இந்த ஆசியா கப் 2025 பதிப்புக்கு பாகிஸ்தான் தான் சேர்மேன் பொறுப்பு வகித்தது.
இந்த போட்டிகளை இண்டெர்நேஷனல் கிரிக்கெட் கௌன்சில் (International Cricket Council - ICC) ஆசியுடன் ஆசியன் கிரிக்கெட்கௌன்சில் (Asian Cricket Council - ACC) நடத்துகிறது.
விதிப்படி, இரண்டாண்டுக்கு ஒரு முறை இந்த போட்டி ஆசிய நாடுகளுக்கிடையே தகுதியின் அடிப்படையில் நடைபெறுகிறது. அதன் படி ஒவ்வொரு முறையும் ஒரு நாடு தலைமை ஏற்று அவர் நாட்டில் நடத்துகிறது
அதன் படியே இந்த பதிப்பு பாகிஸ்தானில் தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுமுறையில் விரிசல் காரணமாக கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவே இரு நாடுகளுக்கிடையேயான கிரிக்கெட் நின்றே போனது. பன்னாட்டு தரப்பு பங்குகொள்ளும் போட்டிகள் மட்டும் போது மைதானம் என்ற வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில், உள்ள துபாயில் நடைபெற்று வருகிறது.
இறுதி வரை இந்த பதிப்பை தனது நாட்டிலேயே வைத்துக்கொள்ள பாகிஸ்தான் முனைந்தது. ஆனால், ICCயில் நமது இந்தியர் இருப்பதாலும் SENAI நாடுகள் என்ற தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து, நியூசீலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா நாடுகளின் கூட்டு தான் ICCயில் பலமாயிருப்பதாலும், அதுவே ACCயிலும் இழையோடுவதாலும் துபாயில் தான் இந்த பதிப்பு நடக்கும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
ஏப்ரலில் பஹல்காம் தீவிரவாதி தாக்குதலும் அதன் பின் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தான் மீது நடத்தியதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இறுதி போட்டிக்கு முன் இந்தியாவும் பாக்கிஸ்தானும் இரு முறை மோதின. இரண்டிலும் இந்தியாவே வென்றது. ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் விமானத்தை வீழ்த்தியது போலவே பாக்கிஸ்தானின் சில ஆட்டக்காரர்கள் இந்திய பார்வையாளர்கள் பக்கத்தில் பாவ்லா காண்பித்த வண்ணமிருந்தனர்.
முதல் போட்டியில் மேட்ச் ரெஃபெரீ ஆன்டி பைகிராஃப்ட் பூவா தலையாவின் போதும் சரி மேட்ச் முடிந்தும் சரி கைகுலுக்கல் வேண்டாம் என்ற நிலையை ஆதரித்திருக்கிறார். அது ஒன்றும் கட்டாயம் என்பதல்ல என்ற காரணம் காட்டப்பட்டது.
இந்த முதல் வெற்றியை பஹல்காமில் மாண்ட இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் சூரிய குமார் யாதவ் பறைசாற்றலும் செய்திருக்கிறார். நாங்கள் ஆட்டத்தை ஆட்டத்தின் பிரகாரம் ஆடினோம், அவர்கள் தான் சைகைகளும் கொண்டு ஆடினார்கள் என்றார் சூரியா. மோஷின் நக்வியும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி கேலி செய்து சில பதிவுகளை சோஷியல் மீடியாவில் போட்டிருந்தார்.
ஆடு களம் விளையாட்டு மைதானமா? போர்களமா? என்றாகிப் போனது.
இப்படியாக ஆசிய கப்பின் முதல் தாக்குதல் ஆபரேஷன் சிந்தூருடன் இணைக்கப்பட்டு விட்டது.
மொதல்ல அவர்கள நிறுத்தச் சொல் என்ற தொனியில் கருத்துகள் பறந்தன.
வெகுண்ட பாகிஸ்தான் ரெஃபெரீயை நீக்கு, இந்திய அணி கேப்டனை நீக்கு, இல்லையெனில் பதிப்பிலிருந்தே விலகிவிடுவோம் என்று சூளுரைத்தது.
அவர்களின் அந்த இரண்டு கோரிக்கைகளும் ஒட்டு மொத்தமாகவே நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் செய்வதறியாது, அன்று, ஓமானுடனான மேட்சை பாகிஸ்தான் ஆடுவார்களா இல்லையா என்ற சஸ்பென்ஸ் நீடித்தது. ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு ஆடினர், ஜெயிக்கவும் செய்தனர்.
இரண்டாவது சுற்றிலும் இந்தியாதான் வெற்றி கண்டது.
