தொடர்கள்
தொடர்கள்
மஹாபாரத மாந்தர்கள் குறள் வழி - பீமன் - தமிழ் நந்தி

20251008061619371.jpg


துரியோதனனின் பகைக்கு ஆளான குந்தி மைந்தன் பீமன் தனக்கு கெடுதல் செய்தவர்களை பழிவாங்காமல் இருந்தான். வனவாசத்திலும் அஞ்ஞானவாசத்திலும் வறுமையால் துன்பம் அனுபவித்தான். அப்போதும் கலங்காமல் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருந்த அரக்கனை மகிழ்ச்சியோடு அழித்து வெற்றி கண்டான். இடும்பி மணாளன். (அரக்கனுக்கு தங்கையாக இருந்தும் அண்ணனை கொன்ற தீயவனை அன்புள்ளத்தோடு காதலித்து மணந்தவள் இடும்பி)

பீமனுக்கு கஷ்டப்பட்ட தருணங்களில் தெய்வங்கள் உதவின. பீமன் தன் சகோதரர்களிடமோ கௌரவர்களிடமோ பிறரிடமோ பொறாமை கொண்டது இல்லை.

அநீதி கண்டு பொங்குவதும் கோவிப்பதும் பீமன் குணம்; நிந்திப்பதும் உண்டு.
உதாரணம் 1) கர்ணனிடம் “தேரோட்டியின் மகனே! உன் குலத்துக்குத் தகுந்த குதிரை சவுக்கை எடுத்துக் கொள். நீ அர்ஜுனனிடம் சமயுத்தம் செய்ய தகுந்தவன் அல்லன்” என ஆயுதப் பயிற்சி தேர்வு விழாவில் கூறினான்.

2) திரௌபதியை பணயம் வைத்து தோற்ற தருமனிடம் கோபித்தான்.


3) 15 ஆம் நாள் அஸ்வத்தாமன் என்ற புகழ்மிக்க யானையை கொன்றான் பிரம்மாஸ்திரத்தை ஏவும் தருவாயில் இருந்த துரோணார் “அஸ்வத்தாமனை கொன்றேன்” என்ற பீமனின் முழக்கத்தால் தயங்கினார். அந்நிலையில் அவரை நிந்தித்தான்.


மகாபாரத யுத்தத்தில் கௌரவர்களில் ஒருவரான விகர்ணனை வருத்தத்தோடு கொன்றான். பின் இறுதியில் கோபத்தோடு துச்சாதனையும் துரியோதனனையும் கொன்றான்.

குறளும் பொருளும்

மனம் நோக தனக்கு பிறர் கெடுதல் செய்தாலும் பழி வாங்காதிருப்பது நன்று.

திறன் அல்ல தற்பிறர் செய்யினும் நோ நொந்து

அறன் அல்ல செய்யாமை நன்று 157

வறுமையைப் போல துன்பமானது எது? வறுமைதான்.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னாதது 1041

துன்பம் வரும்போது கலங்காமல் இருந்தால், அந்த துன்பத்திற்கு துன்பம் வரும்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாதவர் 623


என் குடும்பத்தை உயரச்செய்வேன் என்பவனுக்குதெய்வம் முன்வந்து உதவும்.

குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்

மடிதற்று தான் முந்துறும் 1023

எவரிடத்திலும் பொறாமை இல்லை எனில், அதைவிட சிறந்த பாக்கியம் இல்லை.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை யார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின். 162