நீங்கள் பார்க்கும் மரம் செடி கொடி , காய் கறிகள், பழங்கள், விதைகள் என்று எதைப்பார்த்தாலும் அதில் ஒரு ஒழுங்கு இருப்பதை பார்க்க முடியும். நீ இப்படித்தான் வளர வேண்டும், பூக்க வேண்டும், காய்க்க வேண்டும், பழுக்க வேண்டும் என்று யார் ஏற்பாடு செய்தது? அது மட்டும் இல்லை. நாம் உண்ணும் காய் , பழம், கீரை, அரிசி, நவ தான்யம்,பருப்பு, இப்படி எல்லாமே எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்கிறது. அவை எல்லாமே இந்த மண்ணில் விளைகிறது. ஒவ்வொன்றும் ஒரு சுவை. ஒரு வாசனை. எல்லாமே அந்த மண்ணுக்குள் இருக்கிறது. அதில் இருந்து அதை பிரித்து எடுத்து கொடுக்கவும் அந்த புரோக்ராமில் இருக்கிறது. இதை எல்லாம் யார் செய்தது? நம்மால் இதை செய்ய முடியுமா?
தாவரம் போல நம் மனித உடலும் படைக்கப்பட்டது. அதுவும் அது போல ஒரு புரோக்ராமில் கட்டுப்பட்டது. எத்தனை கோடி கணணி இருந்தாலும், நம்மால் ஒரு மனிதனை உருவாக்க முடியாது.
நாம் இதிலிருந்து பெறக்கூடிய முடிவு ஒன்றுதான். புரோக்ராம் செய்தது, அதை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்றும் எந்த மாறுதலும் இல்லாமல் செயல் பட வைப்பது ...இதற்கெல்லாம் ஒரு மூலகர்த்தா உண்டு. யார் என்பது உங்களுக்கு தெரியும்.
நம் முன்னால் விரிந்து பரவி கிடக்கும் இந்த பிரபஞ்சம், கடல், மலை, ஆறு, மின்னல், மழை,எரிமலை, நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், மற்ற கோள்கள், இப்படி எல்லாமே ஒரு கட்டுப்பாட்டுக்குள் ஒரு ஒழுகத்துக்குள் இருப்பது எப்படி? ..ஏன் அவை மாறுவதில்லை? பூமி சுற்றுவது, சுற்றும் வேகம், சுற்றிக்கொண்டே சூரியனை வலம் வருவது எல்லாமே மிகவும் சரியான விசையில் எப்படி நடக்கிறது? ஏன் அவை மாறுவது இல்லை?
இயற்கையில் இருக்கும் ஒழுக்கம், செயல்பாடு, கட்டுத்திட்டம், கால கோட்பாடு, என்று எல்லாமே நமக்கு ஒன்றைதான் உணர்த்தும். இதற்கெல்லாம் ஒரு ஆதி கர்த்தா உண்டு. அது உண்மை. நாம் ஒப்புக்கொண்டாலும், ஒப்புகொள்ளவிட்டாலும்.
இதை மறுத்தால், இதற்கெல்லாம் யார், எப்படி, எது காரணம் என்பதை விளக்கவேண்டும்.
சுஜாதா கடவுள் இருக்கிறாரா என்ற புத்தகத்தில் இதைப்பற்றி மிகவும் விரிவாக விவாதிக்கிறார், பல செய்திகளை தெரிவிக்கிறார். கடவுள் உண்டா இல்லையா என்கிற வாதத்தை தள்ளி வைத்துவிட்டு, கடவுள் கோட்பாடு விஞ்ஞானத்துக்கு உகந்ததா அல்லது எதிரானதா என்று அறிந்து கொள்ள சுஜாதாவின் புத்தகத்தை படிக்கும்படி வேண்டுகின்றேன்.
