
சுயாதீன சினிமா என்பது, இன்டிபென்டன்ட் ஃபில்ம் மேக்கிங் வகைமையை சேர்ந்தது. வெகுஜன சினிமா என்பது வழக்கமான மரபார்ந்த நடைமுறைகளை பின்பற்றி, மிகை யதார்த்தவியல் என்கிற மெலோடிராமாடிக் அணுகுமுறையோடு உண்டாக்கப்படுவது. சுயாதீன சினிமா என்பது சுதந்திரமான சினிமா. இது எந்தவித கட்டுப்பாட்டிற்குள்ளும், வரையறைகளுக்குள்ளும் அடங்காது. உலகின் அனைத்து ஜீவராசிகளின் பரிபூரண சுதந்திரத்தை இலக்காக கொண்டு பரிட்சார்த்த முறையில் வித்தியாசமான, துணிச்சலான, உண்மைக்கு நெருக்கமான கதை கருக்களை இந்த வகைமை திரைப்படைப்புகள் கையாளுகின்றன.
இந்தியா ஒரு காலத்தில் செல்வச்செழிப்பான நாடு. பிற்பாடு ஏழை நாடாக்கப்பட்டு, இப்போது வளரும் நாடுகளில் ஒன்றாக தன்னை முன்னிறுத்துகிறது. அப்படிப்பட்ட சூழலில் சிக்கனம் என்பது தவிர்க்கமுடியாதது. அந்த வகையில், மிக குறைந்த அளவிலான ஆதார தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்ய இந்த மாதிரியான படைப்பு அனுமதிக்கிறது.
இதில் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் புதியவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள். சுவாரஸ்யமான, புதுமையான திரைக்கதை அமைப்பு இருக்கும். நடிகர் நடிகைகளுக்கு பல முறை முன்கூட்டிய ஒத்திகை பார்க்கப்பட்டிருக்கும். இது தரத்தை மேம்படுத்துவதற்காகவோ, நேரவிரயத்தை தவிர்ப்பதற்காகவோ, சிக்கனத்திற்காகவோ மட்டும் அல்ல. திட்டமிடல் தான் எந்தவொரு படைப்பிற்கும் அடியுரம். அந்த வகையில் சிறந்த துவக்கம் சிறந்த நிறைவை நோக்கி நகர்த்திச் செல்லும் என்கிற விதத்தில், படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பான அத்தனை முன்னெடுப்புகளும் அந்த படத்தை நேர்த்தியாக உருவாக்க உதவுவதோடு, வணிக ரீதியில் பாதிப்பை உண்டாக்காத வகையில் இந்த கனவுத்தொழிற்சாலையை திறம்பட இயக்க உந்துசக்தியாக இருக்கிறது.
சிறிய அளவிலான மைக்குகளை கேமராவின் கண்களில் படாமல் மறைத்து வைத்து ‘லைவ் டப்பிங்’ / நேரடி குரலல்பதிவு அல்லது நேரடி ஒலிப்பதிவு முறையை கையாளலாம். இதனால் தனியாக டப்பிங் / ஒலிப்பதிவு செய்வதற்கு ஆகும் செலவு மிச்சமாகிறது. மேலும் லைவ் டப்பிங்கில் கிடைக்கிற உயிரோட்டம் கூடுதல் தத்ரூபமாக இருக்கும்.
கிம்பிள் என்பது ஒரு சிறிய கருவி. இதில் கேமராவை பொருத்திவிட்டால், கேமராவை 360 டிகிரிக்கும் நாம் நினைக்கிற மாதிரி காட்சியின் கலாப்பூர்வமான தேவைக்கேற்ப நகர்த்தலாம். எக்ஸார்சிஸ்ட் திரைப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரமான அந்த குழந்தை தன்னுடைய தலையை பூமிப்பந்துபோல கரகரவென சுற்றிக்காட்டுமே, அதுமாதிரி, குறுக்குவசத்திலும், நெடுக்குவசத்திலும், சாய்வுவசத்திலும் இது சுழன்றபடி தன்னோடு பொருத்திய கேமராவையும் அந்த பாதைகளில் அலுங்காமல் உடன் அழைத்துச் செல்ல வல்லது. தேவையென்றால் குட்டிக்கரணம் கூட இதனால் போட வைக்க முடியும். இது விலையுயர்ந்த ஸ்டெடிகேம் என்கிற கருவியின் தேவையை மிகக்குறைந்த செலவில் பூர்த்தி செய்து விடுகிறது.
