காமெடி ஸ்பெஷல்
மொட்டை மேட்
கொஞ்சம் சுகவீனப்பட்டுத் தேறிய எனக்காக, என் மகன், என் தலைமுடியைக் காணிக்கையாக செலுத்துவதாக வெங்கடாஜலபதிக்கு வேண்டிக் கொண்டானாம். ஒரு வார்த்தை என்னைக் கேட்க வேண்டாமோ? அதற்கென்ன மகனே என்று போன வாரம் திருப்பதி சென்று வந்தேன்.
திருப்பதி நட்சத்திர விடுதியில் முந்தைய இரவே அந்த நபரை ரெஸ்டாரண்ட்டில் வைத்துப் பார்த்தேன். அடுத்த மேஜையில் கண்ணீர் மல்க செருமிக் கொண்டும் பெருமூச்சு வாங்கிக் கொண்டும் காரச் சட்னியில் இட்லியைப் பிரட்டி விழுங்கிக் கொண்டிருந்தார். அந்த வட இந்தியருக்கு பாரி உடம்பு. பழுத்த கிர்ணிப்பழம் போலத் தென்பட்டார்.
அடுத்த நாள் காலை முடியிறக்கிக் கொண்டு தரிசனமும் செய்து வர திருமலைக்குப் பறப்பட்டேன். தலைமுடியிறக்கும் கூடத்தில் சென்று முடித் திருத்துனர் முன் அமர்ந்தேன். முழு மொட்டையாக இருக்கக் கூடாதாகையால், பின் தலையில் இரண்டு விரற்கடை அளவு முடியை மட்டும் விட்டுவிட்டு மழிக்கச் சொன்னேன்.
எனக்கு அடுத்த மனைப்பலகையில் இருந்து, ‘யே க்யா ஜி?’ என்ற வினா எழுந்தது.
திரும்பிப் பார்த்தால் திரு கிர்ணிப்பழம் தான் அமர்ந்திருந்தார். அவருக்கு முழுமொட்டையாக அடித்துக் கொள்வது எங்கள் வழக்கமில்லை என்று விளக்கினேன். அவரும் அதே போல் அடிக்கச் சொல்லி இரண்டு விரல்களை ‘பழம் விடுவது’ போல் வைத்துக் காட்டினார்.
நீராடி முடித்து கோவிலுக்குள் சென்றேன். மிக அண்மையில் நின்று வேங்கடவனைத் தொழும் பாக்கியம் கிடைத்தது. பரவசத்துடன் பிராகாரம் சுற்றி வந்து உண்டியலில் காணிக்கை செலுத்த நின்றேன். எனக்கு முன் கிர்ணிப்பழம் சார் கைநிறைய பணம் எடுத்து உண்டியலில் போட்டுக் கொண்டிருந்தார்.
திருப்பதியிலிருந்து மும்பைக்கு ஹைதராபாத் விமானநிலையம் வந்து, வேறு விமானம் பிடித்து வர வேண்டும். ஹைதராபாத் ஏர்போர்ட்டில் மீண்டும் அவரைப் பார்த்தேன்.
‘மொட்டையும் மொட்டையும் கூடிக்கிச்சாம் முருங்கமரத்துல ஏறிக்கிச்சாம்’ என்ற சிநேக பாவத்துடன் சிறிது பேசினோம்.
எப்போதோ அவருடைய அம்மா இவரின் தலைமுடியைக் காணிக்கைச் செலுத்த ஏதோ கும்பகோணம் கோயிலில் வேண்டிக் கொண்டதாகவும், அது எந்தக் கோயிலென்று தெரியாததால், திருப்பதியில் முடியிறக்கியதாகவும் சொன்னார்.
அந்நாளில் அவருடைய தாயார் வேண்டிக் கொண்டது ஒப்பிலியப்பன் கோவிலாக இருக்கக்கூடும் என்றேன். ஒப்பிலியப்பன் வெங்கடாஜலபதியின் அண்ணனாகக் கருதப்படுவதால், திருப்பதி செல்ல இயலாதவர்கள் வெங்கடவனுக்கான காணிக்கையை ஒப்பிலியப்பனுக்கு செலுத்தலாம் என்பது ஐதீகம் என்றேன். இவரானால் ரிவர்ஸில் முடிகாணிக்கை செலுத்தியிருக்கிறார் என்பதையும் சொல்லி விடைபெற்றேன்.
நேற்று மாதுங்காவில் நடந்து கொண்டிருந்தவனை, ’திருப்பதி சாப்!’ என்று யாரோ அழைக்க திரும்பிப் பார்த்தேன். நம்ம கிர்ணிபழம் ஜி தான்.
குசலவிசாரிப்புகளுக்குப் பின் விடைபெறும்போது, “ஜீ! அடுத்தமுறை கும்பகோணம் போகும்போது சொல்லுங்கள். இரண்டு பேரும் சேர்ந்துபோய் ‘ஓப்லி ஓப்பனுக்கு’ மொட்டை போட்டுகிட்டு வரலாம்” என்று இந்தியில் சொன்னபடி சென்றார்.
அநியாயமா இருக்கே! இந்தாளோட அம்மா உப்பிலியப்பனுக்கு மொட்டைபோட வேண்டிக்கிட்டா கூட அடிச்சிக்க என் தலை தானா கிடைச்சது? யோசித்துக் கொண்டே தலையிலிருந்த ‘மும்பை இந்தியன்ஸ்’ நீலத் தொப்பியைக் கழட்டி தலையைத் தடவிக் கொண்டேன். ஒரு வாரத்துக்குள்ள தலைமுடி நல்லாத்தான் வளர்ந்திருக்கு!!
Leave a comment
Upload