
தன் உள்ளத்துடனே போராடிக் கொண்டிருந்தாள் அத்தலைவி.
உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டுக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருக்கிறாள் அவள்.
அவளைச் சுற்றி இயங்கும் உலகமோ ஆனந்தமாய் இருக்கிறது.
இந்த நிலவும், வானும், கானகமும், நான் வாழும் ஊரும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. நான் மட்டும் பிரிவுத் துன்பத்தில் சிக்கி அதனால் உறக்கம் இன்றி தவிக்கிறேன் என்று கலங்குகிறாள் அவள்.
அந்த நெய்தல் நில மங்கையின் கண்ணீர் தோய்ந்த மொழியைக் கேளுங்கள்
“நீல நிறம் கொண்ட வானத்தில், தன் பால் நிற கதிர்களைப் பரப்பி ஊர்ந்து வருகிறது நிலவு. இந்நிலவொளியில் ஊர் மக்கள் ஒன்று கூடி ஆரவார ஒலியெழுப்பி மகிழ்கின்றனர்.
காட்டுப் பூக்களில் வண்டுகள் தம் துணையுடன் அமர்ந்து ரீங்காரமிடுகின்றன.
இந்த அழகிய பொழுதில் நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன். என் அணிகலன்கள் நெகிழும் வண்ணம் இளைத்து இருக்கிறேன்.
இருள் சூழும் இவ்விரவில் நான் உறக்கம் இன்றி தவிக்கிறேன்.
இந்த உலகத்தில் வாழ்பவரின் மனநிலையுடன் ஒத்திருக்க என்னால் முடியவில்லை. அதனால் இவ்வுலகம் என்னுடன் போர் புரிகிறதா?
அல்லது , என் அவலமான மனதுடன் நான் இவ்வுலகுடன் போர் புரிகிறேனா? எனக்குப் புரியவில்லை” என்கிறாள் அத்தலைவி.
இந்த அழகியப் பாடலை இயற்றியவர் வெள்ளி வீதியார் என்னும் சங்கப்புலவர்.
ஓசை நயமும், அழகிய உவமைகளும் கொண்ட பாடல் இது
நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,
பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;
ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,
கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;
கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும்
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;
யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே:
அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்?
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே?
நற்றிணை 348
மேலும் ஒரு நல்ல பாடலுடன் சந்திப்போம்
தொடரும்

Leave a comment
Upload