தொடர்கள்
விகடகவியார்
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றி துளிகள்

20251008062950290.jpg

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றி துளிகள்....

40 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்த உலகக் கோப்பை கனவை கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி நிறைவேற்றியது. இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பிரதமர் அழைத்து விருந்து தந்து அவர்களை மகிழ்வித்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்த போட்டியில் தொடர்ச்சியாக தோல்விகளை தான் சந்தித்தது இந்திய அணி. பலமான அணியாக கருதப்பட்ட இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. கிட்டத்தட்ட உலகக் கோப்பை கனவு பகல் கனவு தானோ என்ற அச்சம் ஏற்பட்டது. கிரிக்கெட் விளையாட்டு அதிர்ஷ்டம் மற்றும் திடிக்கிடும் திருப்பங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்று விமர்சகர்கள் சொல்வார்கள். அது உண்மைதான் என்பதை இந்த உலகக் கோப்பை உறுதிப்படுத்தியது. தொடர் தோல்வியை சந்தித்த இந்திய அணியின் கையில் இன்று உலக கோப்பை. இதற்கு காரணம் அந்த கிரிக்கெட் அணி தோல்விக்கான காரணத்தை முதலில் அசை போட்டது. விவாதித்தது அதன் பிறகு போட்டியை சீனியர் வீராங்கனைகள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த தோல்விக்கு கொஞ்சமும் கூச்சப்படாமல் அதற்கு பொறுப்பு ஏற்றார்கள். இதுதான் வெற்றிக்கான மாற்றத்தை ஏற்படுத்தியது. இங்கிலாந்து தோல்விக்கு பிறகு

பத்திரிக்கையாளர்களிடம் ஸ்மிரிதிமந்தனா "இந்த சரிவு என்னிடமிருந்து தொடங்கியதால் இதற்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். "என்று பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார். இதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு திருப்புமுனை என்கிறார்கள் கிரிக்கெட்விமர்சகர்கள். அதன் பிறகு நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி பொறுப்புடன் விளையாடியது. ஆறு பவுலர்கள் நிதானமான ஆட்டம் என்று வெற்றிப் பாதையை அவர்கள் வகுத்துக் கொண்டார்கள். ஜெமிமாவை இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. அடுத்த போட்டியில் அவரை கொண்டு வந்தார்கள் மூன்றாவதாக களம் இறங்கிய ஜெமிமா 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அரை இறுதியில் கூட ஜெமிமா அணியில் உண்டா இல்லையா என்பது ஆட்டம் தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பு தான் தீர்மானம் செய்தார்கள். இதை ஜெமிமாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இதேபோல் பேட்டிங் ஆர்டர் மாற்றியது வெற்றிக்கு முக்கிய காரணம் என்கிறார்கள். இதுக்கு காரணம் கேப்டன் ஹர்மன் பிரித்கவுர். மூன்று தொடர் தோல்விகளுக்கு பிறகு அவர் நிறைய யோசித்து நிறைய மாற்றங்களை ஏற்படுத்தினார். எது சரி எது தவறு என்று தனது அணியிடம் வெளிப்படையாகவே விவாதம் செய்தார். எதிரணி அதிக ரன் எடுக்காமல் தடுப்பதற்காக சரியான பீல்டர்களை நிற்க வைப்பது பற்றி திட்டமிட்டது முக்கிய காரணம். இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவில் முதல் விக்கெட் விழுந்ததற்கு காரணம் இந்த ஃபில்டிங் செட்டப் தான். தோல்விக்கான காரணங்களை பற்றி வர்ணனையாளர்கள் விமர்சிக்கும் போது இந்தியாவின் ஃபில்டிங் செட்டப்பை குறை சொன்னார்கள். அதை கேப்டன் சரி செய்தார். இறுதிப் போட்டியில் ஆட்டம் பற்றிய விழிப்புணர்வு ஹார்மனிடம் நன்றாக இருந்தது என்கிறார்கள் விமர்சகர்கள்.

தென்னாப்பிரிக்காவின் கேப்டன் லாரா வோல்வார்ட் இந்தியாவின் வெற்றிக்கும் உலக கோப்பைக்கு இடையில் அசைக்க முடியாத ஒரு சுவராக இருந்தார். தனி ஒருவராக போராடி சதம் அடித்த லாரா உலகக்கோப்பை வெற்றியை தனது பேட்டில் வைத்திருந்தார். இந்தியா ஒரு புறம் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் லாரா அவுட் . ஆனால், தான் நமது வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று யோசித்தார்கள்.

42 வது ஓவரில் தீப்தி ஷர்மா வீசிய பந்தை லாரா தூக்கி அடித்தார் அது டீப் மிட்-விக்கெட் திசையை நோக்கி போக அந்தப் பந்தை நோக்கி அமன்ஜோத் கவுர் ஓடிக்கொண்டிருந்தார். பந்து எங்கே வந்து விழும் என்று கச்சிதமாக திட்டமிட்டு அவர் கையில் விழுந்த பந்து நழுவ பயந்து போய் பிடிக்கப் போக மூன்றாவது முயற்சியில் பந்து அவர் கையில் சிக்கியது. அப்போது ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து கைதட்ட அவர் தரையில் படுத்துக் கொண்டார் அப்பாடா புடிச்சாச்சு என்ற நிம்மதியில்.

இதையெல்லாம் எழுதிப் படிப்பதை விட நேரில் பார்ப்பதுதான் சுகானுபவம் என்றார் ஒரு விமர்சகர். சமூக வலைத்தளத்தில் அந்த கேட்ச் சம்பவம் பல லட்சக்கணக்கான மக்களின் பார்வையைக் கவர்ந்திருக்கிறது. அதுதான் தென்னாப்பிரிக்காவின் தோல்வியை உறுதி செய்த விக்கெட்.

இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்த வரலாற்று வெற்றியில் அந்த அணியின் முழு பங்களிப்பு இருந்தாலும் அமன்ஜோத் கவுர் பிடித்த அந்த ஒரு கேட்ச் கிரிக்கெட் வரலாறில் ஒரு மறக்க முடியாத ஒரு சம்பவம் என்ன பேசப்படும்.