உரையாடும் வகுப்பறை
ஆசிரியர் : சு. உமாமகேஸ்வரி
ஒரு ஆசிரியர் வெளி வேலைக் காரணமாக அனுமதி பெற்று தாமதமாக பத்து மணிக்கு பள்ளிக்கு செல்ல மின்சார ரயிலில் ஏறுவதற்கு ரயில் நிலையம் வருகிறார். அப்போது பள்ளிச் சீருடை அணிந்த பதின் வயது பெண்கள் பாலிடெக்னிக் படிக்கும் பையன்களுடன் நின்று பேசிக் கொண்டிருப்பத்தை பார்த்து, "யாரு ம்மா நீங்க ? பள்ளிக்கூடம் போகாம இங்க என்ன செய்யுறீங்க?" என்று கேட்கிறார், அவரை கண்டு பயந்து போன பெண்கள், அவர் தலை மறைந்ததும் மீண்டும் வந்து பையன்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். இதை பார்த்த அந்த ஆசிரியர் கோபம் கொண்டு ரயில்வே போலீஸிடம் புகார் அளிக்கிறார். புகாரை ஏற்க மறுக்கும் போலீஸிடம், "உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தானே தினமும் பள்ளிக்கு அனுப்புகிறீர்கள், அவர்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் அப்போதும் இப்படித்தான் பார்த்துக் கொண்டு சும்மா இருந்து விடுவீர்களா ?" என்று ஆவேசமாக சண்டையிட்டு அந்த பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்.
நடந்த களேபரத்தில் பள்ளிக்கு போய் சேர பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகிவிட, அரைநாள் விடுப்பாகி விடுகிறது. ஆனால் இந்த சம்பவத்தை குறித்து அந்த ஆசிரியை தன்னுடைய மாணவிகளிடம் பேசுகிறார். எதைச் செய்யலாம், எதையெல்லாம் செய்யக் கூடாது என்று மாணவிகளுக்கு கற்பிக்க அவர்களுடன் உரையாட வேண்டியது அவசியம் என்பதை உணர்கிறார் அந்த ஆசிரியர், இப்படி உரையாடல்களால் நிறைந்திருக்கும் அந்த வகுப்பறையை மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. அந்த ஆசிரியர் தான் உமா மகேஸ்வரி அவர்கள், அரசியல் பேசுவோம் அத்தியாயத்தில் வரும் சம்பவம் தான் நான் மேற்சொன்னது. "மிஸ் ஸ்கூல் புல்லா உங்களை தேடினேன் மிஸ், நீங்க ஏன் எங்க க்ளாசுக்கு சொல்லி தர வரலை ?" என்று குழந்தைகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு அன்பான ஆசிரியை தான் உமா அவர்கள். கல்வி சார்ந்த மாற்றத்தை ஒரே நாளில் செய்துவிட முடியாது. அது படிப்படியாக நிகழ வேண்டும். அதை நிகழ்த்த மாணவர்களிடம் கற்பித்தல் முறைகளில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தான் பணி செய்த பள்ளியில் 6 A2 வகுப்பில் தான் கொண்டு வந்த மாற்றங்கள் எப்படி குழந்தைகளை புத்துணர்வு கொள்ள செய்தது, அவர்களிடம் உரையாடி தான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தது என்ன, கற்றுக் கொண்டது என்ன என்பதை குறித்து விரிவாக எழுதுகிறார்.

