தொடர்கள்
தொடர்கள்
பசங்க டாக்கீஸ் 4. Walking to school மொழி:- சீன மொழி  வருடம் :- 2009. பூங்கொடி

20251008061800998.jpg

சீனாவில் , ஒரு மலை கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். மலைப்பகுதிகளில் வசிக்கின்ற பொருளாதார வசதி குறைந்த குழந்தைகள் , எவ்வாறு இரு மலைகளுக்கு இடையே இருக்கும் கேபிள் ஸ்லைடு வழியாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு, பள்ளிக்கு செல்கின்றார்கள் என்பதை மையமாகக் கொண்ட திரைப்படம்.

சீனாவின் யுனான் மாகாணத்தில் , யுநான் ஆற்றங்கரையில் வசிக்கும் 7 வயது சிறுவன் வாவா. அவனது சகோதரி நக்சியாங். இவர்கள் தன்னுடைய தாய் மற்றும் வயதான நடக்க இயலாத பாட்டியுடன் மலைப்பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இவர்களின் தந்தை, நகரத்திற்கு வேலை பார்ப்பதற்குச் சென்றவர் வெகு காலமாகியும் வீட்டிற்கு வரவில்லை. எனவே அவர்களின் அம்மா அங்கு இருக்கக்கூடிய நிலங்களில் வேலை செய்து தன் குழந்தைகளையும் வயதான பாட்டியையும் கவனித்து வருகிறார். பெரும்பாலும் அங்கு வசிப்பவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள்தான். எப்படியாவது தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வியை அளித்து, அவர்களை வாழ்க்கையில் உயரச் செய்ய வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்கள்.

ஆற்றின் ஒரு கரையில் இவர்கள் இருக்க, மறு கரையில் இவர்களுக்கு அறிவை வழங்கக்கூடிய பள்ளிக்கூடம் அமைந்திருக்கிறது. சாலைகளின் வழியாகப் பயணித்து பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டுமானால் பல மணி நேரங்கள் பிடிக்கும். எனவே அந்தப் பகுதி மக்கள் மிக ஆபத்தான, ஒரு வழிமுறையின் மூலம் சில நிமிட நேரங்களிலேயே அடுத்த கரைக்குச் செல்கிறார்கள். ஆற்றிற்கு குறுக்கே உள்ள மேல்நிலை கேபிள்களின் வழியாகப் பயணித்துப் பள்ளிக்கு சிறுவர்கள் செல்கிறார்கள். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் அந்த கேபிள்களைப் பயன்படுத்தி ஆற்றின் அடுத்த கரைக்குப் பயணிக்கிறார்கள்.

அப்படி வாவாவின் அக்கா நக்சியாங் பயணித்து பள்ளிக்குச் செல்கிறாள். வாவா, அக்கா பள்ளிக்குச் சென்ற பிறகு வீட்டின் மேல் கூரைக்குச் சென்று தனது செல்ல நாய்க்குட்டி மிங்மிங் உடன் விளையாடிக் கொண்டிருப்பான். வழி மேல் விழி வைத்தபடி தனது அக்கா எப்போது திரும்பி வருவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். ஏனென்றால் அவன் செல்ல நாய்க்குட்டியும் அக்காவும் மட்டும்தான் அவனுடைய நண்பர்கள்.

அப்படி அக்கா பள்ளியிலிருந்து வரும் பொழுது, ஒரு அழகிய காற்றாடியைக் கொண்டு வருகிறாள். அதைப் பள்ளியில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்து செய்ததாகச் சொல்கிறாள்.

பள்ளிக்குச் சென்று ஒவ்வொரு நாளும் அக்கா வீட்டிற்கு வரும்போது மனமகிழ்வோடும், ஏராளமான தகவல்களோடும் , புதுப்புது விளையாட்டுகளோடும் வருவது வாவாவுக்குத் தானும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.

