முடியும் " என்ற பழமொழியும் உண்டு.

விஷ்ணுபுராணத்தின் படி, "நரம் னார் சம்யூகம் கலாஹீனா த்யாதி கந்தயாதிதி " எனச் சொல்கின்றனர்.

ஒரு கலகத்திற்குக் காரணமாக இருப்பவர் நாரதர். ஆனால் அவர் நெஞ்சில் தீய எண்ணமோ, வஞ்சகமோ இல்லாத ஒரு பரிசுத்தமானவர்.

உலக நன்மைக்காக ஒரு வித்தியாசமான யுக்தியைக் கையாண்டவர். அவரை புரிந்து கொள்வது சற்று கடினமே. நாரதர் வெளித் தோற்றத்தில் பார்ப்பதற்கு வேடிக்கையான, விளையாட்டான பாவனைகளுடன் இருந்தாலும் அவர் ஒரு மிகப்பெரிய ஞானி. இவர் கந்தர்வ குலத்தில் பிறந்து ரிஷியானதால் இவரைத் தேவரிஷி என்று வேதங்கள் கூறுகின்றன. எவ்வளவோ தேவரிஷிகள் இருக்கும் போதிலும் நாரதரின் ஸ்தானம் மிகவும் விஷேசமானது என்பதை நாம் பகவத் கீதையிலிருந்து அறியலாம். தேவர்ஷீணாம் ச நாரத:, “தேவ ரிஷிகளில் நான் நாரதன்” என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாரதரை தன்னுடைய விசேஷ வைபவமாகக் குறிப்பிடுகிறார் (பகவத் கீதை 10.26).
விஷ்ணு புராணத்தின் படி பன்னிரண்டு மகாஜனங்களில் இவரும் ஒருவர். நாரதர் முக்காலங்களையும், மூன்று லோகங்களையும் கடந்து செல்லக்கூடியவராகவே எல்லா புராணங்களும் கூறுகின்றன. எனவே அவரை திரிலோக சஞ்சாரி என்றும் அழைப்பர். நாரதரைத் தேவ பிரம்மா என்கிறது யாழ் அகராதி.
நாராயண என்ற விஷ்ணுவின் நாமத்தை சர்வ காலமும் சொல்லும் இவரது பக்திக்கு ஈடு இணை கிடையாது. ஆகம விதிகளைப் பற்றி நாரத முனிவர் எழுதிய நூல் ‘பஞ்சரத்ரா.’ இந்த நூல் வைணவ தெய்வங்களுக்குப் பூஜை செய்யும் முறைகளை விளக்கும் வகையில் அமைந்ததாகும். பக்தி யோகா முறையையும், நாரத பக்தி சூத்திரங்களையும் இவர் இயற்றியுள்ளார். நாரதஷ்ம்ரிதி எனும் தர்மசாஸ்திரத்தையும் இவர் வழங்கியுள்ளார். இதுவே துறவறம் மற்றும் தவத்தின் முறைகளை எடுத்துரைக்கின்றது. நாரதர் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் நண்பனாக, குருவாக மற்றும் வழிகாட்டியாகத் திகழ்கிறார். நரம் பரமாத்மா விஷ்யாகம் ஜ்ஞானம் தததி இதி நாரத:, “கடவுளைப் பற்றிய ஞானத்தை வழங்குபவர் நாரதர்” என்று ஷப்த-கல்பத்ரும கூறுகிறது.

Narada's rebellion ends in good..!!

இராமாயணத்தை எழுதிய வால்மீகிக்கு ராமநாமத்தை உபதேசித்தவர் நாரதரே. பக்த பிரகலாதனுக்குத் தாயின் கருவில் இருக்கும்போதே அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அவரை நாராயண பக்தனாக்கியதும் அவரே. சின்னஞ்சிறு குழந்தை துருவனுக்கு விஷ்ணு மந்திரத்தை உபதேசித்து அவனை நட்சத்திர மண்டலத்தில் ஒளிரவிடச் செய்தார்.
நாரதர் கையில் உள்ள வீணையின் பெயர் மகதி ஆகும். புராணங்களில், நாரதர் இந்த மகதி வீணையைத் தாங்கி, மூவுலகிலும் பரமன் புகழைப் பாடியதாகக் கூறப்படுகிறது.

நாராயண மந்திரம்..அதுவே நாளும் பேரின்பம்…

Narada's rebellion ends in good..!!