ஜிஜுபாய் பதேக்கா என்ற ஆசிரியர் எழுதிய "பகல் கனவு" என்ற நூலை நாலு ஆண்டுகள் முன்பு வாசிக்க நேர்ந்தது. அந்த நூலில் நாம் காலம் காலமாக கற்பித்து வந்த நடைமுறைகளை மாற்றி புதிய முறைகளை முயற்சி செய்வார் ஆசிரியர், முதலில் கடினமாக தோன்றினாலும் அது மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக அமையும். கல்வியாளர் ச. மாடசாமியின் நூல்களிலும் இது போன்ற புதுமைகளை கண்டிருக்கிறேன், அவரின் அணிந்துரையுடன் தொடங்கும் இந்த நூலிலும் உமா அவர்கள் தனது வகுப்பான ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் செய்த மாற்றங்களையும் அந்த மாற்றங்களால் மாணவிகளிடத்தில் ஏற்பட்ட மலர்ச்சியையும் வளர்ச்சியையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
என்னுடைய இரண்டு குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவதே எனக்கு பெரிய சவாலாக தோன்ற, இந்த ஆசிரியர்களுக்கு இத்தனை குழந்தைகளை வைத்துக் கொண்டு சலிப்பில்லாமல் வகுப்பை கொண்டு செல்ல பல யுக்திகள் தேவைப்படுகின்றன. எப்படி வழிமுறைகளை மாற்றி அமைத்தாலும் மாணவிகள் சிக்கலுக்குள்ளாகும் இடங்களையும் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர் உமா. தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவிகள், திடீரென்று ஆங்கில வழிக் கல்விக்கு மாற்றப்படும் போது அவர்களுக்கு எழுதுவதில் சிக்கல் ஏற்படுகிறது. புது விஷயங்களை அவர்களால் கற்றுக் கொள்ள முடிகிறது என்றாலும் எழுதும் போது ஆங்கிலத்தில் எழுத சிரமப் படுகிறார்கள், அவர்களால் மெதுவாய் தான் கற்றுக் கொள்ள இயலும் என்பதை நாம் புரிந்து கொண்டு அவர்களுடன் பயணிக்க வேண்டும் அல்லது தாய்வழியிலேயே கற்றுக் கொள்ள அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் கூறுகிறார் உமா அவர்கள்.
அறிவியல் வகுப்பில் பாடத்தில் உள்ள தலைப்புகளை மாணவிகளுக்கே பிரித்துக் கொடுத்து அவர்களை வகுப்பெடுக்க வைத்த போது இவரே எதிர்பாராத வண்ணம், அனைத்து மாணவிகளும் மிகச் சிறப்பாக கற்பித்திருக்கிறார்கள். அதே போல பாட புத்தகம் தாண்டிய வாசிப்பின் அவசியத்தைச் சொல்லி, நூல்களை கொடுத்து வாசிக்க வைக்கிறார். அப்படி தாங்களே தன்னுடைய நண்பர்களின் உதவி கொண்டு அமைத்த வகுப்பறை நூலகத்தை குறித்தும் அதிலிருந்து புத்தங்களை ஆர்வமாய் எடுத்து படித்த தன்னுடைய மாணவர்களை குறித்தும் பெருமையாய் எழுதுகிறார், தற்போது வகுப்பறைக்குள் நூலகம் நடைமுறை படுத்தப்பட்டு விட்டது என்றாலும் அது இப்படி ஊக்கம் மிகுந்த ஆசிரியர்களால் தான் சாத்தியமாகி இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நூலக வாசிப்பினால் பல மாணவிகளின் தனித்திறன்களை அறிந்து கொண்டதையும், அவர்களை ஊக்கப்படுத்தி அடுத்த நிலைக்கு கொண்டு சென்றதையும் புகைப்படங்களுடன் பார்க்கும் எவருக்குமே ஒரு உத்வேகம் தோன்றிவிடும் என்பதில் ஐயமில்லை. உயிரோட்டமான உரையாடல்களே ஒரு மாணவரின் இறுக்கங்களை தளர்த்தி, இயல்பான கற்றலுக்கு வழி செய்கிறது என்பதை நிரூபிக்கிறது இந்த நூல். இவர் போன்ற நல்லாசிரியர்களால் தான் மாணவர்களுக்கு பல கவனச் சிதறல்கள் இருக்கும் போதும் தொடர்ந்து படிக்கிறார்கள். இவரது நற்பணி தொடர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன், செழுமையான கல்விச் சிந்தனைகளை விதைக்கும் பல ஆசிரியர்களை உமா அவர்கள் உருவாக்குவார் என்று நம்புகிறேன். பெற்றோரும், மாணவர்களும், ஆசிரியர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூலிது.
பதிப்பகம் : நாற்கரம்
பக்கங்கள் : 100
இந்துமதி கணேஷ்

Leave a comment
Upload