
பொழுது விடிந்ததும், வீட்டில் வழக்கம் போல் களேபரம்தான். குட்டி பசங்களை ரெடி பண்ணி, பள்ளிக்கு அனுப்பும் வரை,
அம்மாவிற்கு, டென்ஷன்…..டென்ஷன்…..
"ஸ்ருதி ரெடியாயிட்டியா?"
கிச்சனில் இருந்து, அம்மாவின் குரல்.
"ரெடியாயிட்டேன் மா" ….இடது காலை ஷூவுக்குள் நுழைக்க, போராடிக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.
"ஏன் மா இப்படி லேட் பண்ற.
ஸ்கூல் வேன் கேட்ல நிக்குதாம்.
செக்யூரிட்டி ஃபோன் பண்றாருமா?"
"வேனை போகச் சொல்லு மா. நான் நடந்தே போறேன்". நறுக்கென பதில் தந்தாள் ஸ்ருதி
"என்ன விளையாடறையா". உரக்க கத்தினாள் அம்மா.
"நிஜமாத்தான் சொல்றேன் மா. இன்னிக்கு மட்டும் நான் நடந்தே போறம்மா".கெஞ்சலாய்க் கேட்டாள் ஸ்ருதி.
"ரொம்ப தூரம் . உன்னால நடந்து போக முடியாது" .
"இல்லம்மா. இன்னிக்கு நடந்து தான் போவேன். எங்க முடியலையோ, அங்கிருந்து ஆட்டோவுல போகலாம்மா".கெஞ்சினாள் ஸ்ருதி.
ஏதோ ஒரு பிளேனோடுதான் ஸ்ருதி சொல்றாங்கிறத அம்மா புரிஞ்சுக் கிட்டாள்.
"சரி ஸ்ருதி. சீக்கிரம் கிளம்பு" என்றாள் அம்மா. துள்ளிக் குதித்தாள் ஸ்ருதி.
லஞ்ச் பாக்ஸ்,கிளாஸ் புக்ஸ், சுமப்பதில், அம்மாவுக்கு எத்தனை சுகம்
சிறிது தூரம் நடந்ததும்,
"போதும்டா ஸ்ருதி…. ஆட்டோ வச்சுக்கலாம். என்னால நடக்க முடியல ”
கெஞ்சத் தொடங்கினாள் அம்மா.
" இன்னும் கொஞ்ச தூரம் தான் மா”. அம்மாவை கெஞ்சிக் கேட்டாள் ஸ்ருதி.
"கொஞ்சம் தூரம் மட்டும் தான், சரியா" அம்மா கண்டிப்புக் காட்டினாள்.
"சரி…சரி".. சம்மதம் சொன்னாள் ஸ்ருதி.
சாலையில், அந்த மரத்தடி வந்ததும், லன்ச் பாக்ஸை, தரச் சொன்னாள் ஸ்ருதி.
" இந்தச் சுமையைத் தூக்கிட்டு உன்னால் நடக்க முடியாது. சும்மா வா.தொந்தரவு பண்ணாதே". அம்மா அவளை அதட்டினாள்.
அந்த லன்ச் பாக்ஸை, திடீரென பிடுங்கிக்கொண்டு, அந்த மரத்தடி நோக்கி ஓடினாள் ஸ்ருதி.
அந்த முதியவர் பசியால் தினம் வாடுவதை, ஸ்கூல் வேனில் போகும் போதும், வரும் போதும், பார்க்கும் ஸ்ருதிக்கு, வருத்தமாக இருக்கும். ’தன்னால் எந்த உதவியும் செய்ய முடியலையே?’ங்கிற ஏக்கம் அவள்மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.
வேனை நிறுத்தி,அந்த வயதானவரின் பசிக்கு, ஒரு நாளாவது உணவு தர வேண்டுமென்பது அவளது ஆசை. அந்த வேன் அங்கு நிற்காது. நிறுத்தவும் மாட்டார்கள்.
லன்ச் பாக்ஸிலிருக்கும் உணவைத் தர,
இன்று அந்த பெரியவரை நெருங்கி,
தாத்தா…..தாத்தா….என்றழைத்தாள் ஸ்ருதி.
பார்வையற்ற அந்த முதியவர், ஸ்ருதியின் குரல் கேட்டு,
"அம்மா தாயே! சாப்பிட ஏதாவது தருவியா”? தழு தழுத்த குரலில் கேட்ட போது,
ஸ்ருதி தேம்பி, தேம்பி அழுதாள். தன் கையிலிருந்த உணவை அவரிடம் தந்து, அதை அவர் உண்டபின் ….
"தண்ணீர் குடிக்கிறீங்களா தாத்தா" தண்ணீர் பாட்டிலை கொடுக்கப் போனாள்.
"அம்மா என் தாயே! அந்த தண்ணியை உன் கையால் ஊத்துமா.தாகம் தீர குடிக்கிறேன்” அவர் வாயைத் திறக்க தண்ணீரைஅவரது வாயில் ஊற்றினாள்.
“அந்த மகமாயி, இந்த தங்க மனச உனக்கு என்னிக்கும் தருவாம்மா.நீ நல்லா இருக்கணும் தாயே."
அந்த பெரியவர், தன் பொக்கை வாய் கொண்டு வாழ்த்தும் வார்த்தைகள், அம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீரானது,
"படிக்க வைப்பது சுலபம்…..பண்புகள்..?
’அந்த நல்ல மனசுதான் தெய்வம்’ என்று சொல்லிக் கொண்டே பள்ளியை நோக்கி நடைபோட்டார்கள் தாயும் மகளும்.

Leave a comment
Upload