நேபாளம் பற்றி எரிகிறது என்று இந்த வார அட்டைப் பட செய்தி கேட்டு நெஞ்சம் பதைபதைக்கிறது.
பின்னணி காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்.
இரண்டு வாரங்களுக்கு முன் இந்த ஊரில் தான் ஜாலியாக சுற்றித் திரிந்தோம் என்று நினைக்கையில் அந்த ஊரின் நிலை நினைத்து கவலை வருகிறது.
கைலயால பயணத்தில் சீனாவுக்கு நுழையுமுன் நேபாளம் பற்றி சில விஷயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.
அதற்கு முன்பாக சில சம்பிரதாய அறிமுகங்கள்.
எங்கள் குழு.
(அஞ்சலி,சிவா,கோமதி,பிரவீன்,செல்வி,பிரபாவதி,மஹாதேவன்,நாகராஜுடன்) குஹேஸ்வரி கோவில் வாசலில்.
பத்து பேராக இருக்க வேண்டியது சில காரணங்களால் ஒன்பது பேராக ஆனோம்.
டாக்டர் மஹாதேவன் அவரது மனைவி டாக்டர் பிரபாவதி, டாக்டர் செல்வி, நாகராஜன், அஞ்சலி சென்னையிலிருந்து. ஹாங்காங்கிலிருந்து பிரவீன், கோமதி நான் மற்றும் அமெரிக்காவிலிருந்து சிவா. இது தான் எங்கள் சின்ன குழு.
காட்மாண்டு சென்று இறங்கியதிலிருந்து ஒரே குடும்பம் என்னுமளவிற்கு நெருக்கமானோம். இதில் படிக்கையில் இவர்களையெல்லாம் தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் ஆன்மீக யாத்திரை செய்யும் போது என்ன பெயரில் வந்தாலும் நீங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகி விடுவீர்கள். அதில் சந்தேகமேயில்லை.
சின்ன குழுவாக இருந்தாலும் பெரிய குழுவாக இருந்தாலும் இது பொருந்தும். என்ன ஒன்று சின்ன குழுவாக இருக்கையில் அதை சமாளிப்பது சுலபம். ஆட்கள் சேர சேர காலையில் எழுப்பி காபி குடிப்பதிலிருந்து ஏராள திட்டமிடல் தேவை.
எங்களுடன் குஜாராத்திலிருந்து ஒரு குடும்பம். அங்கிள், ஆண்டி, ராஜ்தீப், மெஹூல், மற்றும் அவர்களது தங்கை சேத்னா.
மொத்தம் 14 பேர்கள். இந்த சின்ன குழு தான் கைலாயம் செல்கிறோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் நேபாளம் வழியாக திபத்திற்கு செல்லும் போது குறைந்த பட்சம் 25 பேர் இருக்க வேண்டும் என்ற தகவலை பாஷு அதிகாரி எங்கள் டிராவல் ஏஜெண்ட் சொல்கையில் முதலில் புரியவில்லை.
காட்மாண்டில் ஒரு நாள் இரவு தங்குவோம் என்று நினைத்திருக்கையில் மூன்று நாட்கள் தங்க வைக்கப்பட்டோம். அதற்கு காரணம் மனோகர் டிராவல்ஸ் எங்களுடன் அல்லது எங்களை அவர்களுடன் கோர்த்து விடப் போகும் திட்டம் என்று புரியவில்லை.
பயண பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்கட்டும்.
காட்மாண்டுவில் பசுபதி நாத் கோவில் பார்க்க வேண்டிய ஒன்று.
(பசுபதிநாத் கோவிலில் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. போனை பிடிங்கி கொண்டு விடுவார்களாம். எதற்கு வம்பு)
பசுபதிநாத் கோவில், நேபாளத்தின் காத்த்மாண்டு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மிகவும் பழமையான சிவன் கோவில். இது 5ஆம் நூற்றாண்டுக்கு மேல் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பசுபதிநாத் என்பதன் பொருள் "எல்லா உயிரினங்களுக்கும் பாதுகாவலாகிய சிவன்".
பசுபதிநாத் கோவிலில் பயணம் செய்யும் பக்தர்கள் பன்முக சிவலிங்கத்தை கண்டு களிக்கலாம், தரிசிக்கலாம்.
மேலும், பசுபதிநாத் கோவில் பாக்மதி ஆறின் கரையில் அமைந்து உன்னதமான ஆன்மிக சூழலை தருகிறது. நேபாளத்தின் மத, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது இந்த கோவில்.
பசுபதிநாத்தை சுற்றிலும் சுற்றுலா பயணிகளுக்கு பொருட்கள் விற்க ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது. அதிலும் ஒவ்வொரு சன்னதியிலும் ஐமபது ரூபாய் போட்டாலே போதும் கழுத்து வலிக்கும் அளவு ருத்திராட்ச மாலைகளாக போட்டுத் தள்ளி விடுகிறார்கள்.
நேபாளத்தின் அருள்மிகு ஜலநாராயணர் திருக்கோயில் மிகவும் பிரசித்தியான மற்றும் புனிதமான கோவில். இங்கு விஷ்ணு நீர் மேல் சயனமாக காட்சி தருகிறார், அதனால் அவரை ‘புதநீல்கந்தா’ என்றும் அழைக்கின்றனர், அதாவது “நீலத்தொண்டை” என்பதாம். இங்கு மட்டும் வெளியிலிருந்தே படம் எடுக்க முடிகிறது.
