தொடர்கள்
கதை
தாய்மை — ராஜஸ்ரீ முரளி

20251008061244586.jpeg

கொட்டி தீர்க்கும் மழை. சாராதாவும், வாசுவும் தங்களது நான்கு மாதங்களே ஆன பேத்தி அவந்திகாவை தழுவிக் கொண்டு,நொடிக்கு ஒரு முறை மகனும் மருமகளும் வருவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

தனி வீடு. அக்கம் பக்கம் அதிகம் பழக்கம் இல்லை.மகனும், மருமகளும் சேர்ந்து பிடிவாதமாக ஆறு மாதங்களுக்கு முன்பு பிரமாண்டமான இந்த வீட்டை கட்டி குடியேறினார்கள்.அவர்கள் இருவரும் வேலைக்கு சென்று விட்டால், இவர்களுக்கு ஆதரவாக வேலுவும், அவன் மனைவி சரளாவும் தான்.அவர்களுக்கு ஒரு வயது குழந்தை — ஆண் பிள்ளை — இருந்தது.
வீட்டுடன் தங்கி இவர்களுக்கு துணையாக இருந்தனர்.

சரளா வீட்டு வேலைகளை அனைத்தையும் மிகவும் பொறுப்பாகவும் சுத்தமாகவும் செய்து வந்தாள்.தன் குழந்தையை பார்த்துக்கொள்வதைப் போலவே அவந்திகாவையும் தூங்க வைப்பது முதல் குளிப்பாட்டுவது வரை கவனித்தாள்.சாராதாவுக்கு பேச்சுத் துணையாகவும் இருந்தாள்.

வேலு தோட்டப் பணி, காரை துடைப்பது, கடைகளுக்குச் செல்வது என்று சுறுசுறுப்பாக இருந்தான்.இருவரும் நல்ல உள்ளம் படைத்தவர்களாக இருப்பது சாராதாவுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

மருமகள் அன்றும் வழக்கம்போல தன் தாய்ப்பாலை கலெக்ட் செய்து, அதற்கான கவர்களில் நிரப்பி பிரிட்ஜில் வைத்து விட்டு போனாள்.
இப்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் கட்டாயம் வேலைக்கு செல்வதால், தாய்ப்பால் கூட பாட்டிலில் ஊற்றி குழந்தையின் பசியை போக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அவள் வைத்து விட்டு போகும் பால் மாலை வரை குழந்தைக்கு போதுமானதாக இருக்கும்.

ஆனால் அன்று கொட்டும் மழையில் அவள் வருவதற்கு தாமதம் ஆகி கொண்டே இருந்தது.கையிருப்பில் இருந்த தாய்ப்பால் தீர்ந்து விட்டது.
சாராதாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவந்தி பாலுக்காக அழ ஆரம்பித்து விடுவாள்.

“மருமகள் வர முடியலேன்னா, காய்ச்சிய பாலை கொடுக்க வேண்டியதுதான்,” என்று அவள் மனதில் யோசித்தாள்.
“ஆனா குழந்தைக்கு ஒத்துக்குமா?
தாய்ப்பால் தான் முதல் ஆறு மாதங்களுக்கு கொடுக்கணும் என்று மருமகள் உறுதியா இருக்கா...”

அப்படி யோசித்துக்கொண்டிருந்தபோது, குழந்தை அழ தொடங்கியது.
மகன், மருமகள் இருவரின் மொபைல்களுக்கும் கால் போகவில்லை — மழையால் சிக்னல் போயிருந்தது.

அவள் படும் அவஸ்தையைப் பார்த்து தயங்கியபடியே சரளா மெதுவாகச் சொன்னாள்:
“அம்மா… நான் இப்படி பேசறேன்னு தப்பா நினைக்காதீங்க மா…
அவந்தி பாப்பாவுக்கு நான் என் தாய்ப்பாலை குடுக்கட்டா மா?”

அது கேட்டதும் சாராதாவின் கண்களில் தண்ணீர் தளும்பியது.
“இந்த யோசனை ஏன் நமக்கு வரல?” என்று மனதிலே நினைத்தாள்.
“இதுல என்ன சரளா தப்பு? யாருக்காவது வரணும் இந்த மனசு...” என்று சொல்ல முயன்றாலும், குரல் தடுக்கிக் கொண்டது.

அந்தக் கணத்தில் சரளா, திருஞானசம்பந்தரின் பசியை பாலூட்டி போக்கிய பார்வதி மாதாவைப் போல தோன்றினாள்.

“இந்தாடி குழந்தை, அவ பசியை போக்கு,” என்று குழந்தையை அவளிடம் கொடுத்தாள் சாராதா.

அந்த நிமிடத்தில் சரளா மனதில் உயர்ந்த ஒரு தெய்வமாக நின்றாள்.
தாய்ப்பாலை மகிழ்ச்சியாகக் குடித்து விட்டு, தன் சிரிப்பில் அமுதூட்டிய சரளாவுக்கு நன்றி சொன்னது அவந்திகா — வார்த்தையில்லாமல்.