தொடர்கள்
கதை
வெள்ளிவிழா - பொ.வெ.இராஜகுமார்

20250813085006854.jpeg

கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டான் அழகிரி.. அடர்த்தியில்லாத மிலிட்டரி கட் முடி. திட்டு திட்டாக மாநிற முகத்தில் கருமை படர்ந்த முகம். சற்றும் சம்பந்தமில்லாத குங்கும பொட்டின் தீற்று. கருநீல நிற கோட், அதனுள் எட்டிப்பார்த்த சிவப்பு நிற டையை சரிசெய்து கொண்டு, மேல்சட்டை நன்றாக இடுப்புச்சராயில் செருகியிருக்கிறதா என்று இரு கைவிரல்களாலும் அதை நீவி சரிசெய்து, கோட் பட்டனை மாட்டி பெருமூச்சிழுத்து, சரியும் தொப்பையை நேராக்கிக் கொண்டான்.

தயார். ஶ்ரீதரின் பிரேம்ராக்ஸ்ஸின் 1038 வது மேடைக் கச்சேரி. கடந்த இருபத்தியைந்து ஆண்டுகளாக அதில் பிரதான கோரஸ் பாடகன். ஆரம்ப காலத்தில் இருந்தே உயிர் நண்பன் ஶ்ரீதரின் அபிமானத்தில் அவனின் இசைப் பயணம் ஓடிக் கொண்டிருந்தது. அன்றைய கச்சேரியிலும் வழக்கம்போல, கடவுள் வாழ்த்து அவன் தான். சீர்காழிகோவிந்தராஜன் சார் பாடிய ‘விநாயகனே” என்ற பாடலில் ஆரம்பித்து கச்சேரி துவங்கும்.

பத்து வயதிருக்கும் போதே மெல்லிசைப் பாடல்கள்மீதான ஈர்ப்பு, வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மனப்பாடம் செய்து மைக் இல்லாமல், உச்ச ஸ்தாயில், குரலெடுத்துப் பாடுவான். அவனின் அம்மா அவன் பாடுவதில் மயங்கி, ஒவ்வொரு நாளும், பூஜைக்குமுன்பாக விநாயகர் ஸ்துதி, முருகன் பாமாலை, சக்தி உபாசனை என்று பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வாள். இவனும், கேட்பதற்கு குடும்பமே காத்திருக்கும்போது, வெந்த இட்லிகளோடு, தேங்காய் சட்னியின் வாசனையும் மூக்கைத் துளைக்க, சத்தமாக பாடுவான். ஸ்ருதி பேதமோ, தாள கதியோ சரியாக இல்லாமல் போனாலும் அவன் கவலைப் பட்டதில்லை. பாடுவது ஒன்றே அவனின் மனத்தை நிறைத்த பேரின்பமாய் இருந்தது.

இதோ, இன்றும் தயாராகிவிட்டான், கச்சேரி துவங்க இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன. காய்ச்சிய நீரை பதமான சூட்டோடு பிளாஸ்க்கில் அம்மா ஊற்றி தந்ததை, மூடி திறந்து இரண்டு முறை சிறிதாக வாயில் ஊற்றி, தொண்டைக்குள் நிறுத்தி விழுங்கினான். முதல் பாட்டிற்கு அப்புறம், அவன் பின் சீட்டில் போய் அமர்ந்து கொள்வான். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு வாத்தியக் கருவிகளின் ஆதிக்கம்மேலோங்க, வார்த்தைகளோ, இசையோ எதுவும் விளங்காமல், எழும் நாதக் கூச்சலில், தற்காலத்திய பாடல்கள் பாடப்படும்! இல்லை! கூவப்படும்! அவ்வப்போது எழும் கூச்சலுக்கு பக்கத்துணையாக, இவனையும் ஓரிரண்டு பாடல்களுக்கு ஒப்பாரியாக, மன்னிக்கவும், ஒத்தாசையாக பாட வைக்கும் சந்தர்ப்பமும் வரும்.

அவ்வளவுதான். அன்றைய பேட்டா, பாடற்கூலி எல்லாம் சேர்த்து ஆயிரமோ தொள்ளாயிரமோ கொடுப்பார்கள். அன்றைய கடமை முடிந்து அடுத்த கச்சேரி, அடுத்த ஒப்பாரி என தொடர்ந்து கொண்டிருந்தது, அவனின் இசைப் பயணம்.

