ஸ்ரீபெரும்புதூரை கரு மேகம் சூழ்ந்துகொண்டிருந்தது. எந்த நேரமும் மிக அதி கன மழை பெய்யக் காத்திருந்தது.
சில் என்ற காற்றும், லேசான தூறலும் இராமநாதனைக் கவலையில் ஆழ்த்தியது.
வேறு ஒருவராக இருந்தால் " கடவுளே இந்த மழை நிற்பதற்கு முன்னால் என்னை வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்து விடு "என்று வேண்டிக்கொண்டிருப்பார்.
ஆனால் இராமநாதனுக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் கிடையாது. தன்னுடைய கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் போர்ட்டிகோவில் நின்று கொண்டு நூறு மீட்டர் தாண்டி வாகனங்களின் பேரிரைச்சலுடன் வளைந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இராமநாதனுக்கு இன்று பல ஏமாற்றங்கள். மழையின் மிரட்டல்!,
வீட்டில் தன் அருமை மகளை பெண்பார்க்க, பிள்ளை வீட்டார்கள் இரவு ஏழு மணிக்கு வருவதாக ஏற்பாடு ஆகி இருந்தது. இப்போது மணி அஞ்சு. ஏழு மணிக்குள் வீடு போய் சேர வேண்டும்.
சென்னை காந்திநகரில் பிரம்மாண்டமான வீடு. தினமும் காலை எட்டு மணிக்கு,வீட்டை விட்டுக் கிளம்பினால் ஒன்பது மணிக்குத் தன் ஃபேக்டரியை அடைந்து விடுவார். டிரைவர் வைத்துக் கொள்ள மாட்டார்.தானே காரை ஓட்டிச் செல்வது தான் அவருக்கு பிடிக்கும்.
இன்று அவருக்கு ஆகப் பெரிய ஏமாற்றம். அவருடைய பார்ட்னர் தோத்தாத்ரி இன்று அவருடன் கூட வராதது தான்.
தோத்தாத்ரியும் இராமநாதனும் இணைபிரியாத நண்பர்கள் கூட. தோத்தாத்ரிக்கு அறுபது வயது. இராமநாதன் அவரை விட பத்து வயது சிறியவர். சரியாக காலை எட்டு மணிக்கு, இராமநாதன் வீட்டை விட்டு கிளம்பும்போது, தோத்தாத்ரியும் அவருடன் சேர்ந்து கொள்வார். தோத்தாத்ரி நெற்றியில் ஒரு மெல்லிய திருமண் இல்லாமல் வெளியே கிளம்ப மாட்டார்.
காரில் ஏறியவுடன் கொஞ்ச நேரத்துக்கு ராமநாமம் சொல்லிக் கொண்டே வருவார். இராமநாதன் புன்னகையுடன் காரை ஓட்டிக் கொண்டிருப்பார். பூந்தமல்லி தாண்டிய உடன் தோத்தாத்ரி நடவடிக்கையில் ஒரு பரபரப்பு வந்துவிடும்.
" ராமநாதா!நம்ம ஆஞ்சநேயர் கோவில் வரப்போகுது. கொஞ்சம் மெதுவாக ஓட்டு" என்பார்
"சார் நீங்க மாறவே மாட்டீங்களா! ஒரு முன்னூறு மீட்டர் உள்ளே போனால் தான் கோவிலே கண்ணுக்கு தெரியும். அந்த ஊர்க்காரங்க, ஒரு பெரிய உண்டியை இந்த ஹைவே பக்கத்துல இருக்குற மரத்துல தொங்க விட்டிருக்காங்க. எல்லாமே கலெக்ஷனுக்கு தான்." என்பார் இராமநாதன்.
"சரி உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் விடு.என்னை தடுக்காதே. "என்று சொல்லிவிட்டு "ஒரு நூறு ரூபாய் கொடு அந்த உண்டியலில் போட்டுவிட்டு வந்து விடுகிறேன்" என்று தோத்தாதிரி சொல்ல இராமநாதனனும் சற்று சலிப்புடன், அவ நம்பிக்கையுடன், ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு, " தோத்தாத்ரி சார்! இந்த புண்ணியம் உங்களுக்கே போகட்டும் எனக்கு எதுவும் வேண்டாம். " என்பார் சிரித்துக் கொண்டே.
" உனக்கு நல்ல புத்தியும் தெய்வ நம்பிக்கையும் வரணும்னு ஆஞ்சநேயர் கிட்ட வேண்டிக்கிட்டு தான் உன்
ரூபாயை உண்டியில் போட்டேன்."என்று தோத்தாத்ரி பலமாக சிரிப்பார் .
