சென்னை வடபழனி முருகன் கோயில் பிரசித்தி பெற்றிருந்தாலும், இக்கோயிலுக்கு மிக அருகிலேயே சுமார் 600 வருடப் பழமை வாய்ந்த ஆதிமூலப் பெருமாள் திருக்கோவில் இருப்பது நமக்கு மேலும் பக்தி பரவசத்தை அள்ளித் தருகிறது. தமிழகத்தில் வேலனுடன் மாமன் மாலன் இருக்கும் கோயில்கள் பல உள்ளன. அவை திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை முருகன் மணமுடிக்கும் போது பவளக் கனிவாய்ப் பெருமாளாகவும், செந்தூரில் திருக்கோயில் பிரகாரத்தில் செந்தில் கோவிந்தனாகவும், பழமுதிர்சோலையிலே மலைமீது முருகன் காட்சி தர, அடிவாரத்தில் அழகர்' என்ற சுந்தரராஜப் பெருமாளாகவும் அருள்பாலிக்கின்றார். இதைத்தவிர எண்கண் என்னும் ஸ்தலத்தில் மயில் மீது ஆறுமுருகப்பெருமான் அமர்ந்திருக்கும் கோவிலை ஒட்டி, கருடன் மீது வீற்றிருக்கும் ஆதிநாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சிக்கல் சிங்கார வேலர் திருக்கோயிலை ஒட்டி ‘கோலவாமனப் பெருமாள்’ கோயில் கொண்டுள்ளார். இதேபோன்று வடபழனியிலும் ஆதிமூலப் பெருமாள் என்கிற கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் இருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது.
கோயில் அமைப்பு:
ஸ்ரீஆதிமூலப் பெருமாள் கோயில் கிழக்கு வாசல் கொண்டு அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் மற்றும் கருவறை விமானம் கட்டப்படவில்லை. பிரதான வாசலைக் கடந்து உள்ளே நுழைகையில், பலி பீடமும், அதற்கடுத்து பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வாரை தரிசனம் செய்யலாம். அடுத்துள்ள கருவறை மண்டப தூண்களில் கிருஷ்ணர், அனுமன், மகாவிஷ்ணு போன்ற திருவுருவங்கள் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. மூலவர் சந்நிதி நுழைவு வாசலில் வலது மற்றும் இடது புறங்களில் ஜெயன் மற்றும் விஜயன் ஆகியோர் துவார பாலகர்களாக உள்ளனர்.
கருவறையில் மூலவராக ஆதிமூலப் பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் அமர்ந்த திருக்கோலத்தில் சங்கு சக்கரம் ஏந்தியும் வரத அஸ்த முத்திரையுடனும் சதுர் புஜங்களுடன் கிழக்கு நோக்கியவாறு, இடது திருவடியை மடித்து வைத்து வலது திருவடியைத் தொங்கவிட்டு தாமரை மலர் மீது வைத்தபடி புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறார்.
இங்கே உற்சவ மூர்த்தியாக கஜேந்திர வரதப் பெருமாள் பேரருள் புரிகிறார். எனவே இத்தலம், மகாவிஷ்ணுவின் கஜேந்திர மோட்சம் என்னும் புராணக்கதை தொடர்புடைய திருத்தலமாகக் கருதப்படுகிறது. கருவறைக்கு வெளியே உள்ள அர்த்த மண்டபத்தின் உள்ளே வடக்கு நோக்கி சிறிய திருவடியான வரத ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். தெற்கு சந்நிதியில் உடையவர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாளர், பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. வெளிப்பிரகாரத்தில் இடது பக்கத்தில் தனிச்சன்னிதியில் இரு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடனும், புன்சிரிப்புடனும், சாந்த சொரூபிணியாக அமர்ந்த கோலத்தில் ஆதிலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். உற்சவ மூர்த்தியாகப் பெருந்தேவி தாயார் இருக்கிறார்.
கோயில் வளாகத்தின் வட கிழக்குப் பகுதியில் பரந்து விரிந்த பசுமையான அரசும் வேம்பும் இணைந்து இயற்கைச் சூழலை இதமாக்குகின்றன. இதுவே ஆலயத்தின் ஸ்தல விருட்சமாக உள்ளது. குழந்தைப் பேறு வழங்கும் சந்தான கோபாலன், வழக்குகளில் வெற்றி தரும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தோஷங்கள் போக்க வல்ல கல்யாண சர்ப்பம், தாய்மார்களின் கருவினைக் காக்கும் கர்ப்பஸ்வபினி தாயார், குடும்பப் பிரச்சினைகள் நீங்கி இனிமை நிலவச் செய்யும் சல்லாப நாகங்கள் என்று பல மூர்த்தங்கள், அரசமரத்தடியைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எனவே நம் வாழ்வில் வரும் அனைத்து இடர்களையும் போக்கும் பரிகார ஸ்தலமாக இத்தலம் இருக்கிறது.
ஸ்தல விருட்சம்: அரசமரம்
கோயில் சிறப்புகள்:
இக்கோயிலில் ஆடி பௌர்ணமி அன்று நடத்தப்பட்டு வரும் கஜேந்திர மோட்சம், கருட வாகனம் இங்கு மிகவும் விசேஷம். வாரந்தோறும் புதன்கிழமைகளில் பெருமாளுக்குத் திருமஞ்சனமும், வெள்ளி தோறும் தாயாருக்குத் திருமஞ்சனமும் நடைபெறுகிறது. பெருமாள் சந்நிதியில் ஹஸ்தம் மற்றும் திருவோணத்தில் உற்சவருக்குத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் திருமஞ்சனமும், திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் திருமஞ்சனமும் நடைபெறுகிறது.