கோவில் 1400 ஆண்டுகள் பழமையானது; பாற்கடலில் மிதக்கும் வகையில் மூலவர் இருக்கிறார். சங்கு, சக்கரம், கதை, மாணிக்கங்களை கைகளில் வைத்து, தங்கக் கிரீடம் பிரத்தியேகமாக வெள்ளிக் கிரீடத்துடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார்.
கண்கவர் நீர் மேல் திவ்ய சயனமாக காட்சி தரும் இந்த கோவில் இனம் புரியாத ஒரு ஆன்மீக உணர்வை கொடுப்பது நிசம்.
பசுபதி நாத் கோவில் அருகே இருக்கும் குகேஸ்வரி கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
பார்வதி பஸ்பமான போது பின்பக்கம் சாம்பலாக விழுந்த இடம் தான் இந்த கோவில். தாந்த்ரீகமான வழிபாடு இங்கு பிரசித்தி.
இங்கு சிலை இல்லை, மாறாக ஒரு கலசம் வைத்து தான் அம்பாளை வணங்குகின்றனர்.
பாக்மதி ஆற்றின் அருகே அமைந்திருக்கும் இந்தக் கோவிலும் பசுபதி நாத் கோவிலுக்கு அருகே 1 கி.மீ தூரத்தில் தான் அமைந்திருக்கிறாது.
பார்க்க வேண்டிய கோவில். நவம்பர் மாதத்தில் வரும் குகேஸ்வரி திருவிழாவும். நவராத்திரியும் இங்கு மிகப் பிரசித்தி.
அடுத்ததாக காட்மாண்டுவில் பார்க்க வேண்டிய இடம் சுயம்புநாத் கோவில். இது 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். குரங்கு கோவில் என்றும் சொல்கிறார்கள். அத்தனை குரங்குகள் இங்கே கூட்டம் கூட்டமாக குடியிருக்கிறது.
புத்தமத கோவில் ஒரு தாமரை சுயம்புவாக எழும்பியதால் கட்டப்பட்டதாம். கோவிலின் வெள்ளை கோபுரமும் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களும் நகரின் பல இடங்களிலிருந்து தெரியும். போதிசத்வா மஞ்சுஶ்ரீ என்பவரால் இந்த மலையை சுற்றியுள்ள ஏரியை வெளியேறச் செய்து, கோவிலுக்கு செல்ல வழி பிறந்ததாம்.
இந்துமதம் மற்றும் புத்தமதம் இருவருக்குமான இந்த இடம் அத்தனை அழகு. ஒரு பத்திரிகையாளனாக இந்த இடத்தில் நடந்த துணுக்குச் செய்தியை சொல்லியே ஆக வேண்டும்.
பாவம் ஒரு நேபாளப் பெண்மணி பிரவீனிடம் தன்னுடைய செல்போனை கொடுத்து விட்டு விதவிதமாக போட்டோ எடுக்கச் சொல்ல, அவரது மனைவியையே இத்தனை கோணத்தில் இதுவரை போட்டோ எடுத்ததில்லை என்று நொந்து கொள்ளும் அளவு படுத்தி எடுத்து விட்டார்.
இன்னொரு கோவில் டோலேஷ்வர் மஹாதேவ் கோவில். காட்மாண்டுவிலிருந்து 40 நிமிட தூரத்தில் இருக்கிறது. அரியானா சூப்பர் பம்பர் குலுக்கல் போல ரோடெல்லாம் குலுங்கி குலுங்கி தான் செல்ல வேண்டும். அத்தனை மோசமான சாலைகள்.
இந்த கோவில் கேதார்நாத்தில் இருக்கும் கோவிலின் தலையாம். அதாவது மஹாபாரத புராணத்தின் படி பாண்டவர்களிடமிருந்து ஒளிந்து கொள்ள சிவபெருமான் ஒரு காளையாக உருவெடுத்தார். பிடிபட்ட போது அவரது உருவம் பிரிந்து ஐந்து இடங்களில் சென்றது. அதில் தலைப் பகுதி இருக்கும் இடம் தான் டோலேஷ்வர் மஹாதேவ் கோவில். நான்காயிரம் வருடங்கள் பழமையானது. கேதார்நாத்தில் இருக்கும் வழிபாட்டு முறைகள் தான் இங்கும் பின்பற்றப்படுகிறது.
பொதுவாக நேபாளிகள் நாங்கள் பார்த்தவரை கட்டிய பசு போல நல்லவர்களாகவே இருந்தார்கள்.
சமீபத்திய பத்திரிகை செய்திகளை பார்க்கும் போது இந்த மக்களுக்குள்ளேயா இத்தனை கோபம் அடங்கியிருந்தது என்று ஆச்சரியம் எழுந்தது.
காட்மாண்டுவில் பார்க்க வேண்டியது இந்த முக்கிய இடங்கள் தான்.
ஆனால் நாங்கள் சுற்றி அலைந்து ஒரு ஸ்கை டவரை கண்டு பிடித்து அதன் மீது சென்று அங்கிருந்த அம்ரிதா என்ற சூட்டிகையான பெண்மணியிடம்ருந்து காபி வாங்கிக் குடித்து, அந்த கண்ணாடி தரையில் நடந்து….
ஜாலியாகத்தான் சென்று கொண்டிருந்தது…….
அடுத்தாக நடக்கவிருக்கும் சோகம் தெரியாமல்………
அடுத்த வாரம்…….
Leave a comment
Upload