"இத பாருங்க தோத்தாத்ரி. எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் கிடையாது.நிரூபிக்க முடியாத அறிவியலுக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கடவுளும் இதில் அடங்கும். நான் உண்டியலில் காசு போடுவது கடவுளுக்காக அல்ல. தினந்தோறும் நான் உண்டியலில் போடும் இந்த பணம் ஏதோ ஒரு நல்ல காரியத்திற்கு,உயிரினங்களின் மேம்பாட்டுக்கு,பயன்பட்டால் போதும்." என்ற இராமநாதனின் பிரசங்கத்தை கேட்கும், தோத்தாத்ரி, "ராமநாதா! கடவுள் நம்பிக்கை என்பது உணர்வுபூர்வமான விஷயம்.ஒரு நாள் உனக்கு எல்லாம் புரியும். "என்பார்.
இராமநாதனும் தோத்தாத்ரியும் ஸ்ரீபெரும்புதூர் போகும்போதும் சரி, வரும்போதும் சரி, இந்த மாதிரி வாக்குவாதங்கள் நடத்திக் கொண்டே தான் இருப்பார்கள்.
மழை வந்தாலும் பரவாயில்லை, பயணத்தை தொடங்க வேண்டியதுதான், என்று முடிவு செய்து காரில் ஏறி அமர்ந்து சென்னையை நோக்கி பயணத்தை தொடங்கினார் இராமநாதன்.
மாலை மணி ஐந்தரை ஆகிவிட்டது பிள்ளை வீட்டார்கள் தன் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் போய் சேர வேண்டும்.
மழை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக் கொண்டிருந்தது மேகமூட்டத்தினால் இருள் சூழத் தொடங்கியது. முழு வேகத்தில்,கார் கண்ணாடி வைப்பர், சற்று முனகலுடன் இயங்கிக் கொண்டிருந்தது.
ஹெட் லைட் வெளிச்சத்திலும் பாதை சுமார் பத்து மீட்டர் வரைக்கும் மட்டும் தான் தெரிந்தது.'சற்று நேரம் ஓரமாக காரை நிறுத்தலாமா?' என்று யோசித்த இராமநாதன் 'மழை இன்னும் பெரிதானால் நிறுத்திக் கொள்ளலாம்' என்று முடிவு செய்தார்.
மணிக்கு முப்பது கிலோ மீட்டர் வேகத்தை தாண்டி காரை ஓட்ட முடியாமல் தவித்த அவர் முகத்தில் அந்த குளிரிலும் நெற்றியில் லேசாக வியர்வைத் துளிகள் அரும்பின. 'நேரத்துக்கு வீடு போய் சேருவோமா' என்ற அவர் கவலை,'முதலில் வீடு போய் சேருவோமா' என்று விஸ்வரூபம் எடுத்தது.
கார் ஸ்டியரிங்கில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்ததனால் விரல்கள் லேசாக வலிக்கத் தொடங்கின. பெரிய லாரிகளும் டிரக்குகளும் அவரது காரை பேரிரைச்சலுடன் முந்தி கொண்டு செல்லும்போது, இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. இன்னும் பாதி தூரம் கூட தாண்டவில்லை என்று இராமநாதன் உணர்ந்து இருந்தார்.
மனைவியையும் மகளையும் நினைத்துப் பார்த்தபோது அவள் அவரது கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
இனி எங்கேயாவது ஒரு மரத்தின் அடியில் காரை நிறுத்தி மழை நின்ற பின் போக வேண்டும் என்று முடிவு செய்தார். காரில் ஜன்னல் கண்ணாடியை சற்று இறக்கி வெளியே பார்த்த போது தான் ஏறக்குறைய ஒரு புயல் போன்ற காற்று வீசிக் கொண்டிருந்ததை அவரால் உணர முடிந்தது. வீட்டுக்கு எப்படியும் போய்விடலாம் என்ற அவரது நம்பிக்கை தரைமட்டமாகியது.
முதல் முறையாக ஒரு மரண பயம் அவரைத் தொற்றிக் கொண்டது.ஒரு மயான மௌனம் அவரை முழுவதுமாக ஆட்கொண்டது.
