தொடர்கள்
விளையாட்டு
கிரிக்கெட் ஆடு...பாட்டுப் பாடு.... !!! -லண்டனிலிருந்து கோமதி

20250709063627458.jpeg

நாம் இருக்கையின் நுனியில், நகத்தை கடித்துக்கொண்டு பல (?! ஒரு சில) திரைப்படங்களை பார்த்திருக்கிறோம்.

அதே அனுபவத்தோடு ஒரு கிரிக்கெட் போட்டியை அதுவும் ஒரு டெஸ்ட் போட்டியை பார்த்தால் எப்படி இருக்கும்!

இந்தியா இங்கிலாந்திற்கு இடையே நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி.

அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தான் தந்தது.

இரு அணியினரும் கடைசி நாள் வரை ஆடி, இறுதியில் இந்திய அணி வென்று, ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரை சமன் செய்துள்ளனர்.

திரைப்படம் என்றால் பாட்டு இல்லாமல் எப்படி!

இந்தப் போட்டியின்பொது நடந்த ஒரு சில சம்பவங்களை, தமிழ்ப் பட பாடல்களோடு ஒப்பிட்டு பார்த்தால் என்ன என்கிற விபரீத எண்ணம் தோன்றவே, கலாய் ஸ்பெஷலுக்கு களத்தில் இறங்கி விட்டேன்.

20250709063736631.jpeg

ஷுப்மன் கில்லுக்கு கவாஸ்கர் கொடுத்த பிரத்யேகமான சட்டை, தினேஷ் கார்த்திக் தன்னோடு இருந்த சக வர்ணனையாளர்கள் நாஸிர் ஹுசைய்ன் மற்றும் அத்தேர்ட்டனுக்கு அறிவுரை கூறி கொடுத்த ஜாக்கெட் என இந்த இரு நிகழ்வுகளுக்கும், "நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு" என்ற பாடலை அர்ப்பணிக்கலாம் .

20250709063704715.jpeg

ஆட்ட நாயகனான, முஹம்மது ஷிராஜ், கூகிளில் தேடி, "Believe" என்கிற ஒரு வால்பேப்பர் வைத்து, அதை பார்க்கும் போதெல்லாம் நம்பிக்கை துளிர் விட்டதாகவும், தான் சிறப்பாக விளையாடியதற்கும் அதுவே காரணம் என்றும் கூறியிருந்தார். "கூகிள் கூகிள் பண்ணி பார்த்தேன் உலகத்துல" என்கிற பாட்டை கேட்டிருப்பாரோ !

கையில் கட்டுட்டுடன் ஒக்ஸ், காலில் கட்டுடன் பந்த் விளையாட வந்த அந்த தருணம், "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ " என்றும் "சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ" என்றும் பாடத் தோன்றியது.

"சுற்றி நின்றே ஊரே, பார்க்க, களம் காண்பான்" என்கிற பாடலுக்கேற்ப, ஷுப்மன் கில் கில்லியாக விளையாடி, அதிக ரன்கள் எடுத்து இந்தத் தொடரின் நாயகனாகக் கலக்கியுள்ளார்.

20250709063815222.jpeg

கவுதம் கமபீர் வெற்றிக்களிப்பில் ஷுப்மன் கில்லை, அணைத்து கொண்டாடிய விதத்தை, மணிரத்னம் பார்த்திருந்தால், "முத்த மழை இங்கு கொட்டி தீராதோ" என்கிற பாடலுக்கு இதையே கூட காட்சியமைப்பாக வைத்திருக்கக்கூடும்.

மொத்தத்தில் இந்த ஒரு போட்டி இன்னும் பல காலம் பேசப்படும் ஒரு போட்டியாகவே இருக்கப்போகிறது.

2005இல் நடைபெற்ற ஆஷஸ் மேட்ச் விறுவிறுப்போடு நடைபெற்றது ஒன்றும் ஒரு பெரிய விஷயமல்ல, இங்கிலாந்து ஆஸ்திரேலியா என்றால்தான் கிரிக்கெட் மேட்ச் சிறப்பாக அமையும் என்பதல்ல, நாங்களும் அதற்கு சளைத்தவர்கள் இல்லை என சொல்லி அடித்துள்ளனர் இந்திய அணியினர். பாராட்டுகள் !