தொடர்கள்
கதை
காணிக்கை. கே.ராஜலட்சுமி

20250813083952914.jpeg

வெள்ளிக் கிழமை காலை. அரக்கப் பரக்க அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் கனகா.அயர்ன் செய்திருந்த பட்டுப் புடவைகளில் நான்கை எடுத்து கட்டிலில் வைத்தாள். அதிலொன்றை எடுத்து அவசர அவசரமாக கட்டிக் கொண்டு பையைத் திறந்து பார்த்து ‘ ஐயோ!, சேஞ்ச் இல்லையே’ என தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வேகமாகப் போய் பீரோவைத் திறந்து சில்லறைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு அவ்வப் போது கடிகரத்தையும் பார்த்துக் கொண்டு கிளம்பினள். ‘ லன்ச் பேக் மறந்துடாதே!’ என்று அவள் மாமியார் கோமதி கூற அதைக் கையில் எடுத்துக் கொண்டே ‘ வர்றேன்மா! ‘ என்று சொல்லிக் கொண்டு வெளியேறினாள். ‘ ஒரு புடவ கட்டறதுக்கு எதுக்காக நாலு புடவய எடுத்து வெளிய போடணுமோ? என்ற கோமதியின் முணுமுணுப்பு காதில் வந்து விழுந்ததை சட்டை செய்யவில்லை அவள்.

டூ வீலரை சர்வீஸுக்கு விட்டு இரண்டு நாளாச்சு.திங்கட்கிழமை கிடைக்கலாம்.

‘ இன்னிக்கு முகூர்த்த நாள் வேற, ஊபர், ஒலா ஒண்ணும் கிடைக்காது’ என்று எண்ணிக் கொண்டே நடந்தவள் ஓர் ஆட்டோ டிரைவர் குரல் கேட்டு நின்றாள்.

‘ மேடம் எங்க போணும் ? வாங்க ‘

‘ எல்ஐசி ஆபீஸ் , மௌன்ட் ரோட் போணும்பா , எவ்வளவு ?

‘ மீட்டர் சார்ஜ் கொடுங்க போதும்’

பரவாயில்லையே என நினைத்துக் கொண்டு ஏறி அமர்ந்தாள்.

வேகமாக சென்றாலே அரை மணி நேரம் ஆகும் என்று தோன்றியது. ஆட்டோ பஜார் ரோடடைக் கடந்து பின் சைதை பாலத்தில் இறங்கி ஒரு வழியாக மவுண்ட் ரோடு மேலே ஏறியது. மெட்ரோ ஸ்டேஷனைக் கடக்கும் போது‘ மெட்ரோ ட்ரெயின் இருந்து என்ன புண்ணியம், வீட்டிலேர்ந்து ஸ்டேஷனுக்கு வரவே நூறு ரூபாய் கேட்பான்’ என்று எண்ணிக் கொண்டே தன் கைப்பையைத் திறந்து லலிதா சஹஸ்ரநாமம் புத்தகத்தைப் பிரித்தாள்.

‘ சிந்தூராருண விக்ரஹாம், த்ரிநயணாம், மாணிக்ய மௌளிஸ்புரத் ‘

‘ கொஞ்சம் சீக்கிரம் போப்பா’

‘ மேடம், வேகமா போனா மட்டும் சீக்கிரம் போக முடியுமா? போய் சிக்னல்ல தானே நிக்கணும், கரெக்ட் ஸ்பீட் ல தான் போணும் ‘

‘ சரி சரி , ஸ்ரீ மாதா மஹாராஜ்ஞீ ஸ்ரீமத் சிம்மாஹ்சனேஸ்வரி ‘

‘ மேடம், நீங்க எல்ஐசியில வேலை பாக்கறீங்களா?’

‘ஆமாம்பா ஆமாம். இன்னும் இரண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு’, என்றாள்.

‘ என் ப்ரண்டு சொல்வான், நிறைய ஸ்கீம்ஸ் இருக்கு, நீ கூட சேரலாம்.’ னு என்றான்.

‘ ஆமா, ஜீவன் உத்சவ், ஜீவன் அக்ஷய், ஜீவன் தருண்’

‘ போதும் மேடம், லிஸ்ட் பெரிசா இருக்கும் போல இருக்கு , ஜீவன் னா என்ன ?

‘ உயிர், வாழ்க்கை ன்னும் சொல்லாம், எல்ஐசி ங்கிற பெயரே லைப் னு தானே ஆரம்பிக்கிறது?’

‘ அப்புறம் ஏன் மேடம், எல்ஐசிய்யில பணம் போட்டா செத்தா தான் லாபம்னு சொல்றங்க?’

‘ சேச்சே,, லாங் டெர்ம் சேவிங்ஸ் ஸ்கீம்ஸ் நிறைய இருக்கு, ரிடையர்மென்ட்க்கு அப்புறம் சௌகரியமா யார் கையையும் எதிர்பார்க்காம வாழலாம்.இந்தாப்பா, இந்த கார்ட வச்சுக்கோ, சிவராமன்னு ஒரு டிவலப்மெண்ட் ஆபிசர்’ ,அவர. கானடாக்ட் ப்ண்ணினா போதும், ‘

‘ வேண்டாம் மேடம்’

‘ ஏன்?’