அந்த இருட்டில் நெடுஞ்சாலையின் ஓரமாக இருந்த ஒரு மரத்தின் அடியில் காரை மெதுவாக நிறுத்தி, மெல்லக் கார் கதவைத் திறந்து வெளியே வந்தார் இராமநாதன். மழை நின்று தூறல் போட்டுக்கொண்டு இருந்தது.
மழை குறைந்திருந்தாலும் காற்றின் வேகம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. சாலையின் எதிர்த் திசையில் ஒரு ஒற்றையடிப் பாதை ஏதோ ஒரு கிராமத்துக்குள் செல்வதை, காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் மங்கலாக தெரிவதைப் பார்த்தார். காற்றின் தாக்கம் தாங்காமல் மீண்டும் காருக்குள்ளே சென்றமர்ந்து ஸ்டார்ட் செய்ய, கார் ஸ்டார்ட் ஆகவில்லை. பல முயற்சிகளுக்குப் பின்னும் கார் இயங்க மறுத்ததால் இராமநாதன் இடிந்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.
அவரது செல்போனிலும் சிக்னல் இல்லை உதவிக்கு கூட கண்ணுக்கட்டும் தூரம் வரை யாரையும் காணவில்லை. அநேகமாக நெடுஞ்சாலை போக்குவரத்தும் நின்று விட்டது.
எப்படியாவது நெடுஞ்சாலையின் எதிர் திசைக்குச் சென்று அந்த ஒற்றையடிப் பாதை வழியாக பொடி நடையாக மக்கள் வசிக்கும் பகுதியை அடைந்து விட்டால் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்பினார்.
மீண்டும் காரை விட்டு இறங்கினார். பேய் காற்றும், ஊசி போல் மழை சாரலும், அவரை கடுமையாக தாக்க தொடங்கின. இராமநாதனுக்கு உடலிலும் சக்தி இல்லை மனதிலும் தைரியம் இல்லை.
அப்போது ஒரு கம்பீரமான குரல் "யோவ் இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?" என்று அதட்டியது. வந்த திசையைத் திரும்பிப் பார்த்த இராமநாதன் பயத்தில் அலறினார்.
ஆறரை அடி உயரம்,வாட்ட சாட்டமான உடல் வாகு, திறந்த மார்பு, இடுப்பில் இருந்து முழங்காலுக்கு சற்று கீழ் வரை பஞ்சகச்சம் போல் கட்டிய வேஷ்டி. தடித்த புருவம்,அடர்ந்த மீசை,... மிக ஆரோக்கியமான ஒரு விவசாயியின் தோற்றம்.
அந்த ஆசாமியைப் பார்த்தவுடன் இராமாநாதனுக்கு.. சப்த நாடியும் அடங்கியது.
"நீ....நீ.....நீங்க.."
"யோவ்! முதல்ல என்கூட வா" என்று கூறிவிட்டு இராமநாதன் கையைப் பிடித்து இழுத்தவாறு எதிர் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அவன். இராமநாதனால் அவனது இரும்பு பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.
சுமார் ஒரு அறுபது அடி கடக்கும் போது ஒரு பயங்கர சத்தத்துடன் ஏதோ ஒரு மலையே தன் பின்னால் சரிவது போன்று உணர்ந்த இராமநாதன் சட்டென்று திரும்பி பார்த்தார்.
கண்ணெதிரே ஓங்கி உயர்ந்த மரம் ஒன்று அவர் கார் மீது விழுந்து, கார் அப்பளம் போல் நொறுங்குவதைக் கண்டபோது இதயத் துடிப்பு அதிகமாகி முழு உடலும் குளிர் ஜுரம் வந்தது போல் இராமநாதனுக்கு நடுங்கியது.
அப்போது அந்த கிராமத்து ஆசாமி அவர் கையை உதறிவிட்டு "யோவ் அதுபோனா போகட்டும்.நீ உசுரோட இருக்கயில்லை! சத்தம் போடாமல் என் பின்னாலேயே இந்த பாதையிலே வா . அங்கு அனுமார் கோவிலில் கூத்துக் கட்டறத கொஞ்ச நேரம் பாத்துட்டு போகலாம்." என்று அத ட்டலாகக் கூற, பெட்டிப் பாம்பாக அடங்கிய இராமநாதன் மறு பேச்சின்றி அந்த வாட்டசாட்டமான ஆசாமியை பின் தொடர்ந்தார். ஆசாமியின் வேகத்துக்கு நடக்க முடியாமல் மூச்சு இரைக்க ஓட்டமும்நடையுமாக அவரைப் பின்தொடர்ந்தார்.
