இந்த தலைப்பைச் சொல்லி ஒருவர் கேட்டார். அந்தக் கேள்வி அவற்றால் இந்த மக்களுக்கு என்ன செய்துவிட முடியும் என்று யோசிக்க வைத்தது. அவை குறித்து மனது அசைபோடத் துவங்கியது. சிந்தனை காட்டாறாய் பல்கிப் பெருகியது. அதன் வெளிப்பாடே இந்த தொடர்.
இதில் சினிமாவோடும், இலக்கியத்தோடும் ஏற்பட்ட பந்தம், எப்போது, எப்படி, எதனால் நிகழ்ந்தது? அது எந்த சூழ்நிலையில் நடந்தது. அதன் பிறகு அவை எப்படிப்பட்ட மாற்றங்களை உள்முகமாக நிகழ்த்தின என்பதை பகிர்ந்திருக்கிறேன். ஒரு வகையில் இது எனது வாழ்க்கை பக்கத்தில் உள்ள முக்கியமான அத்தியாயங்கள் குறித்த மீள்பார்வை என்றும் சொல்லலாம். காரணம் எனது வாழ்க்கையில் இவையிரண்டும் பிரதான அங்கம் வகிப்பவை.
சினிமாவோ, இலக்கியமோ என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை கேள்வியாக என் முன் வைத்தபோது எழுந்த பதில்களை இங்கே எனது அனுபவங்களின் வாயிலாக எழுத்தாக்கி இருக்கிறேன். அவை எப்படி நம்முடைய அழகுணர்வை மேம்படுத்துகின்றன. எப்படி நம்மை கொண்டாட்ட மனநிலைக்கு நகர்த்துகிறது, எப்படி எல்லோரையும், எல்லாவற்றையும் நேசிக்க வைக்கிறது, எப்படி சாசுவத மகிழ்வால் அவை இதயத்தை நிறைத்து விடுகின்றன என்பதை இதை படித்து முடிக்கையில் நீங்களும் உணர்வீர்கள்.
நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் புத்தம் புதிதாய் தன்னை மாற்றிக் கொண்டேயிருக்கிறது. நிகழ்காலத்திலேயே சதா பயணித்துக்கொண்டிருக்கிறது. கலைகள் அனைத்தையும் தனக்குள் சுவீகரித்துக்கொண்டேயிருக்கிற கலைகளின் கலையான சினிமாவும், அதன் இதயமாக இருக்கிற இலக்கியமும் நமக்குள்ளும் அந்த மாயாஜாலத்தை தான் நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றன.
மேலும், திரைக்கலையை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், அதற்குள் பயணித்து அவற்றை படைக்கிற ஆளுமையாக தங்களை செதுக்கிக்கொள்ள தாகித்திருப்பவர்கள் சினிமா குறித்த முக்கியமான சூட்சுமங்களை இதன் வழி உணர்ந்து கொள்ளலாம். இலக்கியம் படைப்பதற்கான ஆதார விதிகள், இலக்கியத்தின் வகைமைகளான அதில் கையாளப்படும் பல வகையான இஸங்களின் ஆதார சுருதிகளை, அவற்றின் பன்முகப்பார்வைகளையும் உதாரணங்களோடு கதை போல போகிறபோக்கில் இந்த தொடர் தொட்டுச் செல்கிறது. இந்த நூல் இவற்றை பயணித்த பாதைகளில் கிடைத்த அனுபவங்களின் வாயிலாகவே உணர்த்திச் செல்கிறது.
சினிமாவிலும், இலக்கியத்திலும் படைப்பு சக்தியாக உருவெடுக்க நினைக்கிறவர்கள் மற்றும் அவற்றின் ஆழமான ரசனையாளர்களுக்கு இந்த நூல் அதற்கான எளிய திறப்பை, அவற்றின் அடிப்படை விதிகளை அறிமுகப்படுத்துகிறது.
சினிமாவும், இலக்கியமும் என்ன செய்துவிட முடியும்? என்று அது தனக்குதானே எழுப்பிக்கொண்ட கேள்விக்கு பதிலாக, இந்த கட்டுரைகள் பயணிக்கின்றன. இதைப் படிக்கிறவர்களின் மனமானது இதன் நிறைவுப்பகுதி வருகிறபோது, சினிமா மற்றும் இலக்கியம் எதைச் செய்ய முடிகிறதோ இல்லையோ, இதைச் செய்துவிட முடியும் என்று மனதிற்குள் எண்ணி பூரித்துக் கொள்ளும். அப்போது அதன் இதயத்தில் உள்ளூர ஒரு உத்வேகம் சிலிர்த்துக்கொண்டு வரும்.
தீராஅன்புடன்,
குலசேகர்
Leave a comment
Upload