தொடர்கள்
அனுபவம்
கட்டுற வேலை - மோகன் ஜி.

20251007071008504.jpg

சற்றுமுன் சின்னவனிடமிருந்து வீடியோ கால். ‘’என்னப்பா காலங்கார்த்தால?”

“அப்போய்! இன்னைக்கு ஸ்கூலில் சிருஷ்டிக்கு ஹாலோவின் பார்ட்டி. அவ தான் ஹாரி பாட்டர் ரோல் பண்ணப் போறா”

“ஹை சூப்பர்!” என்று சொல்லி முடிக்குமுன் வீடியோ காமரா சிருஷ்டியை ஜூம் செய்தது. கழுத்தில் நீண்ட ‘டை’யை அங்கவஸ்த்திரம் போல் தொங்கவிட்டுக் கொண்டு சிரித்தாள். முன்பற்களில் இரண்டு காணோம். விழுந்து விட்ட பற்களின் இடத்தை நாக்குநுனியால் நிரப்பிக் காண்பித்தாள்.
“ டாடி தப்பு தப்பா டையைக் கட்டி விடுறார். மேலையும் கீழையுமா இருக்கு. டீச் ஹிம் ஹௌ டு டை த டை தாத்தா !”

சட்டை பேண்ட் போட்டுக்கறேனோ இல்லையோ… கழுத்தில் டையும் மேலே கோட்டுமாக அலைந்த உத்யோகஸ்தன் நான்.

“இந்தப் பக்கத்து டையை அந்தப் பக்கமா சுத்து… அப்படித் தான்… மறுபடியும் இன்னொருக்கா… அந்த ஜங்க்‌ஷனை லூசாகாம பிடிச்சுகிட்டு மேல் லூப் வழியா உள்ளே கொண்டு போ… சமோசா ஃபார்ம் ஆகுதா…” இந்த தினுசாக செய்முறை விளக்கம் தந்தபடி ஒருவாறு டையைக் கட்ட வைத்தேன்.

சிலவற்றை நாமே செய்வது சுலபம். நாம் பிறருக்குச் சொல்லி செய்ய வைப்பது கடினம்..

நானோ இடது கையால் டை கட்டிக் கொண்ட பிரகஸ்பதி. வீடியாவில் பார்த்து எதிர்ப்புறமாக சிந்தித்து டை வைபவத்தை ஒருவாறு நடத்தி விட்டேன். சிருஷ்டியும்
‘ஐ லவ் யூ தாத்தா!’ என்றபடி கிளம்பிப் போய் விட்டாள்.

ரொம்ப காலமாகவே கல்யாண சீஸனில் உறவுகளிடமும் நட்பு வட்டத்திலும் எனக்கு ரொம்பவே கிராக்கி! ஜானவாசத்திற்கு முன் நண்பர்களுக்கு டை கட்டி விடும் வேலை, அவர்களுடைய பிள்ளைகளின் கல்யாணத்திற்கும் தொடர்கிறது.

டைகட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றோர்
கைகட்டிப் பின்செல் பவர்

என்று குறளெல்லாம் சொன்ன நண்பன் மெடிகல் ரெப்பாக கழுத்தில் டையும் கையில் தோல் பையுமாக லோ லோ என்றே அலையவும் செய்தான். நல்ல காலம்! எனக்குப் பாடம் எடுக்கிற பாடு தான்!

எனது இன்னுமொரு ஸ்பெஷாலிட்டி ‘பஞ்ச கச்சம்’ கட்டி விடுவது.

“ஏங்க! இவ்வளவு செய்யற நீங்க நாதஸ்வரமும் வாசிக்கக் கத்துகிட்டிருந்தா நண்பர்கள் கல்யாணத்துக்கு உதவியா இருக்காது?” என்று என்னோட தங்கமணி கிண்டல் செய்தும் பார்த்து விட்டாள்.

டை கட்டுவதும், பஞ்சகச்சம் கட்டிக் கொள்வதும் எளிய வேலைகள் தான். கொஞ்சம் ஆர்வமிருந்தால் கற்றுக் கொண்டு விடலாம். இதெல்லாம் ஒரு வேலையா என்ற மனவிலக்கம் இருந்தால் இத்தகைய எளிய விஷயங்களுக்குப் பிறருக்காக காத்திருக்க வேண்டும்.

இந்த சுலபமானவற்றைக் கட்டிக் கொள்ளத் தெரியாமல், ரொம்பத் தெரிந்த மாதிரி ‘கல்யாணம் கட்டி’க் கொண்டு முழிக்கிறீங்களே…. நல்லா வேணும்னேன்!