தொடர்கள்
அனுபவம்
The loneliness of Sonia and sunny - இந்துமதி கணேஷ்

The loneliness of Sonia and sunny

Author : Kiran desai

20251005233223191.jpg

பத்து வருடங்களுக்கு மேலாக ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்றால் அந்த நாவலில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அனைவருக்கும் எழும் அல்லவா ? அத்தகைய ஒரு ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது அண்மையில் புக்கர் குறும்பட்டியலில் இடம்பெற்ற கிரண் தேசாய் எழுதி இருக்கும் "தி லோன்லினஸ் ஆப் சோனியா அண்ட் சன்னி" என்ற புதினம்.

இந்திய எழுத்தாளரின் புத்தகம்,

ம் இது ஒரு காதல் கதை என்றதும் எனக்குள் ஒரு கூடுதல் ஆர்வம் ஏற்பட்டது.

நாவல் தொடங்கும் போதே குஷி திரைப்படத்தில் வருவது போல சோனியாவும் சன்னியும் தான் இணைய போகிறார்கள் என்று சொல்லிவிடுகிறார் தேசாய்.

காதல் கதைக்கு "லவ் ஆப் சோனியா அண்ட் சன்னி" என்று தலைப்பு கொடுக்காமல் எதற்காக லோன்லினஸ்(தனிமை) என்று பெயர் கொடுத்தார் என்பது தான் நாவலின் மையச் சரடே.

சோனியா அமெரிக்காவில் இருக்கும் வெர்மென்ட்(vermount)ல் ஒரு பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படிக்கிறாள்.

அவளது பெற்றோர் டெல்லியில் இருக்கிறார்கள். விடுமுறை காலத்தில் கடும் குளிர் நாட்களில் நண்பர்கள் யாருமின்றி ஊருக்கும் திரும்பி வரமுடியாத தனிமையில் உழல்கிறாள் சோனியா.

இதுபற்றி அலகாபாத்தில் இருக்கும் அவளது தாத்தா பாட்டிக்கு தெரிய வரும் போது அவர்கள் தங்களுடைய நண்பர்களான கர்னல் குடும்பத்துடன் இதை பகிர்கிறார்கள்.

கர்னல் குடும்பம் தன்னுடைய பேரனும் அமெரிக்காவில் இருப்பதால் இருவருக்கும் மணம் பேசலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

இப்படி தான் சோனியாவுக்கும் சன்னிக்கும் மணம் பேசப்படுகிறது, ஆனால் இருவரும் இந்த ஏற்பாட்டிற்கு உடன்படவில்லை.

சன்னி நியூயார்க் நகரில் உல்லா என்ற அமெரிக்க பெண்ணுடன் ஒன்றாக வாழ்கிறான்.

இருவரும் ஒன்றாக வாழ்ந்தாலும் சன்னியின் சில எண்ணங்கள் உல்லாவிற்கு உவப்பாக இல்லை. அவன் மனதில் அமெரிக்கர்கள் மற்ற நாட்டவர்களை முக்கியமாக இந்தியர்களை தாழ்வாக நினைப்பதாக ஒரு ஐயம் எழுகிறது,

அமெரிக்கர்கள் நிறவெறி கொண்டவர்கள் என்று தொடர்ந்து சாடுகிறான். உல்லாவின் பெற்றோரை காண செல்லுமிடத்தில் உல்லா அவனுக்காக தன் குடும்பமே நடிக்க வேண்டி வருவதை உணர்ந்து கொள்கிறாள் இது அவர்களுக்குள் ஒரு பிரிவை ஏற்படுத்துகிறது.

சன்னியின் நெருங்கிய நண்பன் சத்யாவிற்காக, சன்னி பெண் பார்க்க இந்தியாவிற்கு வருகிறான். வருமிடத்தில் தான் ரயிலில் சோனியாவை சந்திக்கிறான். பார்த்தவுடன் அவனுக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.

வெர்மென்ட்ல் படித்துக் கொண்டிருந்த சோனியா, அங்கு தன்னை வாட்டும் தனிமையை போக்கிக் கொள்ள அங்கு வந்து சேரும் இலன் என்கிற ஒரு ஓவியனுடன் பழக்கம் கொள்கிறாள்.