ஒரு முறை நாரத மகரிஷி கவலையுடன் காணப் பட்டார். அவரை கண்ட மகாலட்சுமி ஏன் கவலையுடன் இருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு நாரதர் தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில் முடிந்தாலும் அந்த செயல்களினால் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக விளங்குகிறேன் அதை எண்ணித்தான் வருத்தமாக உள்ளது என்றார். அதற்குத் தாயார் ரிஷிகேசம் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு வா உன் கவலை யாவும் பறந்தோடிவிடும் என்றார். நாரதரும் ரிஷிகேசம் சென்று, கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல வண்ணங்கள் கொண்ட விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம் என்ன நாரதரே சௌக்கியமா என்றது. பேசும் மீனை அதிசயமாகப் பார்த்த நாரதர், ஏதோ சௌக்கியமாக இருக்கிறேன், நீ நலமா என்று மீனைத் திருப்பி கேட்டார். மீனும் கொஞ்சம் சலித்துக் கொண்டே நலமாக இருக்கிறேன் ஆனால் தாகத்திற்குத் தண்ணீர் தான் கிடைக்கவில்லை அதுதான் என் சலிப்புக்குக் காரணம் என்றது. இதைக் கேட்ட நாரதருக்குக் கோபம் வந்தது. நீருக்குள் நீந்திக் கொண்டே தாகத்துக்கு நீர் கிடைக்கவில்லை என்று சலித்துக் கொண்டு சொல்கிறாயே உன் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது என்றார். மீன் சிரித்துக்கொண்டே நீ மட்டும் என்னவாம் பேரானந்தம் தரும் நாராயண மந்திரத்தை உனக்குள் வைத்துக்கொண்டே கவலையாக எதோ நலமாக இருக்கிறேன் என்று கூறுகிறாயே, நீ கூறுவது மட்டும் நியாயமோ என்று கேட்க நாரதர் வியப்புடன் மீனைப் பார்த்தார். மீன் உருவம் மறைந்து திருமால் நாரதர் முன் காட்சியளித்தார். நாரதா என் பெயரைக் கூறிக் கொண்டு நீ செய்யும் செயல்கள் யாவும் நன்மையில் தானே முடிவடைகிறது. கலகம் என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்துள்ளது. அதை நினைத்து நீ வருந்தி என்ன பயன்? யாவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணித் தானே நீ உன் கலகத்தைத் துவக்குகிறாய் என்று கூறி நாரதரைத் திருமால் ஆசிர்வதித்து விட்டு மறைந்து போனார் . நாராயண நாமத்தை ஜெபித்தால் அதுவே பேரின்பம், யாவும் நலமாகவே முடியும்.

புராணத்தில் நாரதர்!!

Narada's rebellion ends in good..!!

நாரதரைப் பற்றிப் பிரபலமாகச் சொல்லப்படும் பல புராணக்கதைகள் உண்டு, சிவபெருமான் குடும்பத்தில் முருகப் பெருமானுக்கும், விநாயகருக்கும் இடையே நாரதர் ஒரு ஞானப்பழத்தைக் கொடுத்து, அதன் உட்கருத்தை உலகுக்கு எடுத்துரைத்தார்.
முருகன், எங்கும் இறைவனைக் காணலாம் என்பதை உலகைச் சுற்றி வந்து வெளிப்படுத்தினார்.
விநாயகர், இறைவனே அனைத்தும் என்பதை, அம்மையப்பனைச் சுற்றி வந்து உணர்த்தினார்.

Narada's rebellion ends in good..!!

முப்பெரும் தேவிகளான, சரஸ்வதி, லட்சுமி, பார்வதிக்கிடையே யாருடைய தன்மை பெரியது என்கிற விவாதத்தைக் கிளப்பி, மூவரும் கல்வியா, செல்வமா அல்லது வீரமா என்ற கலகத்தை உருவாக்கிய போது உலகம் என்றென்றும் நலமுடன் இருக்க மூன்று தன்மையுமே சம அளவில் தேவை என்பதை நிலைநாட்டியவர். எனவே கல்வி,செல்வம், வீரம் இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே மனிதன் தங்கள் இனத்தை இம்மண்ணுலகில் நீண்ட ஆண்டுகளுக்கு நிலைப்பெற வைக்க முடியும்.
நாரதர் தான் இரண்யகசிபுவின் மனைவி கயாது (லீலாவதி) கருவுற்றிருந்த போது கருவிலிருந்த பிரகலாதருக்குப் பாகவத தத்துவத்தினையும் நாரதர் எடுத்துரைத்தார். பிற்காலத்தில், பிரகலாதர் மாபெரும் பக்தராக உருவெடுத்ததற்கு, அவர் தனது தாயின் கருவில் இருந்தபோது நாரதரிடமிருந்து கேட்ட உபதேசங்களே காரணமாகும்.

Narada's rebellion ends in good..!!

பொதுவாக நாரதரின் செயல்கள் மூலம் வெளிப்படும் நகைச்சுவை, நமக்கு வேடிக்கையான அம்சத்தைத் தருகின்றது. நாரதரின் செயல்களினால் கலகம் ஏற்பட்டாலும் அது எப்பொழுதும் நன்மையில்தான் முடியும்.

நாராயண..! நாராயண..!! நாராயணா..!!!