கடவுள் உண்டா இல்லையா என்று விவாதிப்பதை விடுத்து, கடவுள் நமக்கு வேண்டுமா வேண்டாமா என்று யோசிக்கலாம். கடவுள் இல்லை, வேண்டாம் என்று யோசித்தால், நாம் எந்த ஒழுக்கத்துக்கும் கட்டுப்பட மாட்டோம். அதன் விளைவு மிகவும் அபாயமானது. கடவுள் நம்பிக்கை தான் ஒரு மனிதனுக்கு ஒழுக்கத்தை போதிக்கிறது. காரணம் நாம் செய்யும் செயல்களின் பின்னால் பாபம், புண்ணியம், பாபத்துக்கு தண்டனை, புண்ணியம் செய்தால் நல்ல பலன், மறு பிறவி, சுவர்க்கம், நரகம் இவை எல்லாமே கடவுள் நம்பிக்கையின் அடிநாதம்.
நான் அறிந்த வரை, கடவுள் இல்லை என்று சொன்னவர்கள், பாவம், புண்ணியம், இல்லை என்று சொன்னவர்கள், மறு பிறவி இல்லை என்று சொன்னவர்கள், பகுத்தறிவு என்று பறை சாற்றியவர்கள் எல்லாம், மனித ஒழுக்கம் கெடாமல் இருக்க வழி சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இன்று கொலை, கொள்ளை , கற்பழிப்பு என்று தமிழ் நாட்டில் நடப்பது எல்லாமே கடவுள் மீது பயம் இல்லாத காரணம், பகுத்தறிவின் பரிணாமம் என்று சொல்லலாமா? கடவுள் இல்லை என்றால் அவர்களுக்கு எப்படி பயம் வரும்? அதற்குதான் போலிஸ், சட்டம் , நீதி,தண்டனை எல்லாம் இருக்கிறதே என்று சொல்லலாம். ஆனால் இதனால் எல்லாம் ஒழுக்கம் இயற்கையாக கடைபிடிக்கபடுகிறதா?
கொலை மட்டும் அல்ல.பெரும் ஊழல், .லஞ்சம் வாங்குவது, பொய் சாட்சி சொல்வது,பிறழ்சாட்சி , பொய் தடயங்கள் , கொள்ளை அடிப்பது என்று இன்று தலை விரித்து ஆடும் ஒழுக்கக் கேடுகளை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லையே. கடவுள் நம்பிக்கையின் பேரில் வரும் ஒழுக்கம் அப்படி ஒரு கொலை செய்வதை தடுக்கும். மற்ற ஒழுக்க கேடுகளையும் தடுக்கும்.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குற்றத்துக்கு கடுமையான தண்டனை, ஊழல் இல்லாத நீதி மன்றங்கள், விரைவான விசாரணை , மற்றும் உடனடி தண்டனை இவற்றால் குற்றங்கள் நடப்பது மிகவும் குறைவு. கடவுள் பகுத்தறிவு இதெல்லாம் அங்கு தேவை இல்லை.
நீதி மன்றங்கள் விரிவாகவும் நேர்மையாகவும் வழக்குகளை முடித்தால் குற்றங்கள் பெருகாது... ஒருவனே பல குற்றங்கள் பல நாட்களாக செய்திருப்பதாகவும் அவன் மீதி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் பத்திரிகையில் படிக்கிறோம்.. இதெல்லாம் ஒழுக்க கேட்டின் பிரதிபலிப்பு.
பள்ளி கல்லூரி படிப்பு ஒழுக்கத்தை போதிப்பதாக இருக்கவேண்டும். அப்படி போதிப்பதற்கு கடவுள் நம்பிக்கை அடிப்படையாக இருக்க வேண்டும். இப்படி பல காலம் இருந்தது. இன்று மாறி விட்டது. ஆனால் நாம் நினைத்தால் மீண்டும் அதை கொண்டு வரலாம். காலம் பதில் சொல்லும்.
Leave a comment
Upload