
அண்மையில் ‘முற்காலத் தமிழ் இதழ்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூல் வாசிக்கக் கிடைத்தது. திரு.இளங்கோவன் என்பவர் தொகுத்து இந்த நூலை சேகர் பதிப்பகம், சென்னை மூலமாக 1979ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். பழைய தமிழ் இதழ்கள் பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன.
1878 ஆம் ஆண்டுமுதல் தமிழ் இதழ்கள் அச்சிடப்பட்டதாகத் தெரிகிறது. அவற்றைப் பற்றிய சிலகுறிப்புகளின் தொகுப்பே இந்த புத்தகம்.
1848 முதல் 1909 வரையிலான இருபத்து மூன்று இதழ்களில் படங்களுடன் கதைகள், விடுகதைகள், அறிவுப் புதிர்கள், சிறுவர்க்கான சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், பெண்கள் பகுதி, ஆங்கிலம் மற்றும் வடமொழி நூல்களின் சிறப்பான பகுதிகள் பற்றிய செய்திகள், வரலாற்றுக் கட்டுரைகள், மொழிப்பற்று கட்டுரைகளும் வந்த வண்ணம் இருந்திருக்கின்றன. துப்பறியும் கதைகளுக்கு வரவேற்பும் கிடைத்திருக்கிறது. சுதேசப்பற்று கட்டுரைகளும் தலையங்கங்களும் - .
சந்தாதாரர்களை நம்பியே பல இதழ்கள் நடந்திருக்கின்றன. நட்டத்தில் இயங்கி மூடுவிழா கண்டபடியேயும் இருந்திருக்கின்றன.
இந்த இதழ்களில், பலவற்றுக்கும் மிக வித்தியாசமான பெயர்கள்.
நற்போதகம்;
கலாவர்தினி;
சித்தாந்த சங்கிரகம்;
சுகுண போதினி
பிரம்மவித்யா பத்திரிக்கை;
மகாராணி;
பெண்மதி போதினி;
விவேக திவாகரன்;
விஜயத்துவஜம்;
விவேக சிந்தாமணி;
ஞான பானு;
லோகோபகாரி;
ஞான சந்திரிகா;
மாதர் மனோரஞ்சனி;
விநோத விசித்திர பத்திரிகை;
ஜனப் பிரியன் ;
அறிவு விளக்கம் போன்றவை சில.
இந்தப் பத்திரிகைகள் பலவற்றில் மொழி உணர்வை ஊக்கப்படுத்தும் வகையில் மேற்கொண்ட பணிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். அதேசமயம் , பெரும்பாலான பத்திரிகைகளின் மொழிநடை மனதிற்கு உகந்ததாகவும் இல்லை என்கிறார் . வடமொழி கலந்து ஒரு மணிப்பிரவாளமான நடையே மிகுந்திருந்திருக்கிறது.
உதாரணமாக, தனது பத்திரிகை ‘நல்ல தெளிவான செந்தமிழ் நடையில் அமைந்தது’ என்கின்ற ஆசிரியர் ஒருவரின் பத்திரிகை குறிப்பை பாருங்கள்!
“இந்த லோகோபகாரி என்னும் பத்திரிகை யாதொரு இலக்கணப் பிழையுமின்றி நல்ல தெளிவான செந்தமிழ்நடையில் ஒரு அக்ஷரமேனும் பயனற்றதாயிராமல் அர்த்த புஷ்டியும் ஜனங்களுக்கு அவசியமான விஷயங்களும் இராஜாங்க சமாச்சாரங்களே முக்கியமாயிருத்தல் பெற்றதாயும்........” இதுதான் அவர்களது செந்தமிழ் நடை போலும். பிறமொழிச் சொற்கள் மிகுந்த அளவில் பயன்படுத்தப் பட்டிருப்பதாய்க் குறிப்பிடுகிறார்.
சிவில், கிரிமினல், புரப்ரைட்டர், இங்கிலீஷ் கவர்மெண்டு, யூனிவர்சிட்டி, டிஸ்டிரிக்ட் போர்டு, கான்பரன்ஸ் போன்ற ஆங்கிலச் சொற்களும்;
லௌகீகயுக்தி, சம்பாஷனை, பாஷா ஞானம், விஷயங்கள், விவகார ஞானம், ஜொலிப்பு, அக்ஷரம், ஜனங்கள்,அர்த்த புஷ்டி, சமாச்சாரங்கள், இராஜாங்கம் விஞ்ஞாபனம், சம்பவம் போன்ற வடமொழிச் சொற்களும்;
பத்திராதிபர் அண்டு ரைட்டர் என்று இரண்டும் கலந்தும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்கிறார்.
பேச்சுமொழிச் சொற்கள் பரவலாக கையாளப்பட்டிருக்கின்றன. பொதுவாக சொல்ல வேண்டுமானால், இந்தப் பத்திரிகைகள் இலக்கண மரபு, வாக்கிய அமைப்பின் முக்கியத்துவங்கள், நெறிகள், பிறமொழிச் சொற்களை தமிழ்ப்படுத்தி பயன்படுத்துதல் முதலியவற்றை அதிகம் நினைத்துப் பார்த்ததில்லை என்றும் பதிவு செய்கிறார்.
இது போன்ற ஒரு புத்தகத்தை எழுத மிகுந்த ஆராய்ச்சியும் பொறுமையும் வேண்டும். இதன் ஆசிரியர் அமரர் திரு இளங்கோவன் நம் பாராட்டுக்குரியவர். இதழியல் ஆர்வலர்களுக்கு இந்த நூல் ஒரு ஆவணமாக இருக்கும்.
இந்தத் தொகுப்பில் 1909வரையிலான இதழ்களைப் பற்றிய விவரங்களே தொகுக்கப்பட்டுள்ளன. இந்த மணிப்பிரவாளநடை மாறி, தமிழ்ச் சொற்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது, மணிக்கொடிக் காலம் தொட்டே எனலாம்.
இந்த நூல் வெளி வந்த காலகட்டமான 1979ல் ‘தற்கால இதழியலின் சீரழிவு என்று சமூகப் பொறுப்பற்று வந்த எழுத்துக்களைச் சாடவும் செய்கிறார் ஆசிரியர். நியூவேவ் கதைகள், கதைகளுக்கு கவர்ச்சியான படங்கள். உணர்வுகளில் விளையாடி சராசரி வாசகன் ரசனையை மலினப்படுத்திய காலகட்டம் அது.
இப்போதைய இதழ்கள் எப்படி இருக்கின்றன என்ற கேள்வி வருகிறது.
பிடிவாதமாக, தரத்தையும் கண்ணியத்தையும் இலக்கிய உணர்வையுயும் பேணும் பத்திரிகைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளன. அரசியல் மற்றும் இஸங்களோடு குலவும் சார்புகளே தென்படுகின்றன.

Leave a comment
Upload