தன்னைவிட இருபது வயது பெரியவனாக அவன் இருந்த போதும் அவனுடன் உறவில் இருக்கிறாள். சில நாட்கள் கழித்து தான் அவனின் துர்குணங்களும் அவனுக்கு பின் எதோ ஒரு மர்மம் இருப்பதும் அவளுக்கு புரிகிறது என்றாலும் அவனுடனேயே இருக்கிறாள்.

ஒரு கட்டத்தில் இலனின் மனைவி வந்து சோனியாவை அவமானப்படுத்தி வெளியேற்றுகிறாள், அப்போது தான் அவளுக்கு இந்தியாவுக்கு வந்துவிடலாம் என்ற எண்ணமே வருகிறது.

இதற்குள் இந்தியாவில் அவளின் தாயும் தந்தையும் மனக்கசப்பால் பிரிந்து விடுகிறார்கள்.

அலகாபாத்தில் அறிமுகமாகும் சோனியாவும் சன்னியும் தங்களுக்குள் ஒரு ஈர்ப்பு இருப்பதை அறிந்து கொண்டு ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் கோவாவில் சந்திக்கிறார்கள்.

சரியாக சொல்ல போனால் அங்கிருந்து தான் ஏதோ ஒரு தீய சக்தி தன்னை பின்தொடர்வதாய் சோனியா உணர்வாள்.

பயங்கரமான ஒரு வேட்டை நாய் அவர்களை துரத்தி வந்து தானே மறைந்து அவர்களுக்குள் ஒரு கிலியை ஏற்படுத்தும்.

அதற்கு பிறகும் இத்தாலியில் அதுவே தொடர, அந்த புள்ளியில் இருவரும் பிரிந்து விடுவார்கள்.

.சோனியாவின் தாய் வழி தாத்தாவான சீக்பிரிட் பார்பியர் ஒரு ஜெர்மானியர், பாட்டியை மணமுடித்து இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் இந்தியாவிலேயே தங்கிவிடுகிறார்.

அவருக்கு ஓவியங்கள் மேல் தீராத காதலுண்டு, பனிமலை பயணத்தில் காணாமல் போயிருப்பார், அவர் வாழ்ந்த வீட்டிலேயே அரூபமாய் வந்து போவதாய் உணர்வாள் அவர் மகள். அவர் உருவாக்கி வழிபட்ட பதல் பாபா என்கிற உருவத்தை ஒரு டாலரில் பொறித்து அதை வழிபட்டு வந்திருப்பார்.

அது வெளிநாடு போகும் மகளுக்கு பரிசாய் சோனியாவின் அம்மாவால் அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும், அந்த பதல் பாபாவை அவள் இலனிடம் தொலைத்திருப்பாள். அந்த டாலர் தொலைந்ததிலிருந்து தான் தன் வாழ்வை சூனியன்கள் துரத்துவதாய் சோனியா நம்புவாள்.

சோனியாவின் அத்தை மினாஃபோயின் கதாபாத்திரம் அழகான ஒன்று.

அப்பா அம்மாவின் விருப்பத்திற்காக காதலித்தவனை கைவிட்டு கடைசி வரை தாய்வீட்டிலேயே தங்க நேரும் சபிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை அவளுக்கு. அவளுடைய காதலன் திரும்பி வந்து அழைத்தும், போக முடியாத சூழல்.

இவளை பற்றி தான் சோனியா முதலில் எழுதுவாள். தன் வாழ்க்கையில் தானே நினைக்காத பல விஷயங்கள் அடுத்தடுத்து நடந்துகொண்டிருக்க தான் எதை எழுதுவது எதற்காக எழுதுவது என்பதையே மறந்திருப்பாள் சோனியா.

சன்னியின் தாய் பபிதா பாட்டியா ஒரு அற்புதமான கதாபாத்திரம்.

கிட்டத்தட்ட இந்த நூலில் உயிர்ப்புடன் துருதுருவென்று இருக்கும் கதாபாத்திரம் அவர் தான்.