பள்ளிக்குச் செல்ல வேண்டும், புதுப்புது நண்பர்களைக் கண்டு, அவர்களோடு விளையாட வேண்டும்; படிக்க வேண்டும் என்ற உந்துதல் அவனுக்கு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

வீட்டிற்கு வந்து தம்பியுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு, அக்கா வீட்டுப் பாடங்களைச் செய்வாள். வாவா அவள் அருகில் அமர்ந்தபடி அவள் படிப்பதைக் கவனித்துக் கொண்டிருப்பான். அப்படி அவள் ஒரு கடினமான கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அதற்கு மிக சுலபமாக வாவா ஒரு தீர்வு சொல்கிறான்.

" டேய் தம்பி, நீ உண்மையிலேயே நீ ரொம்ப அறிவாளி. நீ பள்ளிக்கூடம் வந்தா நீ தான் வகுப்புல முதல் மாணவனாக இருப்பாய்"

என்று சொல்கிறாள்.

" எனக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றுதான் ஆசையாக இருக்கிறது. ஆனால் நம் அம்மா கேபிள் வழியாகப் பயணிக்க என்னை அனுமதிக்க மறுக்கிறார். " என்று வருத்தத்தோடு வாவா சொல்கிறான்.

" கவலைப்படாதே தம்பி.. அப்பா விரைவில் வந்து விடுவார். அவர் உன்னை பள்ளிக்கு அழைத்து வருவார்" என்று அக்கா ஆறுதல் கூறுகிறாள்.

" ஒருவேளை அப்பா வரவே இல்லை என்றால் நான் எப்படி படிக்க வருவது? இப்படியே தான் இருப்பதா?" இன்று கலங்கிய கண்களோடு வாவா கேட்கிறான்.

" இல்லை தம்பி. வேறு ஒரு நல்ல காலம் நமக்கு பிறக்கப் போகிறது ஆற்றிற்கு குறுக்கே பாலம் கட்ட இருக்கிறார்கள். அதன் வழியாக நடந்து நீ பள்ளிக்கு வரலாம்" என்கிறாள். அதோடு பாலம் எப்படி இருக்கும் என்று தன்னுடைய பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு படத்தைக் காட்டுகிறாள். அந்தப் பாலம் கட்டப்பட்டு, அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கு செல்லப் போவதாக அவன் கனவு காண்கிறான்.

அடுத்த நாள் காலையில் அம்மா வேலைக்குச் செல்லும் பொழுது மிக நல்ல பிள்ளையாய் அம்மாவுக்கு ஓடி ஓடி உதவி செய்கிறான். அம்மா சென்ற பிறகு, ஒரு சோளக்காட்டு பொம்மைக்கு தன்னுடைய உடையை அணிவித்து, கூரையின் மேல் பகுதியில் வைக்கிறான். கீழே இருந்து பார்த்தால் அவன் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பது போன்று தோன்றும். பாட்டிக்கு தேவையான உதவிகளைச் செய்துவிட்டு, மறைத்து வைத்திருக்கும் அந்த கொக்கியையும், கயிறையும் எடுத்துக்கொள்கிறான். அதைப் பயன்படுத்தி ஆற்றின் குறுக்கே இருக்கும் கேபிளின் வழியாக பயணித்து, பள்ளிக்கூடத்திற்கு வருகிறான். அங்கிருந்து மறைந்து நின்று கொண்டு ஜன்னலின் வாயிலாக, பள்ளிக்குள் நடப்பதைக் கவனிக்கிறான். ஆசிரியர் அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் மிக அழகான ஒரு பெண்மணி வெகு தூரம் பயணம் செய்து அங்கு வந்து சேர்கிறார். அவர்தான் அவர்களின் புதிய ஆசிரியை. மிஸ். நியூ. வந்த உடனேயே தன்னுடைய மாணவர்களைப் பார்ப்பதற்காக வகுப்பறைக்குத் தலைமை ஆசிரியருடன் வருகிறார். அப்பொழுதுதான் ஜன்னலின் வழியாக ஒளிந்து பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனைப் பார்க்கிறார். ஆசிரியை பார்த்து விட்டார் என்று தெரிந்ததும் அங்கிருந்து வேகமாய் ஓடிச் சென்று விடுகிறான் வாவா.

