தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை 36 -மரியா சிவானந்தம்

20250810224629193.jpg

மேற்கு வானில் கதிரவன் மறையும் அந்தி நேரம் .... .

பணி நிமித்தம் சென்ற தலைவன் தன் இல்லம் நோக்கித் திரும்பிக் கொண்டு இருக்கிறான்.

காட்டு வழியில் அவன் தேர் விரைந்து வருகிறது. அத்தேரைத் தேர்ப்பாகன் செலுத்திக் கொண்டு ஊர் நோக்கி வருகிறான்.

அவன் வரும் வழியில் பறவைகள் கூடடைவதும் ,கால்நடைகள் தம் வீடு திரும்புவதுமான காட்சிகள் கண்ணில் தெரிகின்றன.

தன் இல்லத்தில் தனக்காக காத்து வாடி இருக்கும் தலைவியின் நினைவு நெஞ்சில் நிழலாடுகிறது.

என் தலைவியைக் காண செல்ல வேண்டும். விரைந்து தேரை ஓட்டு என்று பாகனுக்குக் கட்டளை இடுகிறான் அவன்.

" பாகனே,

செம்மையான நிலத்தைக் கொண்ட இந்தக் காட்டுப்பகுதியில் , சிறிய முடிகளுடன், கழுத்தில் மணிகள் அசைய ஆடுகள் மேய்வதை நிறுத்தி விட்டு தம் தொழுவத்தை நோக்கிச் செல்லும் மாலை நேரம் இது .

மலைச் சாரலின் அருகே விரிந்து மலர்ந்திருக்கும் முல்லையைத் தொடுத்து பார்ப்பன மகளிர் தம் தோளில் விழுமாறு சூடிக் கொண்டு தலைவருக்காக காத்திருக்கின்றனர்.

கதிரவனும் மேற்கு மலையில் இறங்கி விட்டான்.

இந்த மாலை வேளையில், என் தலைவி தனிமையில் நான் இல்லாமல் வெறுமையாக இருக்கும் இல்லத்தைப் பார்த்து வருத்தத்துடன் இருப்பாளோ ?

நிச்சயம் வருந்திக் கொண்டுதான் இருப்பாள்.

எனவே நீ தேரை விரைந்துச் செலுத்துவாயாக

குருந்த மலர்கள் பூக்கும் சிறுமலையில், நம் ஊரின் மரங்கள் இருக்குமே , அந்த இடம் வந்து விட்டது என்று தோன்றுகிறது, விரைந்துச் செல் " என்றான் .

.மாலை நேரத்தில் கணவன் வீடு திரும்பும் இக்காட்சி முல்லைத்திணைக்குரிய கீழ்க்காணும் பாடலில் வரையப்பட்டுள்ளது.

இப்பாடலை எழுதியவர் "மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்" என்னும் புலவர்.

செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை

பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயர,

கான முல்லைக் கய வாய் அலரி

பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,

கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை,

புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல

வருந்தும் கொல்லோ, திருந்து இழை அரிவை?

வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக,

குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற,

பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே. நற்றிணை 321

மேலும் ஓர் அழகிய பாடலுடன் சந்திப்போம்

தொடரும்