அவனுடைய குடும்பம் பெரியது! அவனையே நம்பி இருந்த, உழைத்து ஓடாய்த் தேய்ந்த அவனின் அம்மா, தொடர்ந்த புகைப் பழக்கத்தால், இருமிக்கொண்டிருக்கும் வயதான அப்பா, தம்படிக்கு பிரயோசனமில்லாமல், அக்கா! அக்கா! என உறவாடி அவ்வப்போது சாப்பாட்டோடு, செலவுக்கு பைசா வாங்கிப் போகும், மனைவிமுறை சொந்தங்கள், என அவனின் பெரிய குடும்பம், அவனின் மாதம் ஒருகச்சேரி வருமானத்தில் நடக்குமா என்ன? அவனும் வேலைக்குப் போக ஆரம்பித்தான், பைஃனான்ஸ் கம்பெனியில், வட்டி வசூலிக்கும் வேலை. காலை எட்டு மணிமுதல், இரவு பத்து மணி வரை, பலவித பின்னணி இசையில், இரையும் பழைய பைக்கில், நகரத்தையே வலம் வருவான்.

அவனுடைய வீட்டில் கூட யாரும் அவனை இப்போதெல்லாம், பழம் பாடல்களைப் பாடச் சொல்லி கேட்பதில்லை. இவனின் வருமானத்தில், ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், எல்லாம் எதிர்பார்த்து, எதிர்பார்த்து, ஏமாந்து நின்று, ஒரு கட்டத்தில், பிள்ளைகளின் கான்வென்ட் பள்ளிக்கு ஃபீஸ் கூட கட்ட முடியாமல், தடுமாறியபோது, அவனின் பெண்டாட்டி முழித்துக் கொண்டாள். இனியும் இவனை நம்பி இருந்தால், தேங்காய் மூடி கூட கிடைக்காது என அவளே, பக்கத்தில் இருந்த பள்ளியில் கிண்டர்கார்டன் டீச்சராய் வேலைக்கு சேர்ந்து, மிகச் சிறிய வருமானமென்றாலும், சர்க்கரைக்கும், பருப்புக்கும் பக்கத்து வீட்டில் கடன் கேட்கும் நிலையில்லாமல், தப்பித்தது குடும்பம்.

அன்று தான், அவன் மேடையில் பாட ஆரம்பித்து, இருபத்தியைந்து வருடங்கள் முடிந்திருக்கின்றன. இது அவனின் வெள்ளிவிழாக் கச்சேரி. காலையில், பள்ளிக்கு பிள்ளைகளைக் கிளப்பி தயார் செய்யும் அவசரத்தில் இருந்தாள் அவனின் மனைவி. அவனும் ஒன்றும் சொல்லவில்லை; அவளும், வழக்கமாக, “போயிட்டு வரேங்க!” என்று சொல்லிவிட்டு பறந்துவிட்டாள். இவன் மட்டும், பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான். காரணம் இல்லாமல் ஆசி வாங்குகிறானே என நினைத்தாலும், நன்றாக வாழ்த்தி அனுப்பினார்கள், அவனின் பெற்றோர்.

இதோ இரண்டாவது மணி அடித்துவிட்டது. இசைக் கருவிகளின் முக்கல் முனகல்களோடு, கச்சேரிக்குத் தயாராயினர் கலைஞர்கள். இவனும் குரலைச் செருமிக் கொண்டான். முதல் பாடலை இவன்தானே பாடவேண்டும். அதில் இவனுக்கு சற்றுப் பெருமை தான். ஆரம்ப பாடல் சற்றும் பிசிறு தட்டாமல், குறைகள் இல்லாமல் பாட வேண்டும். ஒவ்வொருமுறை மேடையேறும் போதெல்லாம், வாயைத் திறந்து பாடும் போது, எங்கே குரல் உடைந்துவிடுமோ, தொண்டையில் செருமல் வந்துவிடுமோ எனப் பயப்படுவான். வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து, பாடுவதற்கு பயிற்சி மேற்கொள்வதென்பது குறைந்து குறைந்து, ஒரு கட்டத்தில், பாத்ரூமில் கண்ணாடி முன்னே வாயைத் திறந்து, அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்பி பார்த்துக் கொள்வதோடு அவனின் பயிற்சி முடிந்துவிடும். அவனுக்கு ஏது நேரம்?

இந்தக் கச்சேரியில் கூட அந்த அம்பாளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஓங்கிக் குரல் எழுப்பிப் பாட வேண்டியது தான். மீதியெல்லாம் அவள் செயல். மூன்றாவதும், இறுதியானதுமான மணி அடித்தது. அரங்கின் விளக்குகளெல்லாம் அணைந்தன. ஶ்ரீதரின் 1., 2., 1., 2., என்றவிரல் சொடுக்கில், “விநாயகனே! வினை தீர்ப்பவனே!” என உச்சஸ்தாயியில் பாட ஆரம்பித்தான், அழகிரி. நன்றாகத்தான் பாடினான். அரங்கத்திலிருந்த முக்கால் வாசிபேர்கள் கை தட்டினார்கள். அது இவனுக்குக் கேட்டது. கைகூப்பி வணங்கிவிட்டு, பின்னால் போய் அமர்ந்து கொண்டான்.