‘ மாசாமாசம் பணம் கட்டணுமாமே?

‘ பின்ன’

‘ ஆட்டோவுக்கு , ட்யூ கட்டவும், பிள்ளைகளுக்கு பீஸ் கட்டவுமே முடியல, சும்மா கேட்டேன், ஆனா செத்தா தான் நிறைய தொகை கிடைக்கும் போல, அதாவது அந்த ஸ்கீம்லாம் தான் நமக்கு லாபம்னு கேள்விப்பட்டேன், மத்ததெல்லாம் உங்களுக்கு தான் லாபமாமே’ அப்படியா?’’ ‘அப்புறம், , புதுசா ஒரு ரூல் வருதாமே, சிட்டி, டவுன், கிராமம் னு பிரிச்சி மெயினா ஆஸ்பத்திரி இன்ஷூரன்ஸுக்கு இடத்துக்கு தகுந்தாற் போல ப்ரீமியம் தொகையில வித்தியாசம் வருமாமே, இன்னிக்கு பேப்பர்ல படிச்சேன், ‘ என்றான்..

கனகாவுக்கு ஆச்சரியம்‘ இல்லப்பா, இன்னும் ஆர்டர் வரல’ என்றாள்.

‘ நம்ம விட விவரமா இருப்பான் போலிருக்கே, , பேச்ச நிறுத்திக்க வேண்டியது தான்’ என்று மௌனமாக இருந்தாள்.

அவன் விடுவதாயில்லை.

‘ஆனா பாருங்க, நிறைய பேர் ஒரே நேரத்துல இறந்துட்டா உங்களுக்கு நஷ்டமாமே? அப்படியா?’ என்று சிரித்தான்.

‘ என்ன சொல்வது, இவன் தெரிந்து கொண்டு பேசறானா, ஒண்ணும் புரியலயே, ‘ ‘ அதெப்படிப்பா ஒரே நேரத்துல சாவாங்க? ‘

‘ ஓ, அந்த நம்பிக்கையில தான் கம்பெனி ஓடுது, நாங்க எந்த நம்பிக்கையில பணத்தை போடறது, செத்துடுவோம்கிற நம்பிக்கையிலா?’

‘ நமக்கு இன்னிக்கு ஏழரை தான் போல ‘ என நினைத்துக் கொண்டவள் மீண்டும் புத்தகத்தைப் பிரித்தாள்.

‘ நீராகா ராகமதனி நிர்மதா!’

‘மேடம்?

‘ இப்ப என்னப்பா? ‘ குரலில் சலிப்பு.

‘நீங்க கடவுளப் பார்த்திருக்கீங்ளா? திருப்பதியில? டிரைவர்.

அவள் சிரித்தாள். எங்கும் இருப்பவன், திருப்பதியில் இருப்பதில் என்ன ஆச்சரியம்? ‘ ஒரு நாலஞ்சு தடவை பார்த்திருக்கேன். அதுக்கென்ன?’

கோயில் உள்ள இல்ல மேடம், , வெளியில’ தான் நான் பார்த்தேன்’

‘ ஆமாம், நான் தங்கியிருந்த காட்டேஜ் வழியா விதவிதமான வாகனங்களில் போவதை பார்த்திருக்கேன், ‘ தெப்பக் குளத்தில் இறங்குறதையும் பார்த்திருக்கேன்’

‘ அதில்ல மேடம்’

‘ ஓ, ஆமா கீழ திருப்பதியில தாயார் பத்மாவதி’ அவள சொல்றியா? ‘

‘ இது வேற’

‘ சரி புக்கை மூடி விடுவோம்’ எனத் தோன்றியது. ‘ இன்னிக்கு நல்லா மாட்டிருக்கோம் போலயே’ என்று நினைத்துக் கொண்டே அவன் சொல்வதை கேட்கத் தயாரானாள்.

ஆரம்பித்தான். ‘ மேடம் நான் என் மனைவி குழந்தைளோட போன மாசம் திருப்பதி போயிருந்தேன். பன்னிரண்டு மணி நேரம் கியூவில் நின்னேன். பெருமாளப் பார்த்துட்டு சுத்தி வந்தோம். லட்டு பிரசாதக் க்யூவிற்கு மனைவி குழந்தைகளை அனுப்பி விட்டு உண்டியல் பக்கம் போனேன். ‘

‘ எந்த உண்டியல் பா? பெரிய உண்டியலா?’

‘ அங்க போக எனக்கு எங்க மேடம் தகுதி இருக்கு? அதெல்லாம் பெரிய ஆளுங்க போறது? நான் சின்ன உண்டியல் க்யூவில தான் நின்னேன்.

‘ அப்புறம்? சுவாரஸ்யம் தட்டியது.