புதிதாக வந்த ஆசிரியை, உள்ளே நுழைந்ததும் தன்னுடைய மாணவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு அவர்களை கவனிக்கிறார். வெகு குளிர் நிறைந்த அந்தப் பிரதேசத்தில், ஷூக்கள் அணியாமல் , வெறும் செருப்புகளோடு அமர்ந்திருக்கும் அந்தக் குழந்தைகளைப் பார்த்ததும் , அவருடைய மனம் சோர்ந்து விடுகிறது. அங்கிருக்கும் அனைத்து குழந்தைகளும் பொருளாதார வசதி அற்றவர்கள் என்பதை தலைமையாசிரியர் மூலம் அறிகிறார்.

தினம் தினம் வாவா அம்மா வேலைக்குச் சென்றதும், மேல்நிலை கேபிள் வழியாகப் பயணித்து பள்ளிக்கு வந்து மறைந்திருந்து அங்கு நடப்பதைக் கவனிக்கிறான். அந்தப் புது ஆசிரியை குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டே குழந்தைகளின் கால் அளவை எடுக்கிறார். இதுவரை இந்த பள்ளிக்கு வந்த ஆசிரியர்களில் இவர் கொஞ்சம் வித்தியாசமானவர்தான் என்று தலைமையாசிரியருக்குத் தோன்றுகிறது.

ஒவ்வொரு மாணவரின் கால் அளவிற்கு ஏற்றவாறு ஷூக்களை வாங்கி ஒவ்வொரு மாணவர்கள் வீட்டிலும் கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்படி நக்சியாங் வீட்டிற்கு அவளுடன் வரும்போது தான், இப்படி ஒரு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு ஒவ்வொரு நாளும் குழந்தைகள் பள்ளிக்கு வருவதை அறிகிறார்.

ஆசிரியையை பார்த்தவுடன், வாவா அம்மாவுக்கு அறியாமல் தான் பள்ளிக்கு வருவதைச் சொல்லிவிடுவார் என்று பயந்து ஒளிந்து கொள்கிறான். ஆனாலும் அவனுடைய குடும்ப நண்பர் ஒருவர் ஒளிந்திருக்கும் அவனைத் தூக்கிச் சென்று ஆசிரியை முன்பு நிறுத்தி விடுகிறார்.' இவன் தான் உன் தம்பியா ? இவனை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேனே.. நான் பள்ளிக்கு வந்த முதல் நாளில், சந்தித்த முதல் மாணவன் இவன் தான் ' என்று ஆசிரியை சொல்ல சொல்ல அம்மாவிற்கு பயங்கரமான கோபம். தன்னை ஏமாற்றிவிட்டு மகன் கேபிளின் வழியாகப் பயணித்து பள்ளிக்குச் சென்றதை அறிந்ததும் அவனை கோபத்தோடு அடிக்கிறார். அப்போது ஆசிரியை அவனைக் காப்பாற்றி விடுகிறார். அதோடு தான் கொண்டு போயிருக்கும் ஒரு அழகான சிவப்பு நிற ஷூவை அவன் அக்காவிற்குப் பரிசளிக்கிறார். மற்ற குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக பிறகு அவர் சென்று விடுகிறார்.

அக்கா மட்டும் படிக்க போகலாமா? நான் ஏன் போகக்கூடாது ? எனக்கும் படிப்பதற்கு ஆசையாக இருக்கிறது என்று வாவா வாதாட அம்மாவிற்கு கோபம் வந்து மீண்டும் அடிக்க முயல்கிறார். ஆனால் அவனுடைய அக்கா குறுக்கே வந்து தடுத்து இனிமேல் தம்பி கண்டிப்பாக உங்களை ஏமாற்ற மாட்டான் என்று வாக்குறுதி தருவான் எனச் சொல்கிறாள்.

அந்த சிவப்பு நிற ஷூவைத் தனக்குத் தந்தால் தான் வாக்குறுதி தருவதாக வாவா சொல்கிறான். அவனுக்காக அவனுடைய அக்கா அந்த ஷூவை விட்டுத் தந்து விடுகிறாள். அதை அணைத்துக் கொண்டே உறங்குகிறான். அவனுக்கு அந்த ஷூ அவ்வளவு பிடித்துப் போகிறது.