இது எல்லாமே தன் கனவாக இருக்கக் கூடாதா என்று எண்ணினார்..
ஒரு பத்து நிமிஷம் நடந்தார். அருகில் மங்கலான வெளிச்சத்துடன் ஒரு கோவிலையும், அந்தக் கோவிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒரு கூத்து நடந்து கொண்டிருப்பதையும், ராஜபார்ட் வேஷத்தில் ஒருவர் உச்ச ஸ்தாயியில் பக்கவாத்தியங்களுடன் பாட்டு பாடிக்கொண்டிருந்ததையும் பார்த்தார்.
இராமநாதன் வருவதை பார்த்த கிராமத்து பெரும்புள்ளிகள் கூத்தை நிறுத்திவிட்டு திரளாக இராம நாதனை வரவேற்க ஓட்டமும் நடையுமாக அவர் வரும் பாதையில் அவரை எதிர்கொண்டு அழைத்தனர்,
கிராமத் தலைவர் கையில் இருந்த ஒரு மாலையை இராமநாதன் கழுத்தில் அணிவித்துவிட்டு "ஐயா! வாங்க ஐயா! இன்னைக்கு அனுமார் கணையாழிப் படலம் கூத்து நடக்குது. நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்ங்க."என்றார்,
இராமநாதன் ஒரு அசட்டுச் சிரிப்புடன் பதில் வணக்கம் சொல்லிவிட்டு மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தார்.
"ஐயா உங்களை எங்களுக்கு பல வருஷமா தெரியும் நீங்களும் உங்க நண்பரும் மெயின் ரோடுல தொங்கவிட்டு இருக்கிற உண்டியலில் காசு போடாம போக மாட்டீங்க அந்த அனுமார் சாமி தான் இன்னைக்கு உங்களை இங்கே வரவச்சிருக்காரு!" இன்று தலைவர் சொல்ல கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இராமநாதன் ஒருவாறு சமாளித்து கைகூப்பி "ரொம்ப நன்றிங்க! எனக்கு சென்னையில் அவசர வேலை இருக்கு… நான் போயே ஆக வேண்டும். எனக்கு ஒரு வண்டி வேணும் …எவ்வளவு செலவா னாலும் பரவாயில்லை. "என்றார்.
ஒன்றும் பிரச்சனை இல்லைங்க. நம்ம வீட்டில் ஒரு கார் இருக்குது. உங்கள பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று தலைவர் கூறியதும் இராமநாதனுக்கு கண்ணில் நீர் மூட்டியது.
இராமநாதன் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தலைவரிடம் "ஐயா! உங்க கிராமத்து நண்பர் ஒருவர்தான் எனக்கு வழிகாட்டி, இந்தப் பாதையில் அழைத்து வந்தார், ஏன்! என் உயிரை காப்பாற்றியதே அவர்தான்!அவருக்கு நன்றி சொல்லணும்… தயவு செய்து அவரை கூப்பிடுங்கள்."என்றார்.
தலைவர் வாய்விட்டு சிரித்து விட்டு "ஐயா! நீங்க இந்த மழையிலும் காத்து லையும் ரொம்ப பயந்து இருக்கீங்க. உங்களை யாருமே கூட்டி வரலீங்க. நீங்க தனியாத் தான் நடந்து வந்தீங்க. நீங்க தொலைவில் வரும்போது நாங்க உங்களை கவனிச்சிட்டோம்." என்றார்.
இல்லை நல்ல உயரமா கட்டுமஸ்தான உடம்புடன் பெரிய மீசை,முண்டாசுடன் ஒருத்தர் பின்னாடி தானே நான் நடந்து வந்தேன் என்றார் இராமநாதன். அவர் நாக்கு வறண்டு கண்களில் கண்ணீர் ஆறாக பெருகி கன்னத்தில் வழிந்தது.
தலைவர் அமைதியான புன்னகையுடன் "ஐயா உங்க முன்னாடியோ, பின்னாடியோ யாரும் வரல. நீங்க அம்புட்டு பாதையிலும் தனியாகத்தான் நடந்து வந்தீங்க. " என்றார்.
இராமநாதன் அருகில் இருந்த ஒரு பாறையின் மீது அமர்ந்து விக்கி, விக்கி அழத் தொடங்கினார்.
இராமநாதனுக்கு ஒரு விஷயம் இப்போ தெளிவாக புரிந்து விட்டது.
உண்டென்றால் அது உண்டு! இல்லை என்றால் அது இல்லை!!!
Leave a comment
Upload