தொடர்கள்
விகடகவியார்
பாஜகவின் தமிழ்ப்பாசம் !! - விகடகவியார்

20250812232953206.jpeg

பெரும்பாலும் வாக்கு வங்கி அரசியலை வைத்து, பாஜக நடவடிக்கை இருக்காது. இதற்கு நாம் தமிழகத்தையே உதாரணமாக சொல்லலாம். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அதன் ஒரே கொள்கை வாக்கு வங்கி அரசியல் தான். அது சமரசத்துக்கு எப்போதும் அஞ்சாது.. திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது, மிசாவில் கைது செய்தது. ஆனாலும் திமுகவுடன் கூட்டணி வைத்தது.

பாரதிய ஜனதாவும் திமுகவுடன் கூட்டணி வைத்தது. அது தேர்தல் அரசியல் என்று சொன்னாலும் இதற்காக தனது கொள்கைகளை பாஜக விட்டு தரவில்லை. அப்போதும் அயோத்தி இராமர் கோயில் கட்டுவதில் உறுதியாகத்தான் இருந்தது. இந்துத்துவா ஆர் எஸ் எஸ் இதற்காக எல்லாம் திமுகவுடன் அவர்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை.

திமுக பாஜகவுடன் சமரசக் கொள்கையில் தான் இருந்தது. அதனால தான் அன்றைய திமுக தலைவர் கருணாநிதி திராவிட கழகம் போல் ஆர் எஸ் எஸ் இயக்கமும் ஒரு சமுதாய இயக்கம் தான் என்று சான்றிதழ் தந்தார். இப்போது திமுகவின் ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு கூட அரசியல் நிலைப்பாடாகத்தான் பார்க்க வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்தார். தாமரை மலரும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். தமிழக தேர்தலில் பாஜக தோல்வியடைந்தாலும் தமிழிசையை ஆளுநர் ஆக்கியது. தமிழிசையின் தந்தை மூத்த காங்கிரஸ் தலைவரான குமரி ஆனந்தன் டெல்லி காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பலமுறை தனக்கு ஆளுநர் பதவி தாருங்கள் என்று கேட்டார். ஆனால் காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக இருந்தார். அவரும் வெற்றி வாய்ப்பை இழந்தார் தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவு வெற்றி பெறவில்லை. என்றாலும் அவரை ராஜ்யசபா உறுப்பினர் அமைச்சர் என்று பாஜக அழகு பார்த்தது.

அண்ணாமலையும் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு தராததுக்கு காரணம் மத்திய தலைமைக்கு அவர்களது அரசியல் சித்தாந்தத்திற்கு அண்ணாமலை எதிராக இருந்ததும் ஒரு காரணம்.

1967-இல் திமுக டெல்லியில் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருந்தது. அப்போது ஜனசங்க கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் வாஜ்பாய். வாஜ்பாயும் பேராசிரியர் அன்பழகன் நெருங்கிய நண்பர்கள். தொகுதி சம்பந்தமாக மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் எல்லாம் அந்த காலத்திலேயே ஆங்கிலத்தில் இருக்காது இந்தியில் தான் இருக்கும் அன்பழகன் அதை மொழிபெயர்த்து என்ன என்று சொல்லுங்கள் என்று வாஜ்பாயிடம் தான் காண்பித்து தெரிந்து கொள்வார். சித்தாந்தத்தை விட நட்பையும் பாஜக சில சமயம் கொண்டாடும். பாஜகவின் செயல்பாடு பழிவாங்கும் நடவடிக்கையாக என்றுமே இருக்காது.

துணை ஜனாதிபதி தேர்தல் என்ற அறிவிப்பு வெளியான போது பல வட மாநில மூத்த பாஜக தலைவர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இப்போது துணை குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். வேட்பாளர்கள் தேர்வில் பெரும்பாலும் பாஜக ஏனோ தானோ என்று இருக்காது. அவர்கள் பின்புலத்தை ஆராயும். சி பி ராதாகிருஷ்ணன் திருப்பூரை சேர்ந்தவர். நீண்ட நாட்கள் ஆர் எஸ் எஸ் உறுப்பினர். இளம் வயதிலேயே பாஜகவின் தன்னை இணைத்துக் கொண்டவர். இரண்டு முறை கோவை பாராளுமன்ற உறுப்பினர், தமிழக பாஜக தலைவர் ஜார்க்கண்ட், தெலுங்கானா, புதுச்சேரி மகாராஷ்டிரா ஆளுநர் என்று தனக்கு தரப்பட்ட பொறுப்புகளில் எந்த சர்ச்சையும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டவர் சி பி ராதாகிருஷ்ணன்.

இவை எல்லாவற்றையும் விட பிரதமருக்கும் இவர் நெருக்கமானவர். 2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவி ஏற்றார் மோடி. 2002-ஆம் ஆண்டு குஜராத் வன்முறை காரணமாக முதல்வர் பதவியை மோடி ராஜினாமா செய்தார். 2002- ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தல் நடந்தது. குஜராத்தில் மணிநகர் தொகுதியில் போட்டியிட்டு 75,333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2007, 2012 சட்டமன்றத் தேர்தலிலும் மோடி மணி நகர் தொகுதியில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவும் 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில். 2014 -இல் பிரதமர் ஆனதால் மோடி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மணிநகர் தொகுதி என்பது தமிழர்கள் நிறைந்த தொகுதி. சி பி ராதாகிருஷ்ணன் மணிநகரில் முகாமிட்டு தமிழர்களின் மொத்த வாக்குகளையும் மோடிக்கு கிடைக்குமாறு செய்தார்.

எனவே அப்போது முதலே மோடி சி பி ராதாகிருஷ்ணன் நெருக்கம் தொடர்ந்தது. பாராளுமன்ற தேர்தலில் மோடி பிரதமராக இருந்த காலத்தில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தால் அவரை நிச்சயமாக அமைச்சராக்கி இருப்பார் மோடி. அதற்கு பதில் தான் ஆளுநராக்கி அழகு பார்த்தார் மோடி. அதற்கு முன்பு சணல் வாரிய தலைவராகவும் சி பி ஆர் இருந்தார். சி பி ஆர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் பிரதமர் மோடி அமித்ஷா இருவரும் தங்களது வலைதளத்தில் தமிழில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இப்போது கூட 2026 தேர்தலை மனதில் வைத்து தான் சிபிஆர்-க்கு இந்த வாய்ப்பு இது ஒரு அரசியல் முடிவு என்று பேசப்படுகிறது. வாதத்திற்கு இதை ஏற்றுக் கொண்டாலும் அதில் பெரிய தவறு என்று சொல்ல முடியாது.

காங்கிரஸ் தமிழகத்திற்கு செய்ததை விட அதிகமாக பாரதிய ஜனதா தமிழ்நாட்டுக்கு செய்திருக்கிறது. தமிழர்களை கௌரவித்து இருக்கிறது. எல் கணேசன் ஆளுநர் ஆனார். மதவாத கட்சி என்ற விமர்சனத்தையும் தாண்டி தமிழரான அப்துல் கலாமை ஜனாதிபதி பதவியில் உட்கார வைத்து அழகு பார்த்தது பாஜக தான். பாஜக அமைச்சரவையில் முரசொலி மாறன் அமைச்சராக இருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இறந்தபோது பிரதமராக இருந்த வாஜ்பாய் மயானம் வரை சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அடுத்த சில தினங்களில் திமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்தது வேறு கதை.

2025081306212336.jpeg