‘ காணிக்கையை உண்டியல்ல போட்டு கோயில் வாயிலை விட்டு வெளியே வந்து மனைவி குழ்ந்தைகளுக்காக வெய்ட் செய்து கொண்டிருந்தேன். அப்போ ஒரு பெரியவர் என் கிட்ட வந்து ‘ சார், ஒரு ஐம்பது ரூபாய் குடுங்க சார், ஊருக்குத் திரும்ப பஸ்ஸுக்கு வேணும்,ப்ளீஸ் என்றார்.

‘ உம்’

‘ நீண்ட தாடியுடன் நைந்த சட்டையும், கலைந்த தலையுமாய் இருந்தவரைப் பார்த்து எனக்கு சந்தேகமாயிட்டது. திருப்பதியில திருட்டு வேற நிறைய நடக்குதில்ல?’

‘ ஆமாம், கொடுத்தீங்களா இல்லையா?

‘. ஊஉம், கொடு்க்கல, ஒண்ணும் கிடையாது போங்க’ ன்னேன்.அதுக்கு அவர் ‘ ஐயா கொடுத்தீங்கன்னா உங்களுக்கு தான் நல்லது ‘ என்றார்.‘ உங்களயெல்லாம் பத்தி எனக்கு நல்லா தெரியும்,கிளம்புங்க ‘ னு சொல்லும் போதே மனைவி ‘ என்னங்க என்னாச்சு? என முணகிக் கொண்டே செல்பவரைப் பார்த்து கேட்டாள்.

கனகாவுக்கு இன்னும் ஆவல் மிகுந்தது. ‘

இருவருக்கும் நடந்த உரையாடலை விவரித்தான்.

‘ அதோ போறாரே அவர் அம்பது ரூபாய் கேட்டார், கொடுக்க முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன். ‘

‘என்னங்க ஒரு அம்பது ரூபாய் தானே, கொடுக்க வேண்டியது தானே, திருப்பதியில யாராவது இப்படிக் கேட்டா கொடுக்கணும் ‘ .

உளறாதே, இது என்ன புது கதையா இருக்கே, கேட்டா கொடுக்கணுமாமில்ல? ‘

‘ சரி அத விடுங்க , நீங்க உண்டயல்ல எவளோ காணிக்கை போட்டீங்க? ‘

‘ ஆயிரம் ரூபாய் மாட்டேன். திரும்பிப் போக காசு வேணுமில்ல? ‘

‘தெரியும் இப்படித் தான் ஏதாவது செஞ்சிருப்பீங்க, நான் ஆயிரத்தைந்தூறு இல்ல நேர்ந்து வச்சுருந்தேன், அந்தப் பெரியவருக்காவது கேட்டத கொடுத்திருக்கலாமில்ல?

‘அவன் வங்காம விட மாட்டான் ‘

இரு கத்தாதே , அதுக்கும் இருக்கும் என்ன சம்பந்தம்? திருப்பதி டூ சென்னைக்கு பஸ் செலவுக்கு தானே வச்சுக்கிட்டேன்’,

‘ நீங்க என்ன வேணா சொல்லுங்க, ஊர் சேர்ந்தாப் போல தான்’

‘அப்புறம் என்ன ஆச்சு?’ கனகா.

‘அவ சொன்ன மாதிரி தான் நடந்துஞ்சு.. அங்கு சாப்பிட்டு விட்டு பஸ்ஸில் ஏறிய அரை மணியில் என் மனைவிக்கு தலை சுத்தலும், வாந்தியும், காய்ச்சலுமாகி கீழ்த் திருப்பதியில் இரண்டு நாள் அட்மிட் பண்ண வேண்டியதா போச்சு. டிரிப்ஸ், மருந்து , அட்மிஷன் என இருந்த பணமெல்லாம் கரஞ்சு போக நண்பனுக்கு போன் செய்து ஜீபே பண்ணச் சொல்லி ஒரு மாதிரி ஊர் வந்து சேர்ந்தோம்’ என முடித்தான்.

‘ சரி, அவங்க ஹோட்டல்ல சாப்பிட்டது ஒத்துக்காம போயிருக்கும், அதோட ஏன் காணிக்கைய சம்பந்தப் படுத்தறீங்க?’ என்றவளை ‘ மேடம், விட்டுப் போன காணிக்கைய கலெக்ட் பண்ண வந்ததே பெருமாள் ‘ ங்கறா என் மனைவி. நடந்த்தெல்லாம் பாத்தா எனக்கும் அவ சொல்றது சரின்னு படுது’ என்றான். இப்ப என்ன சொல்றீங்க, நான் பார்த்தது கடவுள் தானே??’ என்றான்.

அவள் சற்றும் யோசிக்கவில்லை. ‘ஆமாம்பா, நானும் அப்படித்தான் நினைக்கிறேன்,! என்று சொல்லும் போது அலுவலகம் வந்து விட்டது. ஆட்டோவிற்கான கட்டணத்தை கொடுத்து டிரைவரை அனுப்பி வைத்தாள். ‘ நமக்கெல்லாம் கடவுள் தானே நம்பிக்கை, இல்லையில்லை நம்பிக்கை தானே கடவுள்’ என்று எண்ணிக் கொண்டே லிப்ட் ஐ நோக்கி நடந்தாள்.