அடுத்த நாள் அக்கா பள்ளிக்கு செல்லும்போது, வழி அனுப்புவதற்காக அந்த ஷூவை கையில் அணைத்துக் கொண்டே ஓடி வருகிறான். மற்ற குழந்தைகள் ஆசிரியை தந்த ஷூவை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்வதையும், தன்னுடைய அக்கா மட்டும் பழைய செருப்பை அணிந்திருப்பதையும் வாவா கவனிக்கிறான். அக்காவை அமர செய்து, அவள் காலணியைக் கழட்டி, அவன் உடைகளால் அவள் காலை சுத்தம் செய்து, அந்த புதிய ஷூவை அக்காவிற்கு அணிவிக்கிறான்.

அக்காவிற்கு கண்கள் கலங்குகிறது. உனக்கு பிடித்திருக்கிறது. நீயே வைத்துக்கொள் என்று சொல்கிறாள். மற்றவர்கள் ஷூ அணிந்திருக்கும் போது நீ மட்டும் பழைய செருப்புகளோடு செல்வது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அக்கா. நீயே வைத்துக்கொள் என்று அவன் அன்போடு சொல்கிறான்.

அக்கா மிக மகிழ்வோடு அந்த ஷூவை அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்கிறாள். ஆசிரியை அந்த ஷூ அவளுக்கு பிடித்திருக்கிறதா ? என்று கேட்கிறார். மிகப் பிடித்திருக்கிறது ; எனது தம்பிக்கும் இந்த ஷூ மிகவும் பிடித்தமானதாக இருந்தது. ஆனாலும் எனக்காக திரும்பக் கொடுத்து விட்டான். அவன் அன்பானவன் மட்டுமில்லாமல் மிக அறிவானவனும் கூட என்று தன் தம்பியைப் பற்றிப் பெருமிதத்தோடு சொல்கிறாள்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொழுது, அம்மா அவளிடம் சில மளிகை சாமான்கள் வாங்கி வரப் பணித்து இருந்தார். அதை வாங்குவதற்காக கடைக்குள் சென்றபோது மிக அழகான ஒரு ஷூவைப் பார்த்து விலை கேட்கிறாள். விலை மிக அதிகமாக இருப்பதோடு அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என்பதை உணர்ந்து ஏமாற்றத்தோடு திரும்ப வைக்கிறாள். அந்த ஷூவை வாங்கிக்கொள் . நான் பணம் தருகிறேன் என்ற குரல் கேட்டதும் திரும்பிப் பார்க்கிறாள். அவளுடைய ஆசிரியை அங்கே நின்று கொண்டிருக்கிறார். அந்த ஷூவை அவளுடைய தம்பிக்கு தான் பரிசளிப்பதாக சொல்லி அதை வாங்கித் தருகிறார்.

மிகவும் மகிழ்ச்சியோடு அந்த ஷூவை பள்ளிப் பைக்குள் வைத்து கேபிள் வழியாக வழக்கம் போல பயணிக்கிறாள். ஆற்றின் நடுப்பகுதிக்கு வரும்பொழுது பைக்குள் இருக்கும் ஷூ கீழே விழப் பார்க்கிறது. அதைப் பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் கைகளை விட்டு விடுகிறாள். கொக்கியிலிருந்து கயிறு அவிழ்ந்து விடுகிறது. ஆக்ரோஷமாய் ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆற்றுக்குள் நக்சியாங் விழுந்து ஆற்றின் போக்கோடு கலந்து விடுகிறாள்.

அவளுடைய நனைந்த பையும் ஒரு ஷூ மட்டும் கிடைக்கிறது. அவள் அம்மா உடைந்து போகிறாள். ஆசிரியை, ஊர்க்காரர்கள் அனைவரும் அவளைத் தேற்றுகிறார்கள். ஆனால் இந்தத் துயரமான சம்பவத்திற்குப் பிறகு, வாவா எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனமாகி விடுகிறான்.