அடுத்து, அடுத்து என இளம் பாடகர்கள், வாயைத் திறக்காமலே, மைக்கை முத்தமிட்டபடி, பெண்மைச் சாயலில், காதுகளைக் குத்திக் கிழிக்கும் குரலில், புதிய பாடல்களைப் பாட ஆரம்பித்தார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒவ்வொரு டிவி சேனலும், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில், பதின்வயது பாடகர்களை மேடையேற்றிப் பாட வைத்து விளம்பரம் தேடிக் கொள்வதால், அவர்களும் மிக வேகமாக பிரபலமடைந்து விடுகிறார்கள். அதுவுமில்லாமல், இப்போது வரும் பாடல்களுக்கு, சுவர ஞானமும், ஏழரைக்கட்டை குரலும் அவசியமில்லையே! அதனால் தான், எல்லா மெல்லிசைக் குழுக்களும் இவர்களுக்குப் பாட வாய்ப்புத் தருகிறார்கள். இவர்களும் நன்றாக சம்பாதிக்க கற்றுக் கொள்கிறார்கள். சம்பாதிக்கட்டும்.

இப்படியே, கச்சேரி தொடர்ந்தது. அந்த இருட்டிலும், மேடையிலிருந்தபடியே, தன்னுடைய மனைவியும், குழந்தைகளும் வந்திருப்பார்களோ, என நப்பாசையில் தேடினான். ஒன்றும் தெரியவில்லை. இரவு பத்து மணிக்கு கச்சேரி முடியும் தறுவாயில், கடைசிப் பாடலை பாடுவதற்கு முன்பு, விழா ஏற்பாட்டாளர்கள், ஶ்ரீதருக்கும், பாடகர்களுக்கும், சிறப்பு செய்தார்கள். அந்த நேரத்தில், எதிர்பாராவண்ணம், ஶ்ரீதர் மைக்கை கையில் பிடித்து, “அன்பர்களே! இந்த நிகழ்ச்சி 1038 வது நிகழ்வாக நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல், என்னுடைய ஆத்ம நண்பர், பாடகர், திரு அழகிரி அவர்கள், நம்முடைய பிரேம்ராக்ஸ் இன்னிசைக் குழுவில், இணைந்து, இன்றோடு இருபத்தியைந்து ஆண்டுகள் ஆகிறது. அவரின் அசாத்திய சாதனையைப் பாராட்ட அவரை மேடைக்கு அழைக்கிறோம். கூட அவரின் பெற்றோரும், மனைவி குழந்தைகளும், இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களையும், மேடைக்கு அழைக்கிறோம்” என்றான்.

உடனே விளக்குகளெல்லாம் பிரகாசமாய் எரிய, அழகிரி, தாளாத சந்தோஷத்தோடும், பிரமிப்போடும், தள்ளாடி மேடைக்கு வந்தான். அவனின் இரு குழந்தைகள் ஓடி வந்து அவனைக் கட்டிக் கொள்ள, அவனின் மனைவியும், பெற்றோரும் அவனுக்கு வாழ்த்துச் சொன்னார்கள். கலங்கிய கண்களோடு, பெற்றோரின் கால்களில் விழுந்து வணங்கினான்.

விழா ஏற்பாட்டாளர், பிரசாந்த் & கோ வின் இயக்குநர், அவனுக்கு சால்வைஅணிவித்துப் பெரிய கேடயத்தை வழங்கினார். கூட ஶ்ரீதரும், இசைக்குழுவினரும் புடை சூழ போட்டோ எடுத்துக் கொண்டனர். பின்னர், நிகழ்ச்சியின் இறுதிப் பாடலை சோலோவாக அவனையே பாடச் சொன்னான் ஶ்ரீதர். அதிர்ச்சிக்கு மேல் இன்ப அதிர்ச்சியாக, அவன் கைகளில் மைக் திணிக்கப்பட, அரங்கத்தை நோக்கினான். அரங்கு நிறைந்து, ஆங்காங்கே திரளாக மக்கள் நின்று கொண்டிருக்க, இவன் தன் நடுங்கும் கைகளால், மைக்கை உயர்த்த, கரகோஷம் அரங்கத்தை அதிர வைத்தது.

இன்று தான் அவன் மீண்டும் பிறந்தது போல் உணர்ந்தான். தனக்கும், தன்னுடைய இசைக்கும் என்றும் வரவேற்பு இருப்பதை தெரிந்துகொண்டான். இன்று தான் அவனுக்கு சுப தினம். குரலை உயர்த்தி சீர்காழியின் “ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்குத்தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்! அடுத்தவர் நலத்தை தினமும் நினைப்பவருக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்!” என்ற பாடலைத் தன்னை மறந்து பாடினான்.