
ஆங்கில நாடகங்கள் சென்னைக்கு புதிதல்ல. ஆனால் அதே சமயத்தில் ஒரு ஆன்மீக நாடகத்தை ஆங்கிலத்தில் பார்க்கும் அனுபவம் மிகவும் புதியது, எனக்கும் கூட. தியேட்டர் மெரினா வழங்கி, கிரிதரன் இயக்கத்தில்குரு ராகவேந்திரரின் மகிமைகள் என்ற தலைப்பில் " தி மிராக்கிள்ஸ் ஆப் குரு ராகவேந்திர ஸ்வாமி" என்கிற நாடகம் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற்றது. நாடகத்தை எழுதி அதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்த ஜம்மி நரசிம்மம் என்னை நாடகத்திற்கு அழைத்து இருந்தார்.

விகடகவி வாசகர்களுக்கு அந்த அனுபவத்தை தருவதற்காக இரண்டாவது நாள் சென்று இருந்தேன். இவர்கள் அனைவருமே முதல்முறையாக இப்படி ஒரு நாடகத்தை நடத்துகிறார்கள் என்றாலும் சிலருக்கு மேடை பரிச்சயம் நிறையவே இருந்தது, அவர்களுடைய அமைதியான பண்பட்ட நடிப்பில் அது தெரிந்தது. எந்த இடத்திலும் நாடகம் பார்க்கிறோம் என்ற உணர்வு தோன்றாமல் ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறு நம் கண் முன் விரிந்தது. அவர் நடத்திய பல அற்புதங்கள் மிக எளிமையாக சில மேடை காட்சி அமைப்புகளுடன் நமக்கு வழங்கப்பட்டது.

நடு நடுவே நாடக இயக்குனர் கிரிதரன் முன்பே சொன்னது போல் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ரசிகர்கள் தங்கள் மொபைல் மூலம் பதில் சொல்ல வேண்டும். நாடகத்தின் முடிவில் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் சொன்னவர்களில் மூன்று பேரை தேர்வு செய்து பரிசு வழங்கினார்கள். நானும் எல்லா கேள்விகளுக்கும் சரியாக விடை சொன்னேன். அந்த உத்தி பார்வையாளர்களை நாடகத்தோடு இன்னும் ஒன்றச் செய்தது.


நாடகத்தை ஸமை மற்றும் ஸ்பந்தனா என்ற இருவரும் நடத்திச் சென்றார்கள். பகவான் விஷ்ணுவின் குழந்தைகளாக இருவரும் ஒவ்வொரு காட்சியிலும் வந்து விளக்கம் சொன்னார்கள். அந்த உத்தி மிகவும் நன்றாக இருந்தது இறுதிவரை அவர்கள் இருவரும் வருவதும் சில காட்சிகளில் அவர்களும் உள்ளே சென்று பாத்திரங்களோடு பேசி அந்த காட்சியை இன்னும் விரிவாக நமக்கு விளக்குவதும் இந்த உத்தி மிக அழகாக கையாளப்பட்டு பார்வையாளர்களுக்கு அது எளிமையாக நாடகத்தின் முக்கிய கருத்தினை கொண்டு சென்றது.
நாடகம் முடிந்து ஜம்மி நரசிம்மனை மேடையில் சென்று பார்த்தேன். மிகவும் அற்புதமான அதேசமயம் இந்த நேரத்தில் தேவையான ஒரு நாடகத்தை தந்திருப்பதை கூறி அவரை பாராட்டினேன். அவரிடம் ஒரு விண்ணப்பத்தையும் வைத்தேன். இது சென்னையோடு நின்று விடாமல் மற்ற தமிழக ஊர்களுக்கும் ஏன் தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்ய வேண்டும். பலரும் இதை பார்த்து அதில் குறிப்பாக வெளிப்படும் மனிதத்தையும் கருணையையும் மேலும் வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும் என்று சொன்னேன். என் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட அவர் நிச்சயமாக செய்வோம் எங்களுக்கு தேவை நல்ல ஸ்பான்சர்கள் அது இருந்தால் நிச்சயமாக இது தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கு மட்டுமல்ல தென்னிந்தியாவின் நகரங்களுக்கும் பயணம் செய்யும் என்றார்.

மீண்டும் ஒருமுறை புத்தாண்டில் இந்த நிகழ்வு நடைபெற வேண்டும் என்ற இன்னொரு கோரிக்கையும் இலவச இணைப்பாக அவரிடம் வைத்துவிட்டு ராகவேந்திரரின் மகிமைகளை எண்ணியபடியே வீட்டிற்கு திரும்பினேன். நமது விகடகவி வாசகர்கள் முன் இந்த கோரிக்கையை ஜம்மி நரசிம்மன் சார்பாக நானும் வைக்கிறேன். நீங்களும் உங்கள் பகுதியில் இந்த நாடகம் நடக்க வேண்டும் என்று விரும்பினால் சொல்லுங்களேன் ஏற்பாடு செய்வோம்...

Leave a comment
Upload