அவளும் அவளின் வேலைக்கார பெண்களும் சேர்ந்து கலகலப்பாக இருந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவளுக்கு ஏனோ சோனியாவின் மேல் ஒருகாரணமற்ற பொறாமை ஏற்பட்டுவிடும்.

இதனால் சோனியாவுடன் சன்னி கோவாவிற்கு போனதை அறிந்தும் பிறகு இத்தாலிக்கு போவதும் அவளுக்கு ஒரு வன்மத்தை ஏற்படுத்தும்.

தன்னுடைய சொத்தை விற்றுவிட்டு கோவாவிற்கு கிளம்பும் திட்டத்தால் பெருத்த ஏமாற்றத்தையும் மனஉளைச்சலையும் அடைவாள் என்ற போதும் அவளது கேலி, கிண்டல்களையும் நகைச்சுவை உணர்வையும், தனியாய் அவள் அடையும் துயரங்களையும் வெகு சிறப்பாக சொல்லி இருப்பார் தேசாய்.

அமெரிக்க குடியுரிமை கிடைத்தும் சோனியாவை பிரிந்து தனிமையில் அமெரிக்காவில் இருக்க முடியாமல் மெக்ஸிகோவிற்கு செல்லும் சன்னியின் பயணக்குறிப்புகள் அருமையாக இருக்கும்.

கிரண் தேசாயின் எழுத்துக்கள் ஒரு தேசத்தின் ஒரு தெருவிற்குள் நம்மை அழைத்து சென்றால் அந்த தெருவின் ஒவ்வொரு கடைகளிலும் நாம் நின்றுவிட்டு வந்ததாய் நம்மை உணரச் செய்யும் .

கெபாப் செய்யும் முறைமைகளை குறித்து சோனியா ஒரு கட்டுரை எழுதுவாள், அதில் சோனியா இதையெல்லாம் எழுதினாள் என்று அவ்வளவு தகவல்களை தேசாய் நமக்கு தருவார்.

இத்தனை தகவல்கள் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேல் இருந்த புதினத்தை மிக கடினமாய் உழைத்து தான் 670 பக்கங்களாக குறைத்தாக கூறுகிறார் தேசாய். போகிற போக்கில் பல முக்கியமான நூல்களை குறித்த குறிப்புகளையும் நமக்கு தருகிறார்.

அன்னா கரீனினாவில் இருந்து பெறப்பட்டவள் தான் சோனியா என்றும் பெட்ரோ பெரமோவில் இருந்து உணர்ந்து எடுக்கப்பட்டவன் தான் சன்னி என்றும் தன்னுடைய நேர்காணலில் சொல்லி இருக்கிறார்.

20251005233303788.jpg

சோனியாவின் தாயாக வரும் செஹரின் கதாபாத்திரம் மிகச் சுதந்திரமான ஒன்று.

இவ்வளவு சுதந்திரமாக இந்திய கட்டமைப்பில் வளர்க்கப்பட்ட ஒரு தாயால் இருக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

கணவனுக்கு கேன்சர் என்று அறிந்தும், மகள் தனியாக திண்டாடுகிறாள் என்று தெரிந்தும் துணைக்கு வந்து உதவாமல் இருப்பது சற்றே நெருடலாக இருக்கிறது.

இந்த கதாபாத்திரத்திற்காக தேசாய் இன்னுமே கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நாவலின் காலம் 1995 முதல் 2001 வரை என்பதால் நிறைய விஷயங்கள் நோஸ்டால்ஜிக் உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

பாபர் மசூதி கலவரங்கள், இரட்டை கோபுர வெடிப்பு சம்பவம் என்று அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார் தேசாய். சன்னியின் தோழன் சத்யா மற்றும் அவன் துணைவியின் கதாபாத்திரங்கள் கச்சிதம்.

நவீன காதலை பழைய பாணியில் எழுதி பார்க்க விழைந்திருக்கிறார் தேசாய், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்று தான் சொல்வேன்.

பலரும் அவரது இந்த நூலை தஸ்தாவெஸ்கியின் எழுத்துடன் இணைத்து பேசி இருக்கிறார்கள், இவரின் உழைப்புக்கு புக்கர் இவர் கைசேருமா ... அடுத்த வாரம் தெரிந்து விடும்.