வரத ஆஞ்சநேயர் சந்நிதியில் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வடை மாலை சாற்றி வணங்குகின்றனர். குழந்தைகள் படிப்பறிவு, ஞாபக சக்தி, புத்திக் கூர்மை, நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்பட வியாழக்கிழமைகளில் ராமானுஜருக்கு ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
கஜேந்திரமோட்சம்:
மகாவிஷ்ணு ஒரு யானைக்கு மோட்சம் அளித்த ஆன்மீக நிகழ்ச்சி "கஜேந்திரமோட்சம்". இது ஸ்ரீமத் பாகவதத்தில் எட்டாவது ஸ்கந்தத்தில் விவரிக்கப்பட்டு உள்ளது. மகரிஷி வியாசர் மைந்தன் சுகர் இதை பரீக்ஷித்து மன்னனுக்குப் பாகவதம் உரைத்தபோது சொல்லப்படுகிறது. வைஷ்ணவ சம்பிரதாயத்தில் இது சரணாகதி தத்துவத்தை வலியுறுத்துவதாகும்.
கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட யானை, திரிகூட மலையில் உள்ள யானைக் கூட்டத்தின் தலைவனாக வாழ்ந்தது. ஒரு நாள் தாகம் தணிக்கத் தனது யானைக் கூட்டத்துடன் நீர்நிலையை நோக்கிச் சென்றது. அப்பொழுது அந்த குளத்தில் வாழும் ஒரு முதலை கஜேந்திரனின் கால்களைப் பற்றியது.
முதலையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்குப் போராடிய கஜேந்திரனை மற்ற யானைகள் காப்பாற்ற முயன்று தோல்வியுற்றன. தனது இறுதிக் காலம் நெருங்குவதை உணர்ந்த யானை, ஒரு தாமரை மலரைத் தனது தும்பிக்கையால் பற்றி வான் நோக்கி ஆதிமூலமே எனப் பெருமாளை நோக்கிச் சரணாகதி செய்தது.
தனது பக்தனின் துயர் துடைக்க மகாவிஷ்ணு கருட வாகனத்தில் வந்து, சுதர்சன சக்கரத்தால் முதலையின் தலையைத் துண்டித்து யானையை விடுவித்து மோட்சம் அளித்தார்.
இந்த சம்பவத்தை இன்றும் இத்திருக்கோயிலில் வருடம் ஒருமுறை கஜேந்திர மோட்சத்தை இதே பெயருடன் உத்ஸவமாக நடத்தி வருகின்றனர்.
தரிசன பலன்கள்:
ஒவ்வொரு புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், வெள்ளி காலை 7 மணிக்குத் தாயார் திருமஞ்சனமும் நடைபெறுகிறது.
நோய்,கடன் மற்றும் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் பெருமாளுக்குத் துளசி மாலை சாத்தி,துளசி தளம் கொண்டு அர்ச்சனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
திருமணத்தடை நீங்க:
திருமணத் தடை உள்ள ஆண் மற்றும் பெண் யாராக இருந்தாலும் 16 செவ்வாய்க் கிழமை இக்கோயிலுக்கு வந்து மூன்று மாலைகளுடன் அர்ச்சகர் சொல்லுவது போல் பரிகாரம் செய்தால் திருமணத் தடை நீங்கி விரைவிலேயே திருமணம் நடைபெறும். திருமணம் கைகூடிய பின், ஒரு நன்னாளில் புதுமணத் தம்பதியராக வந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.
குழந்தை வரம் கிடைக்க:
குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுபவர்கள் ரோகிணி நட்சத்திரம் அன்று வந்து சங்கல்ப பூஜையில் கலந்துகொண்டு அர்ச்சகர் சொல்வது போல் செய்து அரசமரத்தில் தொட்டில் கட்டி வேண்டினால் கண்டிப்பாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
சுகப் பிரசவத்திற்கு:
இக்கோயிலின் ஸ்தலவிருட்சமான அரச மரத்தின் அடியில் கற்பக ஸ்வரூபிணி தாயார், நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் கருக்காக்கும் தாயாராக அருள்புரிகிறார் .கருவற்ற பெண்கள் தங்களுக்குச் சுகப் பிரசவம் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு சுகப் பிரசவம் ஆனவுடன் நன்றி செலுத்தவும் வருகின்றனர் .
வழக்குகள் முடிவுற:
இத்தலத்தில் இருக்கும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தீராத வழக்குகளையும் தீர்த்து வைப்பவராகத் திகழ்கிறார். தம்பதி களுக்குள் உள்ளக் கருத்து வேறுபாடு நீங்கி அன்னியோன்னியம் ஏற்பட தாம்பத்திய சேஷங்கள் (சல்லாப நாகங்களை) வணங்கிப் பலனடைகின்றனர்.
திருவிழாக்கள்:
பிரதி மாதம் ஏகாதசி, திருவோணம் நட்சத்திரம் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 முதல் 11.30 மணி வரை
மாலை 4.30 முதல் 8.30 மணி வரை
வைகுண்டங்காதசி அன்று நடை முழுநேரம் திறந்திருக்கும்
கோயிலுக்குச் செல்லும் வழி:
இக்கோயில் வடபழனி முருகன் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ. தூரத்திலும், வடபழனி பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கிமீ தூரத்திலும் உள்ளது.
வடபழனி முருகன் கோயிலுக்குச் செல்லும் போது அல்லல் போக்கும் வடபழனி ஆதிமூலப் பெருமாளை வணங்கி வளம் பெறுவோம்!!
Leave a comment
Upload