தினமும் அக்கா கொடுத்த காற்றாடியோடு அந்த ஆற்றைப் பார்த்துக் கொண்டே தனது செல்ல நாய்க்குட்டியோடு அமர்ந்திருப்பான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் தந்தையும் வீட்டுக்குத் திரும்ப வருகிறார். இனி உங்களை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று உறுதி தருகிறார். தந்தையின் வருகையும் அவன் மனதை மாற்றவில்லை. அக்காவின் இறப்பு அவனை மிகுந்த மன அழுத்தத்திற்குள் தள்ளி விடுகிறது.

வேறொரு சூழ்நிலைக்கு மாறினால் அவனுக்கு இருக்கும் பிரச்சனை தீரும் என்று ஆசிரியை அவன் தாயாரிடம் பேசுகிறார். ஏற்கனவே ஒரு பிள்ளையை ஆற்றுக்குப் பலி கொடுத்துவிட்டேன்.. இருக்கும் இவனையும் இழக்க நான் தயாராக இல்லை. இவனைப் பள்ளிக்கு அனுப்பினால் நான் ஆற்றில் குதித்து விடுவேன் என்று சொல்லி தன் கணவனிடம் கதறுகிறாள்.

ஆசிரியை , அவன் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறான். இதே நிலை நீடித்தால் அவன் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்று மருத்துவர் சொன்னதை அவன் தாயிடம் தெரிவிக்கிறாள். ஒருவாறாக அவன் தாய் சம்மதித்து, வாவாவைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.

பள்ளிக்குத் தயாராகி, கேபிளின் வழியாகத் தந்தையுடன் பயணிக்க அந்த இடத்திற்கு வருகிறான். அப்போது அவனது அக்காவின் மற்றொரு ஷூ கரை ஒதுங்கி இருப்பதைப் பார்த்து, அதுவரை ஊமையாய் இருந்த அவன், அக்கா என்று கதறிக் கொண்டு ஓடுகிறான். அதற்குப் பிறகு அந்த கேபிளை பார்த்தாலே அவன் மிக பயப்படுகிறான்.

அதனால் ஆசிரியை அவன் வீட்டிற்க்கே வந்து அவனுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறார். எவ்வளவு முயன்றும் அவனைப் படிக்க வைக்க ஆசிரியையால் முடியவில்லை. அப்பொழுதுதான் அவனுடைய ஆசையை ஓவியமாக வரைந்து ஆசிரியையிடம் காட்டுகிறான்.

அந்த ஆர்ப்பரிக்கும் ஆற்றிற்குக் குறுக்காக ஒரு பாலத்தை வரைந்து அதன் வழியே அவனும் அவன் அக்காவும் பயணிப்பதாக ஓவியம் வரைந்திருப்பான்.

அந்த ஆசிரியை தன் நண்பர்களின் உதவியுடன் அரசாங்கத்திற்கு நிறைய மனுக்களை அனுப்பி வெகு விரைவில் அந்த ஆற்றிற்கு குறுக்கே பாலத்தை கட்ட ஏற்பாடு செய்கிறார்.

அந்தப் பாலம் கட்டப்பட்டு, அதன்படியாக முதன்முதலாக வாவா நடந்து செல்கிறான். அப்போது அரூபமாய் அவனுடைய அக்கா, கையைப் பிடித்து அவனை அழைத்துச் செல்வதாக இந்த படம் நிறைவுறும்.

வெகு அருமையான திரைப்படம். பார்க்கும் அனைவரையும் கண்கலங்க செய்துவிடும். அதுவும் அந்த குழந்தைகளின் நடிப்பு நம்மை வெகுவாக ஈர்க்கும்.

கண்டிப்பாக குழந்தைகள் இந்த படத்தைப் பார்த்தால், எத்தனை கடினங்களை தாண்டியும் கல்வி என்பது மிக முக்கியம் என்பதை அறிவார்கள். இந்தப் படம் அவர்களுக்குள் நிச்சயமாக ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஜாதிய முறைகளாலும், பின் தங்கிய பொருளாதாரத்தாலும் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும், வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த உதவும் வலிமையான ஆயுதம் கல்வி என்பதை உணர்த்தும் அற்புதமான திரைப்படம்.

பசங்க டாக்கீஸ் திரைப்படம்:- Walking to school மொழி:- சீன மொழி வருடம் :- 2009