இறுதி மேட்ச்சில், இந்த பதிப்பில் அபாரமாக ஆடிய அபிஷேக் ஷர்மாவைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் வெற்றி நமதே என்று முயன்று வெற்றியும் கண்டனர். கூடவே கில்லையும் தூக்கி விட்டனர். எகத்தாளம் உச்சஸ்தாயில் இருந்தன. திலக் வர்மா நின்று ஆடி வெற்றி பெற்றுத் தர மூன்றாம் முறையாகவும் இந்தியா பாக்கிஸ்தானை அதுவும், ஒரே பதிப்பில் தோல்வியைத் தந்தது.
கோப்பையி(ல்)லா வெற்றி?
எப்போதும் போலவே கைகுலுக்கல் இல்லை. கப் வழங்கும் காட்சியும் வந்தது. பாகிஸ்தான் வீரர்கள் தனது அறையை விட்டு ஒரு மணி நேரம் தாமதமாகவே வந்தனர். கொடுக்கப்பட்ட காசோலையை வாங்கி அங்கே ஒரு மூலையை பார்த்து அதன் கேப்டன் வீசி எறிந்துவிட்டுப் போனார்.
கப் கொடுக்க பாகிஸ்தான் அமைச்சரும் ACCயின் சேர்மனும் ஆன மோஷின் நக்வியும் ரெடியாக இருக்க, அவர் கையிலிருந்து அதை வாங்க இந்தியா மறுத்து விட்டது. நேரம் செல்ல செல்ல, நிராகரிக்கப்பட்ட அண்டை நாட்டு அமைச்சர் கப்பையும் வெற்றி அணியினருக்கான மெடல்களையும் எடுத்துச் சென்று விட்டார்.
சின்ன கவுண்டர் படத்தில் புல்லில் படுத்து செந்தில் கேட்கும் கேள்விகள் போல இந்திய வீரர்கள் படுத்திருந்தது உச்சபட்ச எரிச்சலை நக்விக்கு அளித்திருக்கும்.
(இரு தினங்களுக்குப்பிறகு நடந்த மீட்டிங்கில் இதைச் சுட்டிக்காட்ட, மோஷின் நக்வியும் தவறுதான் என்று ஒப்பு கொண்டு விட்டார். தன்னை அவமானப்படுத்தியற்காகத்தான் அப்படி செய்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
கப் வேண்டுமென்றால் சூரியாவை துபாய்க்கு என்னோட ஆஃபீசில் சென்று வாங்கிக் கொள்ளச்சொல்லவும் என்றும் கூறியிருக்கிறார்.
சூரிய குமார் யாதவ் ரோஹித் ஷர்மா ஸ்டைலில் இரு கைகளில் கப்பை தூக்கிக்கொண்டு வருவது போல் மெல்ல மெல்ல நடந்து தனது அணியினரிடம் தர அதை அனைவரும் சேர்ந்து தூக்குவது போல் பாசாங்கு செய்ய…. கொண்டாட்டம் கொடிகட்டியது. களை கட்டியது.
எல்லாமே வெற்றி தானே. இனி என்ன தடங்கல். தனது மேச் ஃபீஸ் அனைத்தையும் இந்திய ராணுவத்திற்கும் பஹல்காமில் கொல்லப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினருக்கும் என்று சூரியா பளிச்சென கூறிவிட்டார்.
இதை வைத்து பற்றிக்கொண்ட மீம்ஸில், ஷர்மா பத்தி படிச்சிட்டு போனா வர்மா பத்தி கொஸ்டீன் வந்தா என்று நய்யாண்டி செய்திருந்தனர் நெட்டிசன்ஸ்.
கிரிக்கெட்டும் போர்க்களமான(தோ)தே!! ஆசியா கப்பும் ஆபரேஷன் சிந்தூரும்
இந்த வெற்றியை நமது பிரதமர்,” ஆபரேஷன் சிந்தூர் விளையாட்டு மைதானத்திலும் வெற்றி கண்டுள்ளது”.
இதற்கு எதிர்கட்சியினர் எப்போதும் போல கடுமையாக விமரிசனம் வைத்தனர்.
கிட்டத்தட்ட நிறவெறிக்கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்காகை 1948 முதல் 1994 வரை கிரிக்கெட்டிலிருந்து விலக்கிவைத்தது போலவே உள்ளது இது.
போகப் போக விளங்கும்.
தற்சமயம் மகளிருக்கான 50 ஓவர்கள் உலகக் கோப்பை இந்தியாவிலும் ஸ்ரீலங்காவிலும் நடக்க ஆரம்பித்துள்ளது.
இங்கும் பாகிஸ்தான் அணி ஆடுகிறது. கை குலுக்கலுக்கு நோ தான் இருக்குமா? என்ற கேள்வி பறக்கின்றன.
Leave a comment
Upload