சினிமா இப்போது டிஜிட்டல் வடிவெடுத்து விட்டதால் கச்சா பிலிம் தேவைகள் அவசியமற்றதாகி விட்டது. சிப் மற்றும் ஹார்ட் டிஸ்க் தான். இவற்றை திரும்பதிரும்ப பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த இடத்தில் கமல்ஹாசனை நினைத்துக்கொள்ள வேண்டும். அவர் தான் முதன்மை கதாநாயகர்களோடு ஒருவராக இருந்து கொண்டே, டிஜிட்டல் சினிமா என்கிற புதிய முயற்சியை முன்னெடுத்தவர். அது அதிகம் அறியப்படாத நாட்களிலேயே, டிஜிட்டலில் மும்பை எக்ஸ்பிரஸ் என்றொரு படம் எடுத்து, அதில் நாயகனாக நடித்து, இயக்கியும் இருக்கிறார்.
டிரோன் என்றொரு சிறிய பறவை அளவிலான, குழந்தைகளுக்கான விமானம் போல ஒரு இயந்திரம் இருக்கிறது. இது ரிமோட் மூலம் இயங்கக்கூடியது. திருமண நிகழ்ச்சிகளில் இதை பயன்படுத்தி பேர்ட் ஐ வியூ அல்லது பறவைப்பார்வையில் வந்திருக்கிறவர்கள் அனைவரையும் ஒரே காட்சியில் படம்பிடிப்பதை பார்த்திருப்போம். அதேதான். சினிமாவில் பெரியபெரிய கட்டிடங்களின் தலை வரை சென்று கேமரா சுற்றிக்காட்டுவது, அந்தரத்தில் நின்றபடி, நகர்ந்தபடி என்று விதவிதமாக படம் பிடித்து அதிசயிக்க வைப்பது என்று, இந்த டிரோன், கேமராவை தன்னோடு பிணைத்துக்கொண்டு ஏகப்பட்ட ஜாலங்களை அநாயாசமாக செய்யக்கூடியது. இதில் கோப்ரோ மாதிரி கைக்குள் அடக்கிவிடுகிற அளவிற்கேயான மிகச் சிறிய கேமராவை பொருத்தி மனிதர்களால் கேமராவை எடுத்துச் செல்ல முடியாத எந்த மாதிரியான அசாதரணமான இடங்களுக்கும் சென்று, படம் பிடிக்க முடியும். கோப்ரோ கேமரா மிகச்சிறியதாக இருக்கும். அதை தண்ணீருக்கு அடியில் எடுக்கப்படுகிற காட்சி, அந்தரத்தில் எடுக்கப்படுகிற பறந்துபட்ட காட்சி, காட்டாற்று வெள்ளத்திற்கு மேல் பறந்து சென்று காட்சிப்படுத்துகிற காட்சி, அதளபாதாளத்திற்குள் பயணித்து படம் பிடித்துக்காட்டுகிற காட்சி என்று பல இடங்களில், டிரோனில் இந்த மாதிரியான கேமராவை இணைத்து, கைக்கு அடக்கமாக வைத்துக்கொண்டு பிரமிப்பான காட்சித்துளிகளை அநாயாசமாக எடுக்கலாம்.
கேமராவை எங்கெல்லாம் ஒரு கேமராமேனால் எடுத்துச் செல்ல முடியாதோ அங்கெல்லாம் அவருக்கு பதிலாக ரிமோட்டில் இயங்கும் இந்த டிரோன் சென்று நமக்கு படம் பிடித்துத் தரும். விலை மிகக்குறைவு. பிக்சல் என்று சொல்லப்படுகிற இதில் கிடைக்கும் காட்சிகளின் தெளிவு ஓரளவு போதுமானதாக இருக்கும். ஆனால் இந்த எளிய கேமராவில் சுலபமான முறையில் எடுக்கப்படுகிற காட்சித்துளிகள் வழக்கமாக எடுக்கப்படுகிற உயர்ரக கேமரா எடுக்கிற காட்சித்துளிகளுக்கு இடையிடையே வருவதால், அதன் சுமாரான தெளிவு ஒரு குறையாக பார்க்க தோன்றாது. அதேசமயம் அது எளிதில் சாதித்து காட்டுகிற பிரமாண்டமான, பிரமிக்க வைக்கிற அந்த சில நொடிகளில், அந்த பிரமிப்பு அடங்குவதற்குள், அந்த காட்சித்துளிகள் நகர்ந்துவிடும். தேவர் மகன் படத்தின் இறுதிக்காட்சியில் நாசரை கமல் பொட்டல்காட்டிற்குள் துரத்திச் செல்கிற இடத்தில், மேலும் சில இடங்களில் பயன்படுத்தியிருப்பார்.
கொரிலா ஃபிலிம் மேக்கிங் என்றொரு அம்சம் இருக்கிறது. கேமரா எங்கே இருக்கிறது என்று தெரியாதபடி கேமராவை மறைத்து வைத்துவிட்டு, மக்கள் நெரிசல் உள்ள சந்தை, வணிகவளாகம் மாதிரியான இடங்களில் யாருக்குமே தெரியாதபடி அத்தனை யதார்த்தமாக, இயல்பாக ரகசியமாக சில காட்சிகளை படம் பிடிக்கலாம்.